வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (19/05/2017)

கடைசி தொடர்பு:11:38 (19/05/2017)

‘பிரதமரிடம் என்ன பேசப் போகிறார் பன்னீர்செல்வம்?!’ - எடப்பாடி பழனிசாமி அரசை அசைக்கும் ஆவணங்கள்

பன்னீர்செல்வம்-பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ‘தமிழக அரசியல் சூழ்நிலைகளை விளக்குவதும் எடப்பாடி பழனிசாமி அரசின் அமைச்சர்கள் நடந்து கொள்ளும்விதம் பற்றியும் பிரதமரிடம் எடுத்துக் கூற இருக்கிறார். 'இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது’ என்பதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

'அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைந்தால் இரட்டை இலை கிடைக்கும்' என்ற ஒரே காரணத்துக்காக, அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கென குழுக்கள் அமைக்கப்பட்டன. இரண்டு அணிகளின் நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திப் பேசி வருகின்றனர். அதிலும், மதுசூதனனுக்கும் நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையில் நடக்கும் தகராறுகள் அ.தி.மு.கவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "எடப்பாடி பழனிசாமி அரசின் அமைச்சர்கள் முன்பைவிட சுறுசுறுப்புடன் வலம் வருகின்றனர். அண்மையில், பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார் மின்துறை அமைச்சர் தங்கமணி. இந்த சந்திப்பில் தங்களுடைய நிலைப்பாட்டையும் அவர்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர். டெல்லியில் இருந்து தங்கமணி திரும்பியதில் இருந்து பன்னீர்செல்வம் அணியினரை விமர்சித்துப் பேசுவது எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. 'அமாவாசை இருட்டில் பெருச்சாளி சென்றதெல்லாம் வழி' என மதுசூதனனைக் கலாய்த்தார் அமைச்சர் ஜெயக்குமார். 'அ.தி.மு.கவின் வரலாறு தெரியாதவர் ஜெயக்குமார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அவருடைய முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டவர். அவரது குடும்ப விவகாரங்களை வெளியில் பேச வேண்டியது வரும்' என சீறினார் மதுசூதனன். 

எடப்பாடி பழனிசாமிஇதற்கெல்லாம், பதில் கொடுத்து முடித்து வைக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமியோ, நேற்று கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 'ஜெயக்குமார் என்ன சொன்னார் என்று தெரியவில்லை' என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். இதனை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. அமைச்சர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் பன்னீர்செல்வம். மற்றொருவர் மதுசூதனன். நாளுக்குநாள் விமர்சனம் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதால், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார் பன்னீர்செல்வம். சொல்லப் போனால், தங்கமணி அப்பாயிண்மென்ட் கேட்பதற்கு முன்னரே, பிரதமரின் நேரத்துக்காக காத்திருந்தார் பன்னீர்செல்வம். அதற்குள் தங்கமணி சந்தித்துவிட்டதால், 'தங்களுக்கே பிரதமர் முன்னுரிமை கொடுக்கிறார்' என உற்சாகத்துடன் வலம் வந்தது கொங்கு டீம்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்யும் வேலைகளில் இரண்டு அணிகளும் இறங்கின. தற்போது வரையில் தினகரனையும் சசிகலாவையும் முன்னிறுத்தித்தான் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வருகிறது பழனிசாமி அணி. இந்தத் தகவலை டெல்லிக்குத் தெரிவித்தது பன்னீர்செல்வம் அணி. பன்னீர்செல்வம் அணியினரும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமாண பத்திரங்களை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், இன்று நடக்கும் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், 

"அணிகள் இணைப்பின்போது, முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பன்னீர்செல்வம். டெல்லி நடவடிக்கைகளும் தனக்கு சாதகமாக இருப்பதாக நம்பினார். இந்த நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய வார்த்தைகளால் கொந்தளித்துப் போனார் பன்னீர்செல்வம். ‘பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பதவி இல்லை என நினைக்க வேண்டாம். என்னுடைய நிதி அமைச்சர் பதவியை அவருக்கு விட்டுத் தருகிறேன்' என ஜெயக்குமார் சொல்ல, 'யாருக்கு யார் பதவி தருவது? அம்மாவால் இரண்டு முறை முதல்வர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவன் நான்' எனத் தகித்தார் பன்னீர்செல்வம். அமைச்சர்கள் இவ்வாறு பேசுவதற்குக் காரணமே, 'எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல்தான்' என நினைக்கிறது பன்னீர்செல்வம் அணி.

இன்று பிரதமருடனான சந்திப்பில், ஆட்சிக்கு எதிராகப் போர்கொடி உயர்த்தும் எம்.எல்.ஏக்கள் குறித்தும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்தும் விவரிக்க இருக்கிறார். சசிகலா குடும்பத்துடன் நட்பில் உள்ள அமைச்சர்கள் பட்டியலையும் அளிக்க இருக்கிறார். இன்று நடக்கும் சந்திப்பை உற்று கவனித்து வருகின்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். குறிப்பாக, எந்தப் பதவியிலும் இல்லாத பன்னீர்செல்வத்துக்கு பிரதமரின் அப்பாயிண்மென்ட் கிடைப்பது மிகப் பெரிய விஷயம். 'பன்னீர்செல்வம் என்னுடைய ஆள்' என்பதை பிரதமர் வெளி உலகுக்குக் காட்டும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம். தேர்தல் ஆணையரை இன்று சந்திக்க இருக்கிறார் பன்னீர்செல்வம். அந்தநேரத்தில் இப்படியொரு சந்திப்பின் மூலம், 'இரட்டை இலைச் சின்னத்தை நம் கைக்குக் கொண்டு வந்துவிடலாம். சின்னம் வந்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி அணியே நம் பக்கம் வந்துவிடும்' என நம்புகிறார் பன்னீர்செல்வம். இன்றைய சந்திப்பின் நிறைவில், சில முக்கிய தகவல்கள் வெளியாகலாம்" என்றார் விரிவாக. 

"எடப்பாடி பழனிசாமி அரசை அசைத்துப் பார்க்கும் வேலைகள் வேகமெடுத்து வருகின்றன. நேற்று பேசிய மதுசூதனன், 'இன்னும் இரண்டு மாத காலத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்' எனக் கூற, பன்னீர்செல்வமோ, 'எங்களால் இந்த ஆட்சி கவிழாது' என உறுதிபடக் கூறினார். தமிழக அரசுக்கு எதிராக இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை வளைக்கும் வேலைகள் வேகம் பெற்று வருகின்றன. ஆட்சியைக் காப்பாற்றும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் இல்லை என்பதால்தான், சட்டப் பேரவையைக் கூட்டுமாறு ஸ்டாலின் கூறுகிறார். இன்றைய டெல்லி சந்திப்பிலும், பலவீனமான நிலையில் பழனிசாமி அரசு இருப்பதை உறுதி செய்யும் ஆதாரங்களையும் பன்னீர்செல்வம் அளிக்க இருக்கிறார். 'எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கக் கூடாது' என்பதுதான் பன்னீர்செல்வத்தின் நோக்கம். டெல்லி போடும் கணக்குகளை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.


டிரெண்டிங் @ விகடன்