’அப்பாவிகளை வதைக்காதீர்கள் அதிகாரிகளே’ : கதறும் மாற்றுத் திறனாளி! | Differently abled person's shop in nellai removed by authorities!

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (17/05/2017)

கடைசி தொடர்பு:08:13 (18/05/2017)

’அப்பாவிகளை வதைக்காதீர்கள் அதிகாரிகளே’ : கதறும் மாற்றுத் திறனாளி!

நெல்லை சந்திப்பு பகுதியிலுள்ள மாற்றுத் திறனாளியின் கடையை அதிகாரிகள் அகற்றினர். ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு ஆதரவாக  செயல்பட்ட அதிகாரிகளுக்குச் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

differently abled

நெல்லை சந்திப்புப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டிக் கடை நடத்தி வருபவர், ராமச்சந்திரன். மாற்றுத் திறனாளியான இவரது இரு கால்கள் மற்றும் ஒரு கை செயல்படாத நிலையிலுள்ளது.

உடலில் ஏற்பட்ட குறைபாட்டை வெல்லும் நோக்கத்துடன் அரசு உதவியுடன் 25 வருடங்களுக்கு முன்பு பெட்டிக் கடை அமைத்தார். மிகவும் சிரமப்பட்டு கடையை அவர் நடத்தி வந்தார். 

இவரது கடையின் பின்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஹோட்டல் இருந்தது. அந்தக் கடையை அ.தி.மு.க-வின் மாநில நிர்வாகி ஒருவர் பினாமி பெயரில் வாடகைக்கு எடுத்தார். மாநகராட்சி விதிமுறைகளை மீறி, ஒரே கட்டடத்தை உடைத்து 4 கடைகளாகப் பிரித்து தனித்தனி வாயில்களை அமைத்தார். அதனால் ஒரு கட்டடத்தின் முகப்பை ராமச்சந்திரனின் கடை மறைத்தது.

Differently abled

இதனால் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக ராமச்சந்திரனின் கடையை இன்று அகற்றினர். தனது கடை அகற்றப்படுவதை அறிந்து ராமச்சந்திரன் குடும்பத்துடன் கடையின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், காவல்துறை உதவியுடன் அதிகாரிகள் அவரது கடையை அகற்றினர். 

differently abled

இந்தக் கடையை அகற்றக் காரணமாக இருந்த ஆளுங்கட்சியின் மாநில நிர்வாகிக்கு நெல்லை மாநகர பகுதிகளில் 200-க்கும் அதிகமான பெட்டிக் கடைகள் உள்ளன. அவை அனைத்துமே நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அகற்றத் துணிவற்ற அதிகாரிகள், அப்பாவியான மாற்றுத் திறனாளியின் கடையை அகற்றி தங்களது கடமையை நிறைவேற்றி இருப்பது சமூக ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது!