வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (19/05/2017)

கடைசி தொடர்பு:13:09 (19/05/2017)

'ரஜினி சொல்வது சரிதான். ஆனாலும்...'  - கொதிகொதிக்கிறார் சீமான்

ரஜினிகாந்த்

டிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சந்திப்பு இன்றுடன் நிறைவடைந்துவிட்டது. தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் அமைப்பு முறை குறித்தும் விமர்சனத்தை முன்வைத்தார். ' தலைவராக இருந்து மக்களுக்கு ரஜினிகாந்த் சேவை செய்யட்டும். முதல்வராக இருந்து ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த மூன்று நாள்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பில் அரசியல் வருகை குறித்தும் குறிப்பால் உணர்த்தி வருகிறார். முதல்நாள் பேசும்போது, ' பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் என் பக்கம் வருபவர்களை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்றார். இறுதிநாளான இன்று பேசும்போது, ' என்னைத் தமிழனாக மாற்றியது நீங்கள்தான். அரசியல் குறித்து நான் பேசியது விவாதங்களையும் எதிர்ப்புகளையும் உருவாக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை. நிர்வாக அமைப்பு சீர்கெட்டுப் போய் இருக்கிறது' எனச் சாடினார். அவருடைய பேச்சில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்களைப் பாராட்டினார். 

" ரஜினி சொல்லும் கருத்துகளை ஏற்கிறேன். இன்று பேசும்போது, 'நிர்வாக அமைப்பு தவறாக இருக்கிறது' என்று பேசினார். இதை நான் நீண்டகாலமாக பேசி வருகிறேன். 'அடிப்படை மாற்றத்தோடு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்' என்கிறேன். இந்தக் கட்டடத்துக்கு வெள்ளை அடிப்பதைவிட, புதிய கட்டடம் எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த அமைப்பில் அனைத்துமே தவறாக இருக்கிறது. மக்களாட்சி நாடாக இது இருக்கிறது. ஆனால், குடியரசுத் தலைவரை மக்கள் தேர்வு செய்ய முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான், தேர்வு செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மக்கள் வாக்கு செலுத்தவில்லை. மக்களால் தேர்வு செய்யப்படாத மன்மோகன் சிங்கும் பிரதீபா பாட்டீலும் பெரிய பதவியில் அமர்ந்தார்கள். மக்களையே சந்திக்காமல், மாநிலங்களவை உறுப்பினராகி, அமைச்சர் ஆகிவிடலாம். ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட அருண் ஜெட்லி, நாட்டின் நிதித்துறை அமைச்சராக இருக்கிறார். இவர்களுக்கு எப்படி மக்களை ஆளும் அதிகாரம் வருகிறது? நாங்கள் உங்களுக்கு ஆளும் அதிகாரத்தைக் கொடுக்காதபோது, அந்தப் பதவியில் நீங்கள் எப்படி அமர முடியும்? ஒரேநாளில் பணம் செல்லாது என அறிவிக்கிறார் ஜெட்லி. இந்த நாட்டின் வர்த்தகம், கல்வி, நீர் மேலாண்மை, விவசாயம் என அனைத்துக் கொள்கைகளிலும் அடிப்படைக் கோளாறு இருக்கிறது" எனக் கொதிப்போடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து நம்மிடம் விவரித்தார். 

