’ஒருநாள் நாடகம் முடிவுக்கு வந்தது’: கார்த்தி சிதம்பரம் | The Drama is over, says Karti chidambaram on CBI raids

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (17/05/2017)

கடைசி தொடர்பு:12:51 (17/05/2017)

’ஒருநாள் நாடகம் முடிவுக்கு வந்தது’: கார்த்தி சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இதை விமர்சிக்கும் வகையில், ‘நாடகம் முடிவுக்கு வந்தது’ என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பத்து பேர் கொண்ட சிபிஐ குழு, நேற்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டுவந்தனர். இதில், அவர்களது அலுவலகங்களிலிருந்து கணினி ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்கள் சிலவற்றை சிபிஐ பறிமுதல்செய்து, எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 


சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, எஃப்.ஐ.பி.பி.தனியார் நிறுவனம் ஒன்றுக்கு  சட்டவிரோதமாக ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக, சிபிஐ இந்தச் சோதனையை நடத்தியது. மேலும், கார்த்தி சிதம்பரத்திடம் சுமார் ஆறு மணி நேரமாக விசாரணையும் நடத்தப்பட்டது. தன்மீது எந்தத் தவறும் இல்லையென்றும், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையெனவும் கார்த்தி சிதம்பரம் நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், தன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சிபிஐ சோதனைகுறித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், ‘ஒரு நாள் நாடகம் முடிவுக்கு வந்தது’ என விமர்சிக்கும் வகையில் தெரிவித்திருந்தார்.