வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (19/05/2017)

கடைசி தொடர்பு:16:00 (19/05/2017)

'கோடம்பாக்கம் தண்டபாணி வாக்குமூலத்தால் சிக்கலில் கட்சியினர் - ராஜஸ்தான் டு சென்னை வந்த பணம் #VikatanExclusive

 பதுக்கி வைத்த பணம் 

கோடம்பாக்கத்தில் 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்த தண்டபாணி, போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தால் அவருடன் நெருக்கமாக இருந்த கட்சியினருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

சென்னை, கோடம்பாக்கம், வீட்டில் 45 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளைப்  பதுக்கி வைத்த ரியல் எஸ்டேட் அதிபர் தண்டபாணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ராணுவ வீரர்கள், போலீஸார் அணியும் தொப்பிகளைத் தைத்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்ட தண்டபாணி, பணமதிப்பிழப்புக்குப்பிறகு அதை மாற்றிக் கொடுக்கும் கமிஷன் ஏஜென்ட்டாகவும் செயல்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து தண்டபாணியை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், "தண்டபாணியின் தாத்தா ராமலிங்கம், அப்பா துரைராஜ் ஆகியோரைத் தொடர்ந்து தண்டபாணியும் போலீஸாருக்குத் தொப்பி தைத்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டார். அதோடு, ரெடிமேட் துணி, ஸ்கூல் யூனிபார்ம் எனத் தொழிலை விரிவுப்படுத்தினார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் கால்பதித்துள்ளார். இதன்மூலம் தண்டபாணிக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்தச்சமயத்தில்தான் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது.  தண்டபாணியும், கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொடுக்கும் ஏஜென்ட்டாக இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் ராஜஸ்தானைச் சேர்ந்த பதான்சலானியும், தண்டபாணியும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, 'தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. அதை மாற்றிக் கொடுத்தால் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொல்லியுள்ளார்' பதன்சலானி. பேரம் படிந்ததும் ராஜஸ்தானிலிருந்து கட்டுக்கட்டாக பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகள் சென்னை கோடம்பாக்கம் தண்டபாணி வீட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அவைகளை வீட்டுக்குள் பதுக்கிவைத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியும் கொடுத்துள்ளார். 


கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தானிலிருந்து மீண்டும் ஒரு சரக்கு (பழைய ரூபாய் நோட்டுகள்) தண்டபாணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப்பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தண்டபாணி. ஆனால், வருமானவரித்துறை கண்காணிப்பால் பணத்தை மாற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. முன்னதாக தண்டபாணி, பணத்தை மாற்ற சிலரிடம் பேரம் பேசியுள்ளார். அப்போது, கமிஷன் பிரச்னையில் பணத்தை மாற்றமுடியாமல் போனது. அவர்களில் ஒருவர்தான், எங்களுக்குப் போனில் தகவல் தெரிவித்தார். அதன்அடிப்படையிலேயே தண்டபாணி வீட்டில் சோதனை நடத்தி 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம். 
இந்த வழக்கை சூமோட்டாவாக பதிவு செய்து விசாரித்துவருகிறோம். மேலும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம்  பிரிவு 102ன் கீழ் (சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்தல்) தண்டபாணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பணத்தையும் தண்டபாணி மற்றும் பதான்சலானியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளோம். இதன்பிறகு வருமானவரித்துறை விசாரணை நடத்துவார்கள்" என்றார். 

தண்டபாணி

யார் இந்த பதான்சலானி என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "பதான்சலானியின் சொந்த ஊர் ராஜஸ்தான். சென்னையில் நகைக்கடை வைத்துள்ளார். நிதிநிறுவனமும் நடத்திவருகிறார். பதான்சலானிக்கு தண்டபாணியின் அறிமுகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தது பிரபல கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். இதன்பிறகு தண்டபாணியும், பதான்சலானியும் சென்னையிலுள்ள குறிப்பிட்ட ஓர் ஓட்டலுக்குச் சென்று பிசினஸ் டீலிங் தொடர்பாகப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போதுதான் பதான்சலானியின் பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் டீலிங் நடந்துள்ளது. பதான்சலானிக்கு, தமிழக அரசியல் மட்டுமல்லாமல் டெல்லி வரை லாபி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்தான் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் முடிந்தப்பிறகும் இந்த டீலிங்கில் அவர், ஈடுபட்டுள்ளார். தண்டபாணியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் ஒரிஜினல்தானா என்று ஆய்வுக்குட்படுத்த ஆர்.பி.ஐ.க்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்" என்றனர். 

தண்டபாணி, போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் அவருடன் நெருக்கத்திலிருந்தவர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தண்டபாணி கொடுத்த தகவல் அடிப்படையில், தொழிலதிபர் பதான்சலானியிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், அவர், பணம் குறித்து மழுப்பலான பதில்களைத் தெரிவித்துவருவதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், தண்டபாணி, பணத்தை மாற்ற சில அரசியல் கட்சி பிரமுகர்களும் தனக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து தண்டபாணியின் செல்போன் விவரங்களைச் சேகரித்த போலீஸார், அதில் பேசியவர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளனர். அதில், அரசியல் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நீண்ட நேரம் தண்டபாணியிடம் பேசியது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். 'தொடர் சங்கிலியைப் போல தண்டபாணிக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலர் உதவியுள்ள விவரமும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், இந்த வழக்கை வருமானவரித்துறை விசாரித்தால் ஒரு பெரிய நெட்வோர்க் இருப்பது தெரியவரும்' என்கின்றனர் உள்விவர வட்டாரங்கள்.

 தண்டபாணி, பா.ஜ.க பிரமுகர் என்ற தகவல் வெளியானதும், அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீஸ் தரப்பில், தண்டபாணி, எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், தண்டபாணியுடன் நெருக்கத்தில் சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இருந்துவந்துள்ள விவரம் மட்டும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அவர்களின் பெயர் விவரத்தை வெளியிடாமல் போலீஸார் ரகசியம் காக்கின்றனர். இந்த வழக்கில் தண்டபாணியை விடுவிக்க டெல்லியிலிருந்துகூட சிபாரிசு போன் அழைப்புகள் சென்னை போலீஸ் உயரதிகாரிகளுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது தகவல், மீடியா வரைச் சென்றுவிட்டதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். 


டிரெண்டிங் @ விகடன்