வெளியிடப்பட்ட நேரம்: 20:36 (16/05/2017)

கடைசி தொடர்பு:10:48 (17/05/2017)

ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தியதற்கு இதுதான் காரணம் - சிபிஐ இயக்குநர் விளக்கம்..!

'சட்டரீதியிலான முறையிலேயே ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது' என்று சிபிஐ இணை இயக்குநர் வினித் விநாயக் தெரிவித்துள்ளார். 


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது. சுமார் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனைக்கு, காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ இணை இயக்குநர், 'ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் உரிமம், வேறு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது, ஐ.என்.எஸ் நிறுவனத்தின் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஐ.என்.எக்ஸ் மற்றும் டைரக்ட் நிறுவனங்களுக்கு இடையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. சென்னை, மும்பை, குர்கான் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில், சட்டரீதியிலான முறையிலேயே சோதனை நடைபெற்றது. ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை நடைபெறும்' என்று தெரிவித்தனர்.