வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (17/05/2017)

கடைசி தொடர்பு:10:48 (18/05/2017)

'கிருஷ்ணசாமியை இயக்குவதே ஆர்.எஸ்.எஸ்தான்!'  -சீறும் விடுதலைச் சிறுத்தைகள் 

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நோக்கி கடுமையான வார்த்தைகளை வீசியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ' சாதி வட்டத்துக்குள் இல்லாமல் பொதுவான தலைவராக வலம் வருகிறார் திருமாவளவன். அவரை சாதி வட்டத்துக்குள் அடைக்க வேண்டும் என்ற நோக்கில் மருத்துவர் ராமதாஸ் செயல்பட்டார். அவரது வழியில் கிருஷ்ணசாமி பேசத் தொடங்கியிருக்கிறார்' எனக் கொதிக்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். 

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், "தாழ்வு மனப்பான்மை இருப்பதால்தான் திருமாவளவன் இடஒதுக்கீட்டை கேட்கிறார். எங்களுக்கு அது இல்லாததால்தான், அதில் இருந்து வெளியே வர வேண்டும் என நினைக்கிறோம். எங்களுடைய அடையாளத்தை மீட்டெடுப்பது ஒன்றுதான் மிகப் பெரிய விடுதலை. பிரபாகரன் தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டார். காந்தி தன்னை இந்தியனாக காட்டிக் கொண்டார். திராவிடர் என பெரியார் முன்வைத்தார். அந்தக் கொள்கையில் எனக்கு மாறுபாடு இருந்தாலும், திராவிடன் என அடையாளப்படுத்தச் சொன்னார். உலகில் நடந்த அனைத்து போராட்டங்களும் அடையாளத்துக்கான போராட்டங்கள்தான். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், ஒரு தலித் தலைவராக இருப்பதற்கே திருமாவளவனுக்குத் தகுதியில்லை என்று அர்த்தம். எஸ்.சி என்ற முத்திரை எங்களுக்கு அவசியமில்லை. அது இருக்கட்டும் என்றால், ஏன் திருமாவளவன் தன்னுடைய பெயரை மாற்றினார்? கட்சிக்காரர்கள் பெயரை ஏன் மாற்றினார்? 1998 ஆம் ஆண்டு மாஞ்சோலை பிரச்னையை முன்னெடுத்துக் கொண்டிருந்தேன். திருமாவளவன் அங்கு வந்து அவரது சமூகத்தைப் பிரித்துக் கூட்டிச் சென்றார். சமூகங்களை ஒன்று திரட்டும் வேலையில் நான் இருந்தபோது, ' அந்த சமூகத்தின்கீழ் நீங்கள் இருக்க வேண்டுமா?' என அவர்களைப் பிரித்துக் கொண்டு சென்ற குற்றவாளி திருமாவளவன்" எனக் காட்டமாக விமர்சனம் செய்தார். 

ஆளூர் ஷாநவாஸ்' கிருஷ்ணசாமியின் விமர்சனம் சரியானதுதானா?' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம். " அவருடைய பேச்சு மிகுந்த நகைப்புக்குரியதாக இருக்கிறது. திருமாவளவனைப் பொறுத்தவரையில், ஒருபோதும் உள்முரண் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் அவர் இருந்ததில்லை. 'மைய நீரோட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை எடுத்துச் செல்ல வேண்டும்' என்றுதான் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார். சாதிகளுக்குள் உள் அரசியலை செய்வதற்கு அவர் விரும்பியதில்லை. கடந்த காலத்தில், தலித் அல்லாதோர் கூட்டமைப்பை மருத்துவர் ராமதாஸ் ஏற்படுத்தினார். அதற்குப் பதிலடியாக தலித் தலைவர்களை ஒருங்கிணைத்து திருமாவளவன் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், ஜனநாயக தளத்தில் இயங்கக் கூடிய பெரியாரியவாதிகள், இடதுசாரிகள் உள்பட இதர அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அப்படி இருக்கின்றவர், தலித் சமூகங்களுக்குள் உள்ளே சென்று உள்வேலை செய்வதை எப்படி விரும்புவார்? தலித் கட்சியாகவே வி.சி.கவை நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால், உள்அரசியலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். இதை ஒரு பொதுவான கட்சியாகவே நடத்திக் கொண்டிருக்கிறார். தலித் சமூகத்துக்கு இணையாக தலித் அல்லாதவர்களும் வி.சி.கவில் பதவி வகிக்கிறார்கள். இதை முதலில் கிருஷ்ணசாமி புரிந்து கொள்ளட்டும். 'விடுதலைச் சிறுத்தைகளை ஒரு தலித் கட்சியாக சுருக்க வேண்டும்' என ராமதாஸ் எப்படி நினைக்கிறாரோ, அதேவழியில்தான் கிருஷ்ணசாமியும் சிந்திக்கிறார். 'மைய நீரோட்டத்துக்குள் பொதுவான தலைவராக திருமாவளவன் சென்றுவிடக் கூடாது' என்பதற்காக, கிருஷ்ணசாமி செய்யும் சூழ்ச்சி இது. அதற்காகத்தான் அவரை தலித் வட்டத்துக்குள் அடைக்கும் வேலையைத் திட்டமிட்டுச் செய்கிறார். 

