நீங்கள் ஹெலிகாப்டர் பெற்றோரா? #GoodParenting | Are you a helicopter parent?

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (17/05/2017)

கடைசி தொடர்பு:11:20 (18/05/2017)

நீங்கள் ஹெலிகாப்டர் பெற்றோரா? #GoodParenting

ஹெலிகாப்டர்

ந்தச் சிறுவன் படிப்பில் படுசுட்டியாக இருந்தான்! அவனுக்கு 13 வயதிருக்கும். சமீபகாலமாக அவனால் சரியாக படிக்கமுடியவில்லை; மிகவும் சோர்வாகவும் இருந்தான். என்ன காரணத்தால் தன் மகன் இப்படியிருக்கிறான் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதில் ஆரம்பித்து, அவன் இன்ன உடை உடுத்த வேண்டும், இன்ன படிப்பு படிக்கவேண்டும் என்று பார்த்து பார்த்துக் கவனிக்கும் பெற்றோரால் அவனின் இந்த நடவடிக்கைக்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மகனை அழைத்துக்கொண்டு மனநல நிபுணரிடம் சென்றார்கள். மகனிடம் தனியாக பேசிவிட்டுப் பெற்றோரை தனியாக அழைத்தார் மனநல நிபுணர்.
'நீங்கள் உங்கள் மகனுக்கு ஹெலிகாப்டர் பெற்றோராக இருந்திருக்கிறீர்கள்' என்றார். பெற்றோருக்குப் புரியாமல் அவரைப் பார்த்தார்கள். அந்த வார்த்தையே புதிதாக இருந்தது அவர்களுக்கு. ”நாங்க அவனை நல்லாதானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவனுக்கு ‘கவலை’னா என்னனுகூட தெரியாது, டாக்டர் ”, என்று பதிலளித்தார்கள். “அதுதான் பிரச்னையே!” என்ற நிபுணர், “ஹெலிகாப்டர் குழந்தை வளர்ப்பு’ பற்றி விளக்க ஆரம்பித்தார்.

'உங்கள் குழந்தை செஸ் விளையாடினால், அதில் அவன் ஜெயித்தே ஆகவேண்டும் என நீங்கள் உதவுகிறீர்கள். உங்கள் குழந்தை வகுப்பில் முதல் மாணவனாக வரவேண்டும் என நீங்கள் உதவுகிறீர்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும், உங்கள் குழந்தையின் தேவைக்கு அதிகமாக உதவிசெய்துகொண்டே இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ‘ஹெலிகாப்டர் பெற்றோர்’தான்!''

உங்கள் குழந்தைகள் மேல் அதிகமான அக்கறை, அதிகமான கவலை, அதிகமான கண்காணிப்பு கொண்டிருப்பவராக நீங்கள் இருந்தால் ‘ஹெலிகாப்டர் பெற்றோராக’ ஹெலிகாப்டர்மாறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனால், உங்கள் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஆகாமல் இருக்க, சில டிப்ஸ்கள் இங்கே...

*உங்கள் குழந்தை ஐந்து வயதைத் தாண்டியதும், அவள்/அவன் வேலைகளைப் பார்த்துக்கொள்ளும்படி செய்யுங்கள். உணவு ஊட்டிவிடுவது, உடை மாற்றுவது என தன் பணிகளைத் தானே செய்யப் பழக்குங்கள். உங்கள் பிள்ளையை கொஞ்சுங்கள், செல்லமாக வளருங்கள். அதற்காக பொறுப்புகளைக் கற்றுத்தராமல் வளர்ப்பது தவறு.

*என்னதான் நாம் தடுத்தாலும், இணையம், ஸ்மார்ட்போன் போன்றவை குழந்தைகளின் உலகத்தில் எளிதாக நுழைந்துவிடுகின்றன. அவற்றால் நம் பிள்ளைக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று நீங்கள் பதறலாம், உங்கள் பிள்ளையை கண்காணிக்கலாம் தப்பில்லை. ஆனால் நீங்கள் கண்காணிப்பதை உங்கள் மகனோ மகளோ உணராதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

* பிறந்த குழந்தையை உங்கள் கையில் ஒப்படைப்பதிலிருந்து அவர்கள் கல்யாணக்காலம் வரை நீங்களே முடிவெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு சுயமான முடிவெடுக்கும் திறனை நீங்கள் ஊக்குவிக்காமல் மட்டுப்படுத்துகிறீர்கள் என்பதுதான் நிஜம். இதனைத் தவிர்க்க, சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் குழந்தையிடம் ஆலோசனை கேளுங்கள். உதாரணமாக, நீங்கள் அவர்களுக்காக எடுக்கும் உடைகளை அவர்களையே தேர்வு செய்யச் சொல்லுங்கள்.

* நீங்கள் அதீதமாகக் கண்காணிப்பதும், குழந்தையின்மேல் அக்கறை காட்டுவதும், உங்கள் பிள்ளைக்கு ‘நாம் எப்போதும் சரியா இருக்க வேண்டும்’ என விழிப்பு உணர்வு இருந்துகொண்டே இருக்கும். நம்மை யாரோ ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்கிற உணர்வு உங்கள் பிள்ளைக்கு ஏற்படும். இது பின்னாளில், உங்கள் பிள்ளையை மனச்சிக்கலில் கொண்டுபோய் நிறுத்தும்.

*உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உங்கள் குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள். “நீ பெரியவன் ஆனதும் இதைச் செய்ய வேண்டும், இப்படி இருக்க வேண்டும்”, என அவனுக்குள் இருக்கும் கனவுகளை தெரிந்துகொள்ளாமல், உங்களின் விருப்பங்களைக் கொண்டு அவன் கனவுகளை நிரப்ப முயற்சிக்காதீர்கள். அடிப்படை நற்குணங்களை மட்டும் கற்றுக்கொடுங்கள். வாழ்க்கையின் சவால்களை, உங்கள் பிள்ளையே எதிர்கொள்ளட்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close