சீமான்

" ரஜினிகாந்த் என்ன செய்வாரோ, அதைவிட ஆயிரம் மடங்கு நாங்கள் செய்வோம். 'நான் தமிழனாகவே கரைந்துவிட்டேன்' என்கிறார். நமது மக்கள் எம்.ஜி.ஆரை மலையாளியாகப் பார்க்கவில்லை. அது நம் மக்களின் பெருந்தன்மை. ஆனால், இந்த மண்ணை என் அளவுக்கு உங்களால் நேசிக்க முடியாது. எனக்கு என்னுடைய வரலாறும் மொழியும் பண்பாடும் தெரியும். என் மண்ணின் பழம்பெரும் வாழ்க்கை முறைகளை நான் அறிந்து வைத்திருக்கிறேன். என்னுடைய தாய், தந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னால் செய்து கொடுக்க முடியும். அதை உங்களால் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய வாதம். ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும். எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும். இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம். அவர் படத்தின் முதல் காட்சி பார்க்கும் ரசிகராகவும் இருப்போம். அதுவேறு. எங்கள் அய்யா சகாயம் ஐ.ஏ.எஸ், மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வருகிறார். நீங்களும் அப்படிச் செய்யுங்கள். இளைஞர்களிடம் பேசுங்கள். சேவையின் மனப்பான்மையை எடுத்துக் கூறுங்கள். அதைவிடுத்து, எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்.

இந்தத் தலைமுறை மிகுந்த விழிப்பு உணர்வுடன் இருக்கிறது. அதை ரஜினிகாந்தும் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார். 'அவருக்குத் தகுதி இருக்கிறது' என்கிறார்கள். சினிமாவில் நடிப்பது மட்டுமே தகுதியாகிவிடாது. அப்படிப் பார்த்தால், இந்த நாட்டில் நல்லகண்ணுவுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கும் இல்லை. அவர் இன்னமும் ஒரு வார்டு கவுன்சிலர்கூட ஆகவில்லையே...தகுதி என்பது எங்கிருந்து வருகிறது? அர்ப்பணிப்பு, தன்னலமற்ற போராட்டம், எளிமை, தியாகம் ஆகியவற்றில் இருந்துதான் வருகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் நல்லகண்ணுவைத் தவிர வேறு யாருக்குத் தகுதி இருக்கிறது? நான் எவ்வளவு முறை சிறைப்பட்டிருக்கிறேன். நான் நேசித்த தொழிலையே என்னால் செய்ய முடியவில்லை. என் படத்தில் ரஜினி நடித்துக் கொடுப்பாரா? என் படத்தில் நடிக்க விஜய், விஷால் ஆகியோர் பயப்படவில்லையா? 'என் படத்தில் நடிக்கிறேன்' என்று சொன்னது சிலம்பரசன் மட்டும்தான். என்னைச் சிறு வேடங்களில் நடிக்க வைக்கக்கூட சிலர் பயந்தார்கள். இவர்கள் சில படங்களில் நடித்துவிட்டாலே, மக்களை ஆளும் தகுதி வந்துவிடுகிறது. 

ரஜினிகாந்தைப் பற்றி முன்னாள் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ சொன்னது சரிதான். கேரளாவில் மோகன்லால், மம்முட்டிக்கு ஏன் இந்த சிந்தனை வருவதில்லை? மாமன்ற வார்டு உறுப்பினராகக் கூட அவர்களால் வர முடியாது. அந்த மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த்தின் வார்த்தைகளை இந்த இளைஞர்கள் வேதமாகக் கொண்டாடிய காலம் இருந்தது. தமிழ் இனத்துக்காக தன்னுடைய குடும்பத்தையே தியாகம் செய்த பிரபாகரனை, பிரிவினைவாதியாகவும் தீவிரவாதியாகவும் இந்த சமூகம் பார்க்கிறது. எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் இது. இந்த அரசியல் அமைப்பில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை நாங்கள் சரி செய்கிறோம். பிடல் காஸ்ட்ரோ, ஞானிகள், சித்தர்கள், புத்தர் உள்ளிட்டோர் கூறிய நெறிகளில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை. 'அவர் மிகுந்த நேர்மையாளர்' என்கிறார்கள். மிகத் தவறான கருத்து இது. இதுவரையில் நடித்த படங்களுக்கு நேர்மையான முறையில்தான் அவர் சம்பளம் வாங்கினாரா?" என சீற்றத்துடன் முடித்தார் சீமான். 


டிரெண்டிங் @ விகடன்