சிபிஐ சோதனை, சிதம்பரத்தின் நன்மதிப்பைச் சீர்குலைக்கும் முயற்சி: திருநாவுக்கரசர்

இன்று காலை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றது. 'இந்தச் செயல், சிதம்பரத்தின் நன்மதிப்பைக் குலைக்கும் முயற்சி' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்


ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சர் பதவியில் இருந்தபோது, மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான எப்.ஐ.பி.பி, தனியார் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக, சிபிஐ இந்தச் சோதனையை நடத்திவருகிறது. 

இந்நிலையில், சோதனை நடவடிக்கைகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது... ‘காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் வீட்டிலும் அலுவலகத்திலும் மத்திய புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் சிதம்பரம் கடுமையாக விமர்சித்து வந்ததைச் சகித்துக்கொள்ள முடியாத நிலையில், அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்நிலையில், பொதுவாழ்க்கையில் நீண்டகாலமாகச் செயல்பட்டுவரும் சிதம்பரம் அவர்களின் நன்மதிப்பைச் சிதைக்கும் முயற்சியாக, மத்திய பா.ஜ.க. அரசு இந்தச் சோதனையை நடத்தியிருக்கிறது. பா.ஜ.க-வின் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள, காங்கிரஸ் கட்சி என்றுமே தயார் நிலையில் இருக்கிறது. இதன்மூலம், காங்கிரஸ் கட்சியை அடக்கி விடலாம் என நினைக்கும் பா.ஜ.க-வின் கனவு பலிக்காது. இத்தகைய நடவடிக்கைகள்மூலம் பா.ஜ.க-வை விமர்சித்துவரும் சிதம்பரத்தின் செயல்பாடுகளை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பா.ஜ.க-வின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சிதம்பரம் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!