வெளியிடப்பட்ட நேரம்: 22:26 (16/05/2017)

கடைசி தொடர்பு:22:26 (16/05/2017)

'எல்லாம் அரசியல்... சட்ட ரீதியில் சந்திப்பேன்..!' - கார்த்தி சிதம்பரம் சவால்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் அலுவலகங்களிலிருந்து கணினி ஹார்ட்டிஸ்க் மற்றும் ஆவணங்கள் சிலவற்றை சி.பி.ஐ பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பத்துப்பேர் கொண்ட சி.பி.ஐ குழு காலை முதலே அதிரடி சோதனை செய்தது. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான எப்.ஐ.பி.பி, தனியார் நிறுவனத்துக்குச் சட்டவிரோதமாக ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக, சி.பி.ஐ இந்தச் சோதனையை நடத்தியது. சோதனைக்கு இடையில் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று இரவு நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், 'நான் எந்த தவறும் செய்தது கிடையாது. என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. சி.பி.ஐ ரெய்டு அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே. அனைத்தையும் சட்ட ரீதியாக சந்திப்பேன்' என்று கூறியுள்ளார்.