Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அமெரிக்க ஐ.டி பணியும் வளைகுடா வீட்டு வேலையும் ஒன்றுதான்!''- வேதனைக் குரல் #ITLayoffs #ITCrisis

ஐ.டி ஊழியர்களால் சமூகத்தில் நடந்த மாற்றங்கள் ஏராளம். பிற துறைகளில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதே அதிகம் என்கிற நிலையில், ஐ.டி துறையில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் சர்வசாதாரணமாக வாங்கினர். பர்கர், பிட்சாவே உணவானது. துரித கதியே வாழ்க்கை என்றாகிப்போனது. மாணவர்களுக்கு இன்ஜினீயரிங் படிப்பு மீது இருந்த ஆர்வம் போய், ஐ.டி துறை சார்ந்த படிப்புகளைத் தேர்வுசெய்தனர். இந்தியர்களின் அமெரிக்கக் கனவை எளிதாக நனவாக்கிக்காட்டியதும் ஐ.டி துறைதான். பணம் கொழித்த இந்தத் துறையும் இப்போது சரிவைச் சந்திக்க, ஐ.டி ஊழியர்கள் ஆடிப்போயுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சம் ஐ.டி ஊழியர்கள் வேலை இழப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றனர்.

ஐ.டி.துறை

அமெரிக்காவில் ஐ.டி துறையில் பணிபுரிபவரிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத அவர் '`வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களைப்போலத்தான் நாங்களும். ஊர்லதான் பந்தாவா திரிய முடியும். இங்கே நாங்க அடிமைகள் மாதிரிதான்'' என்றார். அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசாவில் செல்லும் இந்தியர்கள் அங்கே வாழ்க்கையைத் தொடங்குவதே ஒரு சவால்தான். ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலர் சம்பளம். அப்பார்ட்மென்ட்டில் வீடு எடுத்து டி.வி, சோபா என ஒரு குடும்பம் செட்டிலாகவே சுமார் ஒன்பது மாதகாலம் ஆகிவிடுகிறது. மாதம் 4,500 டாலர்கள் சம்பளம் கிடைக்கிறது. வீட்டு வாடகையாக 1,200 டாலர் போய்விடும். மின்சாரம், தண்ணீர், காஸ் என அதற்கு 250 டாலர். கணவன், மனைவி இருவர் வேலைபார்த்தால் குழந்தையை 'டே கேர்' மையத்தில் விடவேண்டியது இருக்கும். அதற்கு மாதம் 1,300 டாலர்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டும். 

அமெரிக்காவைப் பொறுத்தவரை கார் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. 10 ஆயிரம் டாலர் வரை சேமித்தால்தான் கார் வாங்க முடியும். அமெரிக்கா சென்றவுடன் கார் வாங்குவது சாத்தியமில்லை. தாராளமாக லோன் கிடைக்கிறது. கார் வாங்கிக்கொள்கிறார்கள். மாதம் ஆயிரம் டாலர் மிச்சப்படுத்துவதே சிரமம். சில குடும்பங்களில் கணவன் -மனைவி ஒரே நகரத்தில் பணிபுரிவதில்லை. கணவர் மினியாபொலைஸில் வேலைபார்த்தால், மனைவி சான் ஃபிரான்ஸிஸ்கோவில் வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சந்தித்துக்கொள்கின்றனர். இப்படித்தான் போகிறது இந்திய ஐ.டி தம்பதிகளின் அமெரிக்க வாழ்க்கை. பெரும்பாலான ஐ.டி ஊழியர்களுக்கு முடிந்தவரை, வேகமாகச் சம்பாதித்துவிட்டு நாடு திரும்பவே ஆசைப்படுகின்றனர். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 

அமெரிக்காவில் இந்தியர்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. மினிசோட்டா என்கிற மாகாணத்தில் மட்டும்தான் இந்தியர்கள் கனிவுடன் நடத்தப்படுகிறார்களாம். மாகாணத்துக்கு மாகாணம் இந்தியர்களை நடத்தும்விதமும் வேறுபடுகிறது. இந்தியர்களிடம் ஏதாவது பிரச்னை என்றால், அமெரிக்கர்கள் உடனே 911 என்ற அவசர போலீஸுக்கு போன் செய்துவிடுகிறார்கள். போலீஸ் சாஃப்டாக பேசினாலும், நம்மிடம் பேசுகையில் மட்டும் அவர்களின் கை துப்பாக்கி மீதுதான் இருக்குமாம். இந்த மாதிரி சமயங்களில் நம் மீது தவறு இல்லாத நிலையில் சற்று ஆக்ரோஷம் காட்டினால்கூட தவறாக முடிய வாய்ப்பு இருக்கிறது. 

ஐடி துறை

சமூகத்தில் இப்படி பிரச்னை என்றால், நிறுவனத்திலும் இனப்பாகுபாடு அப்பட்டமாகவேத் தெரிகிறது. அமெரிக்கர்கள் காலை 9 மணிக்கு வந்துவிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பிவிடுவார்கள். ஆனால் இந்தியர்களோ, குறிப்பிட்ட சமயத்தில் எல்லாம் வீட்டுக்கு வர முடியாது. அப்படியே வந்தாலும் work from home என்ற பெயரில் இரவு 10 மணியிலிருந்து 1 மணி வரை ஏதாவது வேலை தந்துகொண்டேதான் இருப்பாகள். விடுமுறை விஷயத்திலும் அமெரிக்கர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துகொள்ளலாம். இந்தியர்களுக்கு நிச்சயம் அந்தச் சலுகை கிடையாது. மேலதிகாரியைப் பகைத்துக்கொண்டால், எந்த நேரத்திலும் கான்ட்ராக்ட் டெர்மினேட் செய்யப்படும். அதனால், கை கட்டி வாய் பொத்தி வேலையைப் பார்த்துவிட்டு, வந்துகொண்டே இருப்பார்கள். 

தற்போதையை நிலையில் வேலையைத் தக்கவைத்துக்கொள்வதே தலையாயப் பிரச்னை. அமெரிக்காவில் கிடைக்கும் சம்பளத்தை நம்பி இந்தியாவில் பிளாட் போன்றவற்றை வாங்கி போடுகின்றனர். அதற்கு மாதத் தவணையாகப் பெரும் தொகை கட்ட வேண்டும். திடீரென வேலையும் பறிபோய்விட்டால் என்ன செய்வது என்கிற தயக்கத்திலேயே காலத்தை ஓட்டவேண்டியது இருக்கிறது. 

அமெரிக்காவுக்குப் பணிக்குச் செல்லும் பேச்சுலர்கள் வேறுவிதத்தில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் வரை ஹெல்த்தியாக இருந்த ஒருவருக்கு அமெரிக்கா சென்ற மூன்று வருடங்களில் சர்க்கரை நோய் வந்திருக்கிறது. ஹனி பிரெட் என்ற இனிப்பு அதிகம் கலந்த உணவையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையுமே சாப்பிட்டுக் காலத்தைக் கழித்திருக்கிறார். குழம்பு செய்தால் மூன்று நாள்கள் வைத்துச் சாப்பிடுவது, ரசம் செய்தால்கூட நான்கு நாள்கள் வைத்துச் சாப்பிடுவது என்று சாப்பாட்டு முறையே மாறியிருக்கிறது. விளைவு சர்க்கரை நோய் வர, நொந்துபோனார். 

'இக்கரைக்கு அக்கரை பச்சை 'என்கிற பழமொழி ஐ.டி துறையில் உண்மையாகியிருக்கிறது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement