வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (16/05/2017)

கடைசி தொடர்பு:12:21 (16/05/2017)

ஓ.பி.எஸ் பெயரில் 256 நற்பணி மன்றங்கள்!

ஓ பி எஸ் அணியில் இருக்கும் மூத்த தலைவர் மதுசூதனன்

சென்னையில் அச்சகம் வைத்திருப்பவர்களுக்கு ஆர்.கே.நகர்த் தொகுதியில் இருந்து சில நாள்களாகவே அதிக அளவு ஆர்டர் குவிந்துகொண்டிருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை படிவம், உறுப்பினர் அடையாள அட்டை போன்றவைகளை அச்சகங்களில் வேகமாகத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் வட சென்னை மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியிருக்கிறார். ராஜேஷிடம் கேட்டபோது, "அம்மாவின் பெயரால் அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் நற்பணி மன்றங்களைத் தொடங்குகிறோம். இதற்கான விதையைப் போட்டவர் அவைத்தலைவர் மதுசூதனன். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் மன்றங்களைத் திறந்துவைக்கிறார்கள்.

ஆர்.கே.நகர்த் தொகுதியைப் பொறுத்தவரையில் மொத்தம் 256 பாகம் இருக்கிறது. அதாவது, வாக்குச்சாவடி கணக்கில் சொன்னால், 800 வாக்காளர் முதல் 1,200 வாக்காளர் வரையில் உள்ள இடம் ஒரு பாகம் ஆகும். நாங்கள் ஒரு பாகத்துக்கு ஒரு மன்றம் என்ற கணக்கில், 256 மன்றங்களைத் தொடங்குகிறோம். அதேபோல், இரண்டு பாகத்துக்குப் பொதுவாக ஒரு மாலை நேர இலவசக் கல்வி மையம் ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம். முதற்கட்டமாக ஆர்.கே.நகர்த் தொகுதி 42-வது வார்டு வடக்கில் 13 மன்றங்களும், தெற்கில் 14 மன்றங்களும் ஒரேநாளில் திறந்துவைக்கப்படுகிறது. குடியிருந்த கோயில் அம்மா ஓ.பி.எஸ் நற்பணி மன்றம், நித்யதான லட்சுமி அம்மா ஓ.பி.எஸ் நற்பணி மன்றம், கல்விக் களஞ்சியம் அம்மா ஓ.பி.எஸ் நற்பணி மன்றம், கருணைத் தாய் அம்மா ஓ.பி.எஸ் நற்பணி மன்றம், அமுதசுரபி அம்மா ஓ.பி.எஸ் நற்பணி மன்றம் என 256 மன்றங்களின் பெயர்களும் அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

இதுகுறித்து மதுசூதனனிடம் கேட்டபோது, "புரட்சித்தலைவர் காலத்திலேயும் சரி, அம்மா காலத்திலேயும் சரி... எப்பவுமே மன்றத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்காங்க. மன்றம் என்பது ஓர் அரசியல் கட்சிக்கு முதுகெலும்பு மாதிரி. இள ரத்தங்கள் அங்கிருந்துதான் புறப்படும். மன்றத்துல சேர பதினெட்டு வயசுமுதல் முப்பத்தைந்து வயசுவரைதான் அனுமதிச்சிருக்கோம். என்னை மாதிரி ஆளுங்களுக்கோ, ஐம்பதைத் தொட்டவங்களுக்கோ அங்கே வேலை இல்லை. மன்றத்தின் நற்பணிகள் மூலமாகக் கட்சியை இன்னும் வலிமையா வளர்க்கணும், நாலு பேருக்கு சர்வீஸ் பண்ற மனநிலையை மன்றத்து உறுப்பினர்களுக்கு உருவாக்கணும். இந்த மன்றத்து தம்பிங்கதான் நாளைக்குத் தேர்தல் வரும்போது வாக்குகளைச் சிந்தாமல் வாங்கிக் கொடுக்குறவங்க. நானே ஒரு காலத்துல அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற செகரட்டரியா இருந்தவன்தானே" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்