குலதெய்வ வழிபாடு... 360 மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம்..! | Native god worship... 8 days travel in 360 bullock carts!

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/05/2017)

கடைசி தொடர்பு:16:20 (19/05/2017)

குலதெய்வ வழிபாடு... 360 மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம்..!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அபிராமபுரம், அகத்தாரியிருப்பு, முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், கொம்பூதி மற்றும் சிவகங்கை மாவட்டம் ஆரியூர் உள்ளிட்ட 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அவரவர் குலதெய்வ கோயில்களுக்கு மாட்டுவண்டி, டிராக்டர்களில் சொந்தபந்தங்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வண்டிகட்டிக்கொண்டு வரிசையாகச் செல்வது வழக்கம். 

இந்த ஆண்டு கொண்டாடப்படும் குலதெய்வ கோயில் திருவிழாவுக்காக, இந்த 56 கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கமுதி அருகிலுள்ள அகத்தாரியிருப்பில் ஒன்றுகூடி, அவரவர் மாட்டுவண்டிகளில் கூடாரம் அமைத்து, ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகக் கிளம்பி விருதுநகர் நோக்கி வருவார்கள். விருதுநகர் மாவட்டம், சிவகாசி வரை ஒன்றுபோல வந்து, பிறகு அங்கிருந்து புதுப்பட்டி கூடமுடையார் கோயில், கீழராஜகுலராமனில் உள்ள இருளப்பசாமி கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகிலுள்ள தைலாபுரம் வீரகாளியம்மன் கோயில் என அவரவர் குலதெய்வ கோயில்களுக்கு குழுக்களாகப் பிரிந்துசென்று வழிபடுகின்றனர். 

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்தத் திருவிழா நடக்கும் என்பதால், இந்தக் கிராமங்களைச் சேர்ந்த வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இந்த விழாவில் தவறாமல் கலந்துகொள்வார்களாம். 

"கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேல் இப்படி பாரம்பர்யமாக மாட்டுவண்டி கட்டி, கட்டுச்சோறு கொண்டுவந்து, ஆங்காங்கே நிறுத்திச் சாப்பிட்டு சந்தோஷத்துடன் திருவிழா கொண்டாடச் செல்கிறோம்" என்கின்றனர் மாட்டுவண்டியில் செல்லும் கிராம மக்கள். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க