வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (17/05/2017)

கடைசி தொடர்பு:15:46 (17/05/2017)

``கையெழுத்துப் போட துணைவேந்தர் இல்லை’’ - தமிழகப் பல்கலைக்கழகங்களின் நிலை!

ஒரு நாட்டின் உயரிய கல்வி அமைப்பு என்பது பல்கலைக்கழகங்கள்தான். இவை, அந்தந்த மாநிலச் சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பு. அந்தப் பல்கலைக்கழகங்கள்தான் மாணவர்களின் கல்வித்திறனை வளர்ப்பதிலும் அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்கான மையமாகவும் இருக்கின்றன. இதில் அந்தந்தப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்களிப்பு அளப்பரிது. ஆனால், தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவை துணைவேந்தர்கள் இல்லாமல் பல மாதங்களாக இயங்கிவருகின்றன. இது மாணவர்களின் எதிர்கால வாழ்வையே அபாயகரமாக்கக்கூடிய செயல் என உணர்ந்தும் உயர்கல்வித் துறை வாய்மூடி மௌனமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான பல்கலைக்கழகமாக இருப்பது அண்ணா பல்கலைக்கழகம். இதன் அதிகாரத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 527 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் டிகிரி சான்றிதழ்களில் கையெழுத்திடுவது யார் என்ற குழப்பம் நிலவிவருகிறது. `நடக்கவிருக்கும் அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா, துணைவேந்தர் இல்லாமல் நடக்கக் கூடாது' என அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் சமீபத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர்.

என்ன ஆயிற்று தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறைக்கு? துணைவேந்தர்கள் எப்போதுதான் நியமிக்கப்படுவார்கள்? அவர்கள் உரிய காலத்தில் நியமிக்கப்படாததால் என்ன மாதிரியான இழப்புகளை மாணவர்களும் பல்கலைக்கழகங்களும் சந்திக்கின்றனர்? இதுகுறித்து, மூட்டா (மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், செட்டிநாடு அழகப்பா மற்றும் மதர் தெரேசா பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் கூட்டமைப்பு) மாநிலத் தலைவர் சுப்பாராஜிடம் பேசினேன்...

துணைவேந்தர்

``தமிழ்நாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள், உலகின் மிகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் விண்ணப்பித்தவுடன் வேலை கிடைத்த காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் உலகம் முழுக்கப் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாகப் பல தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அதில் சுணக்கம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் புகுந்துவிட்ட அரசியல்தான். பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள் இருந்தாலும் மெஜாரிட்டி உறுப்பினர்கள்... உயர்கல்வித் துறைச் செயலாளர், டெக்கனிக்கல் செயலாளர், லா செக்ரெட்ரி போன்றோரும் கல்வித் துறை இயக்குநர்கள் போன்ற அரசு உயர் அதிகாரிகள்தான். இவர்கள்தான் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவேண்டிய அவசியத்தை அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதில்லை.

ஒரு துணைவேந்தரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இதில் இரண்டரை ஆண்டுகள் முடிந்ததுமே அடுத்த துணைவேந்தர் யார் என்ற பட்டியலை தகுதியின் அடிப்படையில் தயாரித்து ஆளுநரிடம் அளிக்கவேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் முறையாகச் செய்திருந்தாலே இன்றைக்கு தமிழ்நாட்டின் மிக பாரம்பர்யமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லை என்ற அவலம் வந்திருக்காது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த புராசஸ் செய்ய நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது ஒரு சிண்டிகேட் மெம்பர் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பிரநிதிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் இந்த வேலையை முறையாகச் செய்யவில்லை?

துணைவேந்தர்

துணைவேந்தர் நியமனத்தில் இப்போது அரசியல் புகுந்துவிட்டதுதான் இந்தத் தேக்கத்துக்கு முக்கியமான காரணம். முன்பெல்லாம் தகுதியானவர்கள் துணைவேந்தர்களாக நியமனம் ஆனார்கள். ஆனால், இன்றைக்கு அதில் பணம், சாதி, அரசியல் தலையீடு அதிகமாகிவிட்டது. இதனால்தான் அங்கே ஊழலும் வேர் விட்டுவிட்டது. கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, இப்போது அவர் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையில் இருக்கிறார். இப்படிப்பட்ட செயல்பாடுகள் எப்படி நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும்?

துணைவேந்தர் என்பவர், பல்கலைக்கழகத்தின் அச்சாணி போன்றவர். அவர்தான் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்துக்கும் நிர்வாகச் செயல்பாடுகளுக்கும் பொறுப்பு. அப்படிப்பட்ட முக்கியமான பொறுப்புகளுக்கு தகுதியானவர்களை நியமிப்பதில் இவ்வளவு சுணக்கமும் பாரபட்சமும் இருப்பது, மாணவர்களின் எதிர்காலத்தைத்தான் பாதிக்கும். ஒரு மாணவனின் டிகிரி சான்றிதழில் கையெழுத்திடவேண்டியது துணைவேந்தர்தான். ஆனால், அவர் இல்லாதபோது கன்வீனியர் கமிட்டி கையெழுத்து போடலாமா எனக் கேள்வி எழுந்து, உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த அபூர்வாகூட கையெழுத்திட்டார். இது வெளிநாடுகளில் செல்லாது. அப்போது அங்கே போகும் மாணவர்கள், `நீங்கள் படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கையெழுத்து வாங்கி வாருங்கள்' என இழுத்தடிக்கப்படுவார்கள். இது மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடும் அபாயம் அல்லவா?

இதைத்தான் இப்போது தமிழக உயர்கல்வித் துறை செய்துவருகிறது. பள்ளிக் கல்வியின் ரேக்கிங் முறை வேண்டாம் எனப் பல காலமாகச் சொல்லிவந்ததை இப்போதுதான் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை  செயல்படுத்தியது. இதனால் அரசாங்கத்துக்கு நல்ல பேர். ஆனால், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாதது உள்பட பல கோரிக்கைகளோடு எங்கள் கூட்டமைப்பு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டும் அவர் இன்னும் எங்களை அழைக்கவில்லை. அவருக்கு இதன் முக்கியத்துவம் புரியவில்லை. திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாத வரை, கல்வியைச் சேவையாக நினைக்கும் துணைவேந்தர்கள் வராத உயர் கல்வித் துறையில் எந்தவித நல்ல முன்னேற்றங்களையும் கொண்டுவர முடியாது’’ என்கிறார் சுப்பாராஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்