Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''மீன்பிடி தடைக்காலத்துல இப்படித்தான் பொழப்ப ஓட்டுறோம்'' - செம்மஞ்சேரி மீன்கார அக்கா கல்பனா

மீனவப் பெண் கல்பனா

''லையை ரசிக்கிறதுக்காகக் கடற்கரைக்கு நெறைய பேர் வருவாங்க. ஆனா வாழ்க்கை முழுசும் கடல் அலையை பயத்தோடவும், எதிர்பார்ப்போடவும் பார்க்கிறது எங்கள மாதிரி மீனவப் பெண்கள்தான். கடலுக்குப் போன கணவர் நெறைய மீனோட பத்திரமா திரும்பணுமேன்னு மனசு அடிச்சுக்கும். கடலோரப் பெண்களோட உணர்வுகள் கடல் அலையை விட வீரியமானதா இருப்பதோடு வலியும் நிறைஞ்சது'' என்கிறார் சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்த மீன்கார அக்கா கல்பனா. தற்போது மீன்பிடி தடைக்காலம். மீனவப்பெண்கள் என்ன செய்வார்கள் என்பதை அறிய கல்பனா அக்காவிடம் பேசியபோது அவர் உதிர்த்த வார்த்தைகள்தான் மேலே சொன்னவை. 

"நாங்க மீனவக் குடும்பம்னாலும் எங்க தாத்தா காலத்தோட மீன் பிடிக்கிற தொழில் நின்னுடுச்சு. அப்பா துறைமுகத்துல கட்டுமான தொழில் செய்துகிட்டு இருந்தாரு. வறுமையைக் கூரையா போர்த்திகிட்ட குடும்பம் எங்களோடது. அதனால பெத்தவங்களால என்னை ஒன்பதாவதுக்கு மேல படிக்கவைக்க முடியல. 

மீனவப் பெண் கல்பனா

என்னோட 16 வயசுல கல்யாணம் ஆச்சு. கணவர் வீட்ல மீன்பிடிக்கிறதுதான் பிரதான தொழில். எனக்குச் சம்மந்தமே இல்லாட்டியும் நானும் அவரோட சேர்ந்து இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சேன். அதிகாலை ஒரு மணி அல்லது ரெண்டு மணிக்கு மீன்பிடிக்கக் கடலுக்குள்ள போவாரு... எட்டு மணி வாக்குல மீனோட அவர் கரைக்குத் திரும்பினதும் வலையில இருக்கிற மீனை எல்லாம் பிரிக்கிறது என் வேல. எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடும். 

அப்படி பிரிச்ச மீனை சுத்துவட்டாரத்துல உள்ளவங்க வந்து வாங்கிட்டு போவாங்க. மீதம் இருக்கிற மீனை கூடையில போட்டு தலையில வெச்சு நடக்க ஆரம்பிச்சா ஐந்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற கேளம்பாக்கம் மீன் மார்கெட்டுலதான் போய் நிப்பேன். கூடையில உள்ள மீனை எல்லாம் வித்துட்டு காசோட வீட்டுக்குப் போனாதான் சோறாக்க முடியும். ஒருசிலநாள் போன சில மணி நேரத்துல எல்லா மீனும் வித்திடும். ஒரு சில நாள் ஒண்ணுமே விக்காது. அப்பலாம் ஃப்ரிட்ஜ், ஃப்ரீசர்னு எதுவும் கிடையாது. அதனால காலையில பிடிச்ச மீனை சாயங்காலத்துக்குள்ள விற்பனை செய்தே ஆக வேண்டும்.

மீனவப் பெண் கல்பனா

இப்போதான் மோட்டார் படகு இருக்கு. அப்போல்லாம் துடுப்பு படகுதான். கணவர் மீன் பிடிக்கப் போனா, கரை திரும்ப மதியம் வரைக்கும்கூட ஆகும். மீனும் அதிகமா கெடைக்காது. அதே மாதிரி அப்போ எல்லாம் சொல்லிக்கிற அளவுக்கு மீன்பிடி தொழில்ல வருமானம் கெடைக்காது. என் மூணு புள்ளைங்களையும் வளர்த்து, படிக்க வெக்க ரொம்பவே சிரமப்பட்டோம். 

