`மூணு வருஷம் என்னை நீங்கதான் காப்பாத்தணும்!' -முதல்வரின் ஓப்பன் டாக்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியை இழந்துவிடக்கூடாது என்ற பதற்றத்துடனேயே இருக்கிறார். அவரது பேச்சில் இது அப்பட்டமாக வெளிப்படுகிறது. ஊட்டியில் மூன்று நாள்கள் நடைபெறும் 121-வது மலர்க் கண்காட்சியைத் துவக்கிவைத்த எடப்பாடி பழனிசாமி, ’எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! மூணு வருஷம் என்னை நீங்கதான் காப்பாத்தணும்’ என்று பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாகவே பேசினார்.

எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொர் ஆண்டும் ஊட்டியில் நடைபெறும் மலர்க் கண்காட்சி மிகவும் பிரசித்தம். இப்போது நடைபெறுவது 121-வது கண்காட்சி.              4 லட்சம் மலர் வகைகளைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். 1,500 மலர்த் தொட்டிகளில் மலர் வகைகள் தனியாக வைக்கப்பட்டிருந்தன. 6,000 வண்ண மலர்கள் கண்ணுக்கு விருந்தளித்தன. லட்சக்கணக்கான ரோஜா மலர்களைக்கொண்டு 25 அடி நீளம் 26 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் தோற்றம், அத்தனை பரவசம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அத்தனை பேனர்களிலும் ஜெயலலிதா படங்கள் பெரிய சைஸில் தவறாமல் இடம்பெற்றிருந்தன. போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் வருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமலிருந்தது, கண்காட்சி நடைபெற்ற தாவரவியல் பூங்கா.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அத்தனை பேரும், மலர்களை ரசித்தார்களே ஒழிய முதல்வரைக் கண்டுகொள்ளவே இல்லை. ’ ஜெயலலிதா அம்மா வந்திருந்தாங்கன்னா இப்படியா இருந்திருக்கும்? அந்தப் பதவிக்கான கெத்தே போச்சுப்பா’ என்று பலரும் முணுமுணுத்தார்கள். வரவேற்கக் காத்திருந்தவர்களைத் தவிர, மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் வந்திறங்கினார் முதல்வர். மீடியாக்கள் கூட்டமும் கட்சிக்காரர்கள் கூட்டமும் சூழ்ந்துகொண்டது. பொதுமக்கள், முதல்வரைப் பார்க்க ஏனோ ஆர்வம் காட்டவில்லை. கண்காட்சியைத் தொடங்கிவைத்துவிட்டு, ஒவ்வொரு ஸ்டாலாக பார்வையிட்டார் முதலமைச்சர். அவர் பின்னாடியே  மீடியாக்கள் ஓடினார்கள். அப்போது ஒரு பத்திரிகையாளரிடம், “எல்லாம் உங்க கையிலதான் இருக்கு. நல்லபடியா எழுதுங்க. மீதமிருக்கும் மூணு வருஷமும் என்னை நீங்கதான் காப்பாத்தணும்” என்று சொல்ல, முதல்வரே முகத்துக்கு நேராக இப்படிக் கேட்கும்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நெளிந்தார்கள் மீடியாக்காரர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!