வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (17/05/2017)

கடைசி தொடர்பு:13:05 (17/05/2017)

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறையின் அறிவுரை இதுதான்..!

'10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது' என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தனியார் பள்ளிகள், மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவர்களின் புகைப்படங்களையும் அவர்களது மதிப்பெண்களையும் விளம்பரத்துக்குப் பயன்படுத்திவருகின்றன. இந்த ஆண்டிலிருந்து ரேங்கிங் முறையை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. தற்போது, தனியார் பள்ளிகளுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'மாணவர்களின் நலன் கருதி அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் தனியார் பள்ளிகள் செயல்படக்கூடாது. ஒரு சில மாணவர்களின் புகைப்படம் அடங்கிய பதாகைகள், நாளிதழ்களின் விளம்பரங்களைத் தவிர்த்திட வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.