Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பாலியல் வழக்குகளை மொழிபெயர்த்துவிட்டு, கதறியிருக்கேன்!” - சைகை மொழியாளர் விஜயா பாஸ்கர்

விஜயா பாஸ்கர்

'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சைகை மொழி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார், விஜயா பாஸ்கர். 60 வயதை தொட்டிருக்கும் இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் வல்லவர். சைகை மொழியில் இந்த அளவுக்கு திறமையுடன் இருக்க, இவரது குடும்பப் பின்னணியும் ஒரு காரணம்.

''என்னோடு பிறந்த ஐந்து பேரில் இரண்டு பேருக்கு மட்டும்தான் பேச வரும். மத்தவங்களுக்கு பேசவும் வராது; காதும் கேட்காது. எங்க அப்பா, அம்மா பல டாக்டர்கள்கிட்டே காண்பிச்சும் எந்தப் பயனும் இல்லை. எத்தனை சிகிச்சை எடுத்தாலும் குணப்படுத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. அதற்குப் பிறகு, என் அக்கா, தம்பிகள் என்னையே அதிகம் நம்பி இருந்தாங்க. அவங்க எங்கே போகணும்னாலும் நானும் அவங்களோடு இருக்கணும்னு நினைப்பாங்க. அவங்களுக்கு எல்லா விஷயத்தையும் புரியவைக்கிறது என்னால மட்டும்தான் முடியும்னு நினைச்சாங்க. ஒரு படத்துக்குப் போனாலும், ஒவ்வொரு சீனையும் அவங்களுக்கு விளக்கி சொல்லிட்டு இருப்பேன். என் கண் பார்ப்பதை கைகள் செய்து காண்பிச்சுட்டே இருக்கும். இப்படி சைகையின் மூலமா அவங்களுக்கு நிறைய விஷயங்களைப் புரியவெச்சேன். அப்படித்தான் சைகை மொழி என் கைவசமாச்சு. ஸ்கூல்ல படிக்கும்போதும் இப்படிப்பட்டவங்களை தேடிப்போய் உதவி பண்ற அளவுக்கு ஆர்வம் ஏற்பட்டுச்சு. அவங்களும் அவங்களைச் சார்ந்தவங்களும் என்னை நன்றியோடு வாழ்த்தியபோதுதான்  நான் ஒருவித சேவையைச் செய்துட்டு இருக்கேன்னு புரிய ஆரம்பிச்சுது. கல்லூரிப் படிப்பை முடிச்சதும் வாய் பேச, காது கேட்க இயலாதவங்களுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என சென்று பல வழக்குகளில் மொழிப்பெயர்ப்பாளராக இருந்திருக்கேன்'' என்று விஜயா பாஸ்கர் சொல்லும் ஒவ்வொரு வரியும் நெகிழவைக்கிறது.

தொடர்ந்து பலருக்கும் சைகை செய்து வந்ததால், ஒரு மாதம் கைகளைத் தூக்கவே முடியாத அளவுக்கு சிரமப்பட்டிருக்கிறார். சிகிச்சை எடுத்த ஒரு சில நாள்களுக்குள் மீண்டும் தன் பணியினைத் தொடர்ந்திருக்கிறார். தான் சந்தித்த துயரமான நேரங்களையும் மெல்லிய புன்னகையுடன் பகிர்கிறார்.

''ஸ்கூல், காலேஜ் என பல இடங்களில் பாதிப்பு உள்ளவர்களுடன் எந்தப் பாகுபாடும் இல்லாமல் பழகுவேன். தோள் மேல் கைப்போட்டு அவங்களை கூட்டிட்டுப் போறது, பக்கத்துல உட்கார்ந்து பேசுறது இப்படி பல நேரங்களில் நெருக்கமாக இருப்பேன். இதைப் பார்த்துட்டு நிறைய பேர், 'எப்பப் பாரு பசங்களோடயே சுத்திட்டு இருக்கா'னு பேசுவாங்க. அந்த மாதிரி நேரங்களில் தனிமையில் அழுதிருக்கேன். ஆரம்பத்தில் பயமும்  பதற்றமும் இருந்தாலும் போகப் போக  தெளிவாகிட்டேன். என் மனசுக்கு நெருக்கமான ஒரு சேவையா இது மாறிட்டதால் இன்னும் ஆர்வமாக ஈடுபட ஆரம்பிச்சேன். கல்யாணம் ஆனப் பிறகு இதனால் என்ன மாதிரி  பிரச்னைகள் வருமோனு ஒரு பக்கம் பயம் இருந்துச்சு. ஆனால், கடவுள் புண்ணியத்தில் எனக்கு அற்புதமான கணவர் கிடைச்சார். நான் செய்யும் பணியைப் பற்றி நல்லாப் புரிஞ்சிக்கிட்டார். சில நேரங்களில் இரவு வீட்டுக்கு வர தாமதம் ஏற்பட்டாலும், விஷயம் புரிஞ்சு நடந்துப்பார். அதனாலதான், என்னால் இந்தச் சேவையில் தொடர்ந்து ஈடுபட முடியுது'' என்கிற விஜயா பாஸ்கர் பல மொழிப்பெயர்ப்புகளுக்கு கட்டணம் வசூலிக்காமல், இலவசமாகவே உதவி வருகிறார்.

விஜயா பாஸ்கர்

 ''ஒருமுறை ஓர் ஏழை பெற்றோரின் மகளுக்கு பிரச்னை. அந்தப் பொண்ணுக்கு பேசவும் வராது, காதும் கேட்காது. பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்ட அவளால், என்ன நடந்ததென சொல்ல முடியலை. பொண்ணோட அப்பா அவளை ஆஸ்பத்திரிக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் கூட்டிக்கிட்டு அலைஞ்சுட்டு இருந்தார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அந்தப் பொண்ணுக்கிட்ட சைகை மூலமாக நடந்தை தெரிஞ்சுகிட்டு போலீசுக்குச் சொன்னேன். அப்புறம்தான் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க. நீதிமன்றங்களில் வெளிப்படையாக நடந்தவற்றை சொல்லும் சூழ்நிலை ஏற்படும். அங்கே இலைமறைக்காயாக எல்லாம் சொல்ல முடியாது. பாலியல் வழக்குகள் வரும்போது பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சொல்லும்போது எனக்கே கஷ்டமாக இருக்கும். அங்கே சொல்லும் நொடிகளில் அந்தக் கொடுமையின் வலியை உணர முடியும். சில வழக்குகளில் மொழிப்பெயர்ப்பு செய்துட்டு வீட்டுக்கு வந்ததும் ரொம்ப நேரம் விடாமல் அழுதிருக்கேன்'' என்கிற விஜயா பாஸ்கருக்கு இந்த சைகை மொழி பணியில் சில ஆறுதல்களும் கிடைக்கிறது.

'' 'மொழி' ஜோதிகா போன்று தமிழில் பல படங்களுக்கும், இந்தி போன்ற இதர மொழி படங்களுக்கும் சைகை மொழி கற்றுக்கொடுத்திருக்கேன். அப்படித்தான் அமிதாப் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் பழக்கமானாங்க. அவங்களோட முக்கியமான நிகழ்ச்சிகளில் என்னை மறக்காமல் கூப்பிடுவாங்க'' என்கிற விஜயா பாஸ்கர், ''பொது இடங்களில் நீங்கள் சந்திக்கும் இப்படிப்பட்டவங்களை புரிஞ்சுக்கிட்டு உங்களால் முடிஞ்ச உதவியைச் செய்யுங்க. இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்'' என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close