வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (16/05/2017)

கடைசி தொடர்பு:15:59 (16/05/2017)

பா.ஜ.கவிற்கு ப.சிதம்பரம் ஓர் ஆளே இல்லை..! - சி.பி.ஐ ரெய்டு குறித்து ஹெச்.ராஜா விளக்கம்..!

பா.ஜ.க அரசிற்கு ப.சிதம்பரம் ஓர் ஆளே இல்லை என்று பா.ஜ.கவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 


முன்னாள் நிதிஅமைச்சர் மற்றும் காங்கிஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சி.பி.ஐயின் இந்தச் சோதனைக்குப் பா.ஜ.க அரசுதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சோதனை குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நமது நிருபருக்கு அளித்துள்ள பதிலில், 'உறுதியான தகவல் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள்.

ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் 14 நாடுகளில் முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போதெல்லாம் வருமானவரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபடவில்லை. வாசன் ஐ கேர் உள்ளிட்ட பினாமி நிறுவனங்கள் இருக்கின்றன. அரசியல்வாதியாக ப.சிதம்பரம் பா.ஜ.கவுக்கு ஒரு பொருட்டே அல்ல. காரைக்குடி எம்.எல்.ஏ ராமசாமி சொல்லுவது போல் இவர், பா.ஜ.கவுக்குப் பதிலடிகொடுக்கக் கூடியவர் என்றால் பண மதிப்பு நீக்கம் குறித்த விவாதம் ராஜசபாவில் வந்தபோது இவர்கள் கட்சி ப.சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனந்த் சர்மா மற்றும் மன்மோகன்சிங் தான் பேசினார்கள்.

பதிலடிகொடுக்ககூடியவர் என்றால் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். எனக்கு தெரிந்து கடந்த ஆறு ஏழு மாதங்களாக சிதம்பரம் ராஜசபாவில் பேசினாரோ இல்லையோ இவருடைய மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு நோட்டீஸ் வரும்பொதெல்லாம் மறுப்பு அறிக்கை விடுகிறார். சிதம்பரம் எங்களுக்கு ஓர் ஆளே கிடையாது. இவர் வீட்டில் மட்டுமல்ல ரெய்டு. 900கோடி ஊழல் வழக்கில் உள்ள லல்லு பிரசாத் வீட்டிலும் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துகிறார்கள். ஆகையால் வருமானவரித்துறையினர் கடமையைச் செய்கிறார்கள்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க