டாக்டர்.கிருஷ்ணசாமிஇதற்கு முன்பும் இதேபோல், பலமுறை கிருஷ்ணசாமி பேசியிருக்கிறார். எந்தக் காலகட்டத்திலும் அவருடைய தேவையற்ற பேச்சுக்களுக்கு திருமாவளவன் பதில் கொடுத்தது இல்லை. ' அவர்கள் வம்புக்கு இழுத்தாலும் நாம் அமைதியாக இருக்க வேண்டும்' என்பதுதான் எங்களுக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாடம். அதைத்தான் இன்று வரையில் கடைபிடித்து வருகிறோம். கிருஷ்ணசாமிக்கு எதிராக ஓர் அறிக்கைகூட அவர் வெளியிட்டது இல்லை. இடஒதுக்கீடுக்கு எதிராக பேசினாலும், திருமாவளவன் அமைதியாக இருந்தார். ஓர் ஆங்கில நாளிதழில் இருந்து இதுகுறித்துக் கேட்டபோது, ' யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்டது இல்லை. நானும் பதில் சொல்லவில்லை' என்றவர், 'இடஒதுக்கீடு என்பது சமூகநீதியின் அடிப்படையில் வந்தது. அதற்கு எதிராக கிருஷ்ணசாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். தனி மனிதர்களுக்கு அதிகாரம் வந்துவிட்டால், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அதிகாரம் வந்தது போல் ஆகிவிடாது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரம் வரும் வரையில் அது இடஒதுக்கீடு என்பது நிலுவையில் இருக்க வேண்டும். கிருஷ்ணசாமி மருத்துவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவிக்கு வந்ததற்குக் காரணம் இடஒதுக்கீடுதான். அவருக்குக் கிடைத்த பதவிகள் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்' என்றுதான் பதில் கொடுத்தார். இந்தப் பதிலில் தவறு இருந்தால், அதைப் பற்றி டாக்டர்.கிருஷ்ணசாமி பேசலாம். அதைவிடுத்து, 'தலித் ஒற்றுமையை திருமாவளவன் சீர்குலைத்துவிட்டார்' எனக் கூறுவது பொருத்தமற்றது. 

இது ஒருபுறம் இருக்கட்டும். டாக்டர்.கிருஷ்ணசாமி எப்போது கட்சியைத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை திருமாவளவன் தொடங்கினார். இவர் அதற்குப் பின்னால்தான் கட்சி தொடங்கினார். திருமாவளவனுக்குப் பின்னால் கட்சியைத் தொடங்கிய கிருஷ்ணசாமிதான், 'தலித் ஒற்றுமையை சீர்குலைத்தார்' என்று சொல்ல வேண்டும். திருமாவளவன் பின்னால் அவர் வந்திருக்க வேண்டும். தவிர, கிருஷ்ணசாமி என்பவர் தேர்தல் நேரத்தில் சீட் வாங்குவதற்கு மட்டும்தான் கட்சியை நடத்துகிறார். ஆனால், திருமாவளவன் அன்றாடம் களத்தில் நிற்கிறார். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அவர் பின்னால் ஒட்டுமொத்த தலித் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். எந்த இடத்திலும் முதிர்ச்சியின்மையோடு திருமாவளவன் பேசியதில்லை. ஒரு தலைவருக்கான இலக்கணத்தோடு அவர் வாழ்ந்து வருகிறார். அவருக்குப் பின்னால் வருவதுதான் கிருஷ்ணசாமிக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

'எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியே வந்தால்தான் இழிவு அகலும்' என்கிறார் கிருஷ்ணசாமி. சமூகத்தில் யாரெல்லாம் இழிவாக நடத்தப்பட்டார்களோ, அந்த சமூகங்களை வகைப்படுத்துவதுதான் எஸ்.சி பட்டியல். இவரோ, 'எஸ்.சி பட்டியலில் வைத்ததால்தான் எங்களை இழிவுபடுத்துகிறார்கள்' என்கிறார். எவ்வளவு பெரிய அபத்தம் இது? கிருஷ்ணசாமியை இயக்குவதே பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்தான். அதை அவரே ஒப்புக் கொள்கிறார். ' பா.ஜ.கவை ஆதரிப்பதில் என்ன தவறு? அடையாளத்தை மீட்க யார் வந்தாலும் அவர்களோடு சேரத் தயார்' என்கிறார். 'சாதி இருக்க வேண்டும்' என வாதிடக் கூடிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சாதியில் இருந்து மீள வேண்டும் என்றால் பெரியார், அம்பேத்கரிய இயக்கங்களோடுதான் அணி சேர வேண்டும். அதைவிடுத்து, ஆர்.எஸ்.எஸ்ஸின் குரலாக அவர் பேசுகிறார். இதற்கு முந்தைய காலகட்டங்களில், அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் கிருஷ்ணசாமி. 'இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கும் மக்களிடம் இருந்து உள்ஒதுக்கீடு என்று பிரிப்பது அந்த மக்களை பாதிக்கும்' என வலிந்து பேசி வந்தார். இன்று அதே கிருஷ்ணசாமிதான், 'இடஒதுக்கீடு தேவை இல்லை' என்று பேசுகிறார். இடஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அதன் குரலை கிருஷ்ணசாமி எதிரொலிக்கிறார். அவ்வளவுதான்" என்றார் கொந்தளிப்பான குரலில்.