வெளியிடப்பட்ட நேரம்: 04:20 (17/05/2017)

கடைசி தொடர்பு:12:40 (17/05/2017)

கீழடியில் அகழாய்வுப் பணியைப் பார்வையிட்ட சுப.வீரபாண்டியன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழாய்வு செய்த இடத்தை, இன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பார்வையிட்டார். அங்கிருந்த அகழாய்வு செய்த படங்களைப் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அவரிடம், அகழாய்வு குறித்து முறையிட்டனர்.

subavee

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுப.வீரபாண்டியன், 'தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மூடப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டின் ஆதிச்சநல்லூர் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. தமிழர்களின் அகழாய்வு மறைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சொந்த ஊரில் ஒன்பது ஆண்டுகளாக அகழாய்வு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே மூட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. இங்கு, நல்லதொரு வரலாற்றைக் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. ஆனால், மத்திய அரசாங்கம் இதில் மெத்தனம் காட்டுகிறது. தமிழர்கள் நாகரிகம் காக்கப் போராடுவது, கறுப்புக்கொடி காட்டுவது வழக்கம்தான். அதற்காக போராட்டக்காரர்களை பி.ஜே.பி-யினர் தாக்கியது தவறானது. 

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசே முழுக் காரணம். சி.பி.ஐ ரெய்டு என்பது தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. நடந்த சோதனைகளின் முடிவு இன்னும் தெரியவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை என்ன ஆனது. சேகர் ரெட்டி பிணையில் வெளியில் வந்துள்ளார். ராமமோகன் ராவ் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அரசியல் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழர்களின் கலாசாரம் காக்கப் போராடியவர்கள் மீது பா.ஜ.க-வினர் வன்முறையில் இறங்கினார்கள். அதில் எந்த வியப்பும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் இயக்கமே வன்முறையில் பிறந்து, வன்முறையில் வளர்ந்து, வன்முறையில் வாழ்ந்துகொண்டிருக்கிற இயக்கம். அந்த வன்முறைக்கெல்லாம் மக்கள் சரியான விடை சொல்வார்கள்', என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க