வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (19/05/2017)

கடைசி தொடர்பு:15:05 (19/05/2017)

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்...வேலூரில் பெண்கள் மீது தடியடி!

வேலூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். அந்தப் பகுதி பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தடியடி

கோப்புப் படம்

வேலூர் மாவட்டம், அழிஞ்சிகுப்பத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துவந்தனர். ஆனால், அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று காலை அந்தப் பகுதி மக்கள், டாஸ்மாக்  கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் இறங்கினர்.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், டாஸ்மாக் கடைக்குள் நுழைய முயன்றதால், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வட்டாட்சியரின் கார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். அதனால், அந்தப் பகுதி பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அங்கு வண்டி டயர்கள் எரிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சிகளிக்கிறது. அங்கு, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனிடையே, கடந்த மாதம் திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.  அதில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கியதால், ஏ.டி.எஸ்.பி.பாண்டியராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.