வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (16/05/2017)

கடைசி தொடர்பு:17:31 (16/05/2017)

‘ஓபன் பாராக’ மாறிய புதிய மேம்பாலம்! - கோவை குடிமன்களின் அட்டூழியம்!

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை  இரவு நேர மது அருந்தும் இடமாக மாற்றி அட்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்கள் கோவை ‘குடி’ மகன்கள். 

Coimbature atrocity

கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 160 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பார்க் கேட் பகுதியில் துவங்கி ஜி.பி பகுதிவரை முதல் அடுக்கு மேம்பாலத்திற்கான  கட்டுமானப் பணிகள் பெருமளவு முடிந்துவிட்ட நிலையில், இப்போது 100 அடி சாலையில் இரண்டாம் அடுக்கு மேம்பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெருமளவு கட்டி முடிக்கப்பட்ட முதல் அடுக்கு பாலத்தை ‘கோவை குடிமகன்கள்’ இரவு நேரத்தில் ஓபன் பார்களாக உபயோகித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

“சாலையோரம் சாராயக்கடைகள் இருந்தால் அதிகமான விபத்துகள் ஏற்படுவதோடு, பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தானே தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நீதிமன்றம் அகற்றச் சொன்னது. ஆனால், நம்ம குடிகாரக் குப்பனுங்க அடங்கவே மாட்டாங்க. எதை செய்ய வேண்டாம்னு சொல்றாங்களோ.. எந்த இடத்துல செய்ய வேண்டாம்னு சொல்றாங்களோ அதை அந்த இடத்துலதான் செய்வானுங்க. பொழுது சாஞ்சா போதும் கும்பல் கும்பலா வந்து பாலத்துக்கு மேல போய் உட்காந்துகிட்டு சாவகாசமா சரக்கடிக்கிறாய்ங்க. குடிச்சிட்டு பாட்டிலை அப்படியே ரோட்டுலயே போட்டுட்டு போயிடுறாங்க. அது புதுப்பாலமா இல்லை ஓபன் பாரானு சந்தேகமா இருக்கு அந்த அளவுக்குச் சாராய பாட்டில்கள் குவிஞ்சி கிடக்கு. அரசாங்கம் என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும்  நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க என்று  தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.!