‘மோடியின் கோபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கொந்தளித்த அமைச்சர்

சசிகலா

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சரிபார்த்து வருகின்றனர். 'சேகர் ரெட்டி விவகாரத்தில் லஞ்சம் பெற்ற சிலரது பெயரை மட்டுமே, தலைமைச் செயலாளரின் பார்வைக்கு அனுப்பினோம். இன்னும் சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அது கடைசி ஆயுதமாக இருக்கும்' என அதிர வைக்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். 

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர். 'கே.பி.முனுசாமி என்ற ஒருவர் இருக்கும் வரையில் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை' என எடப்பாடி பழனிசாமி அணியினர் பேசி வருகின்றனர். 'சசிகலா குடும்பத்துடன் உறவு இல்லை என்று சொல்லிக் கொண்டு நாடகமாடுகின்றனர்' என வரிந்துகட்டுகிறது பன்னீர்செல்வம் அணி. "கடந்த சில நாள்களாக நடக்கும் விவகாரங்களால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் பன்னீர்செல்வம். தொடக்கம் முதலே மத்திய அரசிடம் நல்ல அணுகுமுறையில் இருந்து வருகிறார். அவர் எதிர்பார்த்தது போல மாநில அரசில் எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. கடந்த சில நாள்களாக, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு டெல்லி கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் ரசிக்கவில்லை. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, 'சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கக் கூடாது. பன்னீர்செல்வமே மக்கள் ஆதரவு பெற்றவர்' என வலியுறுத்தி வந்தனர்.

இதனை விரும்பாத பழனிசாமி அணியினர், பா.ஜ.க தலைமையிடம் மிகுந்த நெருக்கம் காட்டத் தொடங்கினர். 'பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவி கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். இனி அந்தப் பதவியும் அவருக்குக் கிடையாது. அவரோடு சென்றவர்களுக்கும் பதவி இல்லை' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டனர். கடந்த நான்கு மாதங்களாக கூட்டம் கூட்டுவது முதல் பொதுப் பிரசார மேடை வரையில் பன்னீர்செல்வம்தான் கைக்காசு போட்டு செலவு செய்து வருகிறார். 'இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிவிட்டதே' என்ற கவலைதான் அவரை வாட்டி வதைக்கிறது. இதுகுறித்து, டெல்லியில் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, 'இருவரும் இணக்கமாக இருந்து செயல்படுங்கள்' என ஒற்றை வார்த்தையோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் மனதளவில் இன்னும் நொந்து போய்விட்டார். டெல்லி கொடுத்த தைரியத்தில் தமிழக அமைச்சர்கள் வலம் வருகிறார்கள். 'மாநில சுயாட்சிக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துகிறார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு' என்ற குற்றச்சாட்டுகளைப் பற்றியெல்லாம் அரசில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

எடப்பாடி பழனிசாமி"டெல்லியைப் பொறுத்தவரையில், பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே தட்டில் வைத்துத்தான் பார்க்கிறார்கள். 'சசிகலா குடும்பத்தை வீழ்த்துவதற்கு இருவரும் போதும்' என்ற எண்ணத்தில் சில வேலைகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், பழனிசாமி அணியினர் சசிகலா குடும்பத்து உறவுகளிடம் நட்பு பாராட்டுவதாக, பா.ஜ.க நிர்வாகிகளிடம் புகார் கூறியது பன்னீர்செல்வம் அணி. இதைப் பற்றி அவர்கள் விசாரிக்கவும், 'நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் அவ்வாறு செயல்பட மாட்டோம்' என உறுதி அளித்த கொங்கு மண்டல சீனியர் அமைச்சர் ஒருவர், டெல்டா மாவட்டத்தில் இருக்கும் சசிகலா உறவினர் ஒருவரை அழைத்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில், 'கட்சியை வழிநடத்த வந்த சின்னம்மாவும் டி.டி.வியும் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பதவிக்கு வரக் கூடாது என்றுதான் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் வந்ததைக் கூட அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சி.எம் பதவிக்கு ஆசைப்பட்டபோதுதான் நெருக்கடி அதிகமானது. இப்போதும்  அவர்கள் கோரிக்கை ஒன்றுதான்.

சின்னம்மாவிடம் இருக்கும் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். அவரிடம் அந்தப் பதவி இருப்பதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஒருவேளை அவர் அந்தப் பதவியை விட்டு விலகினால், சீராய்வு மனுவின் மீது நல்ல தீர்ப்பு வரவும் வாய்ப்பு இருக்கிறது. சென்னை சிறைக்கு மாற்றும் கோரிக்கையும் நிறைவேறலாம். அவர் குடும்பத்தில் உள்ள சிலரை, தேசத்துக்கு விரோதமானவர்களாகத்தான் மோடி பார்க்கிறார். இதைப் புரிந்து கொண்டு ஒதுங்கியிருப்பது நல்லது. இல்லாவிட்டால், தொடர் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்' என விளக்கியிருக்கிறார். 'இதை சின்னம்மாவின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்' என உறுதியளித்தார் அந்த உறவினர். சசிகலாவிடம் இருக்கும் பொதுச் செயலாளர் பதவியை, அவரே ராஜினாமா செய்யட்டும் என எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக. 

" எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் மிக முக்கியமான ஆயுதமாக சேகர் ரெட்டி விவகாரத்தைப் பார்க்கிறது பா.ஜ.க. இதை வைத்துக் கொண்டே இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், இரண்டு அணிகளின் நிர்வாகிகளும் மோதுவதைக் கண்ட பா.ஜ.க நிர்வாகிகள், 'சேகர் ரெட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் ஒரு பகுதியைத்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தோம். இரண்டாம்கட்ட ஆவணத்தை வெளியிட வைத்துவிட வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளனர். இதனை இரண்டு அணிகளும் எதிர்பார்க்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் இந்தப் பஞ்சாயத்து நீண்டு கொண்டே போகும். அதன்பிறகு, அணிகளே இல்லாத அளவுக்கு அ.தி.மு.க மொத்தமாகக் கரைந்துவிடும்" என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!