ரேஷன் அரிசிதான் எங்க பசியைப் போக்குச்சு. பலநாள் புள்ளைங்களுக்கு இருக்கிறத கொடுத்துட்டு நாங்க பட்டினியா கெடப்போம். அடுப்பெரிக்கக்கூட பக்கத்துல இருந்த சவுக்குத் தோப்புல காய்ஞ்சு கெடக்கிற குச்சிகளதான் உபயோகிச்சுப்போம். கைநெறையா மீன் இருக்கும். ஆனா வீட்டுல மீன் சமையல் இருக்காது. அப்படியே கெடைச்சா கூட நல்ல காஸ்ட்லியான மீனை விட்டுட்டு வெல போகாத மீனைத்தான் சாப்பிடுவோம். மீன்பிடி தடைகாலத்துல சுத்தம்... எல்லா மீனவ குடும்பத்திலேயும் வறுமை தாண்டவமாடும். 

மீனவப் பெண் கல்பனா

இப்படியே வாழ்க்கை போயிடக்கூடாதுனு முடிவெடுத்தேன். உடனே காட்டுப்பாக்கம் கே.வி.கே மையத்துல சேர்ந்து மீன் சார்ந்த உணவுப் பொருள்களை எப்படி மதிப்புக்கூட்டல் செய்யலாம்னு கத்துகிட்டேன். ஆரம்பத்துல என்கூட நிறையப் பெண்கள் வந்தாங்க. ஆனா யாரும் ஆர்வமா தொழிலைக் கத்துக்கல. நான் விடாப்பிடியா தொழில் செய்ய கத்துக்கிட்டேன். மேலும், செம்மஞ்சேரி மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவியாவும் இருந்து, நிறைய பெண்கள் சுயதொழில் செய்றதுக்கும் வழிவகை செஞ்சேன். மசாலா கருவாடு, மாசி கருவாடு, இறால் இட்லிப் பொடி, ட்ரை ஃபிஷ்னு நிறைய வெரைட்டியை மதிப்புக்கூட்டல் மீன் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். மீன் பிடி தடைக்காலத்துல எங்க பொழப்பு ஓடுறது இப்படிதான். தடைகாலம் தமிழ்நாட்டு மட்டும்தான். கேரளா, கர்நாடகாவுல இருந்து இங்க வர்ற மீன் வாங்கி காயப்போட்டு கருவாடு, பொடி, ஊறுகாய்னு தயாரிச்சு வித்தா நல்லா லாபம் போகும். ஃப்ரிட்ஜ்ல வெச்சா பல மாசத்துக்குக் கெடாது. பிசினஸும் நல்லாப் போக ஆரம்பிச்சுது. வீட்டுக்காரர் மீன் பிடிக்கிறார். நான் மதிப்புக்கூட்டல் பிஸினஸ்ல இறங்கி மாசம் 25 ஆயிரம் சம்பாதிக்கிறேன். என் நிலை என் குழந்தைங்களுக்கு வரக்கூடாதுனு யோசிச்சதுக்கு இப்ப பலன் இருக்கு. 

மூத்தப் பொண்ணு கணவரோடு பெங்களூர்ல டிச்சராக இருக்கா. ரெண்டாவது பொண்ணு பிசிஏ முடிச்சுட்டு கணவரோடு சென்னையில இருக்கா. கடைசி பையன் மும்பையில சாஃப்ட்வேர் இன்ஜினியரா வேலை செய்றான்" என கல்பனா சொன்னப்போது அவரது உழைப்பின் வலியைச் சொல்கின்றன, அவர் துடைத்துவிட்ட ஆனந்த கண்ணீர்த் துளிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close