'நீ நேசிக்கும் கட்சி உன்னை ஏமாற்றுகிறது' அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களைக் குறிவைத்து பேனர்

போக்குவரத்துக் கழக தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையான 12,860 கோடி ரூபாயில் அரசுப் போக்குவரத்துக் கழகம் 'கை' வைத்துவிட்டது. இதைக் கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவையில்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவையில்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை, ஒரே ஒரு தனியார் பஸ் சேவை மட்டுமே இருந்துவந்தது. தற்போது, டூரிஸ்ட் பஸ்கள் சென்னையில் சில வழித்தடங்களுக்கு இயக்கப்படுகின்றன. அவைகளில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறுவழியின்றி பொதுமக்கள் பயணித்துவருகின்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பெரும்பாலான ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் வசூல்வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் புள்ளி விவரத்துடன் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில், அரசு போக்குவரத்துக் கழகம், தொழிலாளியின் சேமிப்புப் பணத்தைச் செலவு செய்த தொகை 6,400 கோடி. ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு வழங்க வேண்டிய தொகை 1,480 கோடி. பணியிலுள்ள தொழிலாளிக்குத் தர வேண்டிய பாக்கித் தொகை 250 கோடி. தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்துவிட்டு செலுத்தாத தொகை 4,730 கோடி என மொத்தம் 12,860 கோடி ரூபாய் என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, அரசிடம் நாங்கள் கேட்பது என்ற தலைப்பில், 'ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு வழங்க வேண்டிய பாக்கி (இன்று வரை) 1,750 கோடி. பணியிலுள்ள தொழிலாளிக்கு தர வேண்டிய பாக்கி 250 கோடி. வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகை 1,600 கோடி. புதிய சம்பளத்திற்காக ஒதுக்க வேண்டிய தொகை 1,400 கோடி என நாங்கள் 5,000 கோடி ரூபாய் மட்டுமே கேட்கிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பட்டியலில் கண்துடைப்பாக வெறும் 750 கோடி ரூபாயை மட்டுமே வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 'அண்ணா தொழிற்சங்க தொழிலாளியே, நீ நேசிக்கும் கட்சி உன்னை ஏமாற்றுகிறது. எனவே, வேலை நிறுத்தமே தீர்வு' என்றும் சொல்லப்பட்டுள்ளது.  


 இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "எங்களது வேலைநிறுத்தப்போராட்டம் வெற்றிபெற்று வருகிறது. கோரிக்கைகளுக்கு அமைச்சர்  செவிசாய்க்காமல் மீண்டும் எங்களை வேலைக்கு அழைப்பது கேலிக்கூத்தாகும். விதிகளை மீறி அரசு போக்குவரத்துக் கழகம் செயல்படுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம்"என்றனர். 
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், "பஸ் சேவையில் பாதிப்பு இல்லாதவகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தனியார் பஸ் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணம் குறித்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. பஸ் இயக்கத்தைக் கண்காணிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்"என்றார். 

பயணிகள் குமுறல்

அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் ஸ்டிரைக்கால் பஸ் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட  பஸ்களின் படிகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தை உணராமல் சிலர் பயணிக்கின்றனர். அதிலும் ஏற பலர் முயற்சித்து தோற்றுப் போயினர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அனுபவமில்லாத டிரைவர்களால் ஆங்காங்கே விபத்துகள் நிகழ்ந்தன. திருப்பூரில் தற்காலிக டிரைவர் இயக்கிய பஸ் மோதி பெண் பலியானார். காலதாமதப்படுத்தாமல் போக்குவரத்துக் கழக விவகாரத்தில் அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!