வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (16/05/2017)

கடைசி தொடர்பு:13:34 (16/05/2017)

1,088 மதிப்பெண் எடுத்தும் தற்கொலை மனோபாவம் ஏன்?

'தேர்வில் பாஸ் ஆகிறார்களோ இல்லையோ ஏதாவது செய்து கொள்வார்களோ' என பதைபதைப்பில் இருக்கிறார்கள் பெற்றோர். தேர்வில் தோல்வியடைபவர்கள்தான் தற்கொலை முடிவுக்குத் துணிகிறார்கள் என்றால், ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை

கோவையை அடுத்த மயிலேறிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பழனிச்சாமி பணிபுரியும் பள்ளியிலேயே அவரது மகள் திவ்யா என்கிற தாமரைச்செல்வியும் பிளஸ் டூ படித்து வந்தார்.  தேர்வில் 1,150 மதிப்பெண்ணுக்கு மேல் பெற வேண்டுமென்ற நோக்கில் திவ்யா தன்னை தயார்ப்படுத்தி இருந்தார். ஆனால், தேர்வில் திவ்யாவுக்கு 1.088 மதிப்பெண்களே கிடைத்தது. அவரது தோழிகள் பலர் 1,150 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தனர். இதனால், மன வருத்தத்துடன் இருந்த திவ்யா இரு நாட்களாக யாருடனும் சரியாகப் பேசவில்லை. பெற்றோர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், தாயார் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகளை இழந்த பெற்றோர், கதறி அழுதது  அக்கம்பக்கத்தினரை  கண்கலங்க செய்தது. 

தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலும் சாதனைகள் படைப்பவர்களுக்கு மத்தியில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத காரணத்தினால் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது, கோவையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய மனநிலைக்கு என்ன காரணம்? 

மன அழுத்தம் ஏற்பட பல சமூக காரணிகள் இருக்கின்றன. நெருங்கியவர்கள் இறந்து போவது, காதலில் தோல்வி, உடல் கோளாறு, தேர்வில் தோல்வி. இன்னும் சிலரோ அற்ப காரணங்களுக்காக கூட தற்கொலை செய்து கொள்வதாக மனோதத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். 

''தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில் மாணவ- மாணவிகள் ஒருவித அழுத்தத்தில் இருக்க வைப்பது நமது கல்வி அமைப்பு கண்ட தோல்வி. நாள் நெருங்க நெருங்க அவர்களுக்குள் பதற்றமும் அதிகரித்து விடுகிறது. ஏனென்றால், இங்கே மதிப்பெண்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட விரும்பிய மேற்கல்வி படிக்க முடியாத வகையில், கல்வி அமைப்பு இருக்கிறது. இதனால்தான், மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையாகத் தெரிகிறது. வேறு எந்த விஷயமும் அவர்களது கண்களுக்குத் தெரிவதில்லை. 

இந்த மாணவியைப் பொறுத்தவரை, அவரது தோழிகள் எதிர்பார்த்தது போல 1,150 மதிப்பெண் வாங்கியிருப்பது நிச்சயம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இது அவருக்கு தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது.. அந்த நேரத்தில் சக தோழிகள் முன்னால் தான் தோற்றுவிட்டது போன்ற உணர்வு மேலிடும். சமூகத்தின் முன் தான் அவமானப்பட்டு விட்டதாக உணருவார்கள். தன்மானக் குறைவாக, கௌரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்வார்கள். நாம் இனி வாழக் கூடாது என்ற எண்ணம் தலைத் தூக்கும்போது, பெற்றோரை பற்றியோ உடன் பிறந்தோரை பற்றியோ கவலைப் படமாட்டார்கள். சுயநலம் மட்டுமே மனதுக்குள்  எழுந்து நிற்கும். இதுபோன்ற மனநிலைதான் தற்கொலை முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

இப்படியான மனநிலை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுவதற்கு பள்ளிகளும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கின்றன. பள்ளியில் ஒரு விழா நடந்தால் கூட, தங்கள் பள்ளியில் படித்து பெரிய நிறுவனங்களில் தலைவராக இருப்பவர்களையோ பொறுப்பில் இருப்பவர்களையோதான் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். அதே பள்ளியில் படித்து, மெக்கானிக் செட் வைத்து நல்ல உயர்ந்த நிலையில் இருக்கும் தொழில் முனைவர்களை அடையாளம் காட்டப் பள்ளிகள் முன்வருவதில்லை. நல்ல படிப்பு படித்து நிறுவனங்களில் உயர்ந்த நிலையில் இருப்பது மட்டுமே வெற்றி அல்லவே. தொழில்முனைவராகி நான்கு பேருக்கு வேலை அளிப்பதும், வெற்றிதான் என்பதை மாணவ - மாணவிகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் உணர்வார்கள்.  

அன்பு, அரவணைப்பு, ஆசையுடன் அணுகுதல் போன்றவை மனித உயிர்களிடத்தில் வாழ்வுணர்ச்சியை தூண்டக் கூடியவை. தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில், மகனோ... மகளோ குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தால், திட்டுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மனக் கவலையில் இருக்கும் அவரை உற்சாகப்படுத்த முயல வேண்டும். பிடித்த உணவினை செய்து கொடுத்து,  சினிமா, ஷாப்பிங் என எங்கேயாவது அழைத்து சென்று மகிழ்ச்சியுடன் வைத்திருக்க பெற்றோர் முயல வேண்டும். இந்த சமயங்களில் அவர்களைத் தனியாக விடவேக் கூடாது. கோவை மாணவியின் தற்கொலைக்கு தனிமையும் ஒரு காரணமாகியிருக்கிறது. அவரது தாயார் பக்கத்து வீட்டுக்கு சென்ற சமயத்தில்தான் தற்கொலை செய்திருக்கிறார். தேர்வில் தோல்வியுற்றாலோ அல்லது குறைவான மதிப்பெண் பெற்று மகனோ மகளோ... வருத்தத்துடன் இருந்தால், ஒரு வார காலத்துக்கு அவர்களை தனிமையில் இருக்க விடக்கூடாது. நாளாக நாளாக  தற்கொலை எண்ணம் மறைந்துவிடும்'' என்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்