Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தினகரன் மீதான கோபம் தணிந்துவிட்டது!’ - காரணம் சொல்லும் ‘கொங்கு’ எம்.எல்.ஏ.

தினகரன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் கூட்டிய ரகசிய கூட்டத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் அமைச்சர்கள். 'சசிகலாவும் தினகரனும் சிறையில் இருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்தக் கவலையும் இல்லை. அரசாங்கம் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது' என்கிறார் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. 

தமிழக அரசுக்கு எதிராக எம்.எல்.ஏக்களில் சிலர் தனி அணியாகக் செயல்பட்டு வருகின்றனர். 'எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலுள்ள சில அமைச்சர்கள்தான் அவரை வழிநடத்துகின்றனர். மற்ற எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பாகுபாடு காட்டுகின்றனர். சமநிலை இல்லாததால், எம்.எல்.ஏக்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்' எனக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார். 'ரகசியக் கூட்டத்துக்கு உங்களை அழைத்தார்களா?' என எம்.எல்.ஏவும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவருமான தனியரசுவிடம் கேட்டோம். “இப்படியொரு கூட்டம் நடந்த தகவலே நீங்கள் சொல்லித்தான் தெரியும். எனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் பணியைச் செய்து வருகிறோம். அம்மா இருந்தபோதும், நான் எந்தப் பதவியையும் எதிர்பார்த்துக் காத்திருந்ததில்லை. இப்போதும் அப்படித்தான்.

தனியரசுஅ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணையப் போகிறது என்பது போன்ற, பதட்டமான சூழல் உருவாகி தணிந்துவிட்டது. ஆட்சி நிர்வாகத்தின்மீது மக்களுக்கு இருந்த சந்தேகங்களும் தீர்ந்துவிட்டது. புதிய திட்டங்கள், பணிகள் என அரசு நிர்வாகத்தில் வேகம் காட்டி வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. தேங்கியிருந்த கோப்புகளும் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டன. மக்களிடம் இருந்து எந்தக் கோரிக்கை வந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர். டாஸ்மாக் வருவாய் இழப்பு, பத்திரப் பதிவுக்கு வந்த சில இடர்ப்பாடுகள் போன்றவைகளால் சிக்கல் ஏற்பட்டது. டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடக்கும் இடங்களில், அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்து வருகிறது. 

தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்டவர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். கட்டுப்பாடு என்ற ஒன்று இல்லாமல், அனைவரும் சுதந்திரமாக செயல்படுகின்றனர். ஆட்சி அதிகாரம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்தாலும், எங்களுக்குள் இருக்கும் ஒரே வருத்தம் சின்னம்மாவும் தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுதான். அதிலும், தினகரன் மீது மத்திய அரசு திட்டமிட்டு போடப்பட்ட பொய் வழக்கை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் டெல்லி திகார் சிறையில் அடைபட்டுள்ள வருத்தத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இரு ஒருபுறம் இருந்தாலும், தற்போது மத்திய அரசுடன் மாநில அரசு சுமூகமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. முன்பு பன்னீர்செல்வத்துடன் மத்திய அரசு நெருக்கமாக இருந்தது. அதேபோல், எடப்பாடி பழனிசாமியுடனும் மத்திய அரசு இணக்கமாக நடந்து கொள்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல திட்டங்களில் மாநில அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.

பன்னீர்செல்வம் விலகிய பின்பு, சசிகலா மீது மக்கள் மத்தியில் இருந்த அப்போதிருந்த வெறுப்புணர்வும் இப்போது விலகிப் போய்விட்டது. எதிர்மறைக் கருத்துக்கள் மாறி, இயல்பான அமைதியான மனநிலையில் மக்கள் இந்த அரசை அணுகுகின்றனர். அரசும் மக்களுக்காக பலவித நன்மைகளைச் செய்து வருகிறது. 'தேவையான அளவுக்குக் குடிநீரைத் தர முடியவில்லையே' என்ற வருத்தமும் இருக்கிறது. குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க ஆழ்குழாய் கிணறு உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்காக எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறேன். விரைவில் ஒதுக்குவதாகக் கூறியிருக்கிறார்கள். நிதி கிடைத்தால், குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு தீர்வைக் கொடுக்க முடியும்" என்றவர் இறுதியாக, 

"சசிகலா மீதிருந்த மக்களின் கோபம் குறைந்துவிட்டது. மக்கள் மத்தியில் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. தினகரனை ஊடகங்கள் அணுகியபோது, அவசியமற்ற கேள்விகளுக்கும் நிதானமாக சிரித்துக் கொண்டே பதில் சொன்ன விதத்தில், மக்கள் மத்தியில் அவர் மீதான இமேஜ் கூடியிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் மீது செயற்கையாகப் பரப்பப்பட்ட கருத்துக்களை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்" என்றார் அசராமல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement