Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''சாப்பிட்டியானு கேட்கக்கூட யாரும் இல்லக்கா!'' - மெரினா பீச் சுண்டல் சிறுவன்

மெரினா பீச்

னது சரியில்லையா, பொழுது போகவில்லையா நண்பர்களுடன் மெரினா பீச்சுக்கு சென்று கடல் அலைகளைப் பார்த்தபடி நீண்ட நேரம் அமர்ந்திருக்கப் பிடிக்கும். நேற்றிரவு நீண்ட கால நண்பர்களைப் பீச்சில் சந்திக்க பிளான் செய்தோம். சந்தோஷமும், இரவு நேரக் குளிர் காற்று வருடிக் கொண்டிருக்க, கடல் அலைகளின் துள்ளலைக் கவனித்தபடி சந்தோஷமாக நண்பர்களோடு அமர்ந்திருந்தேன். எங்கள் சந்தோஷத்துக்கு இடையூறாக அடிக்கடி “அக்கா!! சுண்டல் வாங்கிக்கோங்க பிளீஸ்” என்று டார்ச்சர் செய்த சிறுவனை கடுப்போடு பார்த்தேன்.

மெலிந்த தோற்றம், கையில் இரண்டு பாத்திரங்கள் எனச் சிரித்த முகத்தோடு நின்றவனைப் பார்த்ததும் 'என்ன மாதிரி மனுஷி நான்'' என்கிற வேதனையை அடக்கிக்கொண்டு 'ஹாய் மா'' என்றேன். ''ஹாய் கா'' என்றவனோடு பேச வேண்டும் என்று தோன்றியது. 'நீ விக்க போறப்ப நானும் உன்கூட கொஞ்ச தூரம் வரட்டுமா'' என்ற என்னை சற்று பீதியோடு பார்த்தான் அந்தச் சிறுவன். ''பயப்படாதமா... உன்கூட பேசணும்னு தோணுது அதான். பிடிக்கலைனா வரலை. இந்தா சுண்டல் கொடு'' என்றபடி பணத்தை நீட்டினேன். எதோ யோசித்தவன் ''சரி வாங்கக்கா காலாற நடப்போம். அப்பப்ப சுண்டலும் விக்கிறேன் ஓகேவா'' என்ற டீலோடு அவனுடன் நடக்கத் துவங்கினேன். 'ஹே நல்ல பிஸினஸ்டி அப்படியே போய்டு'' என்று கேலி செய்த நட்பு வட்டத்தை புன்னகையோடு கடந்தேன்.

பீச் சிறுவன்

''பேரு முத்துக்கிருஷ்ணன்க்கா. சொந்த ஊர் விருதுநகர். நான் பதினொண்ணாவது படிக்கிறேன். எனக்கு எட்டு வயசாறப்ப எதோ ஒரு சண்டைல அம்மா எங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க. நாங்க நாலு பசங்க. அப்பா சென்னைல பழங்கள் விக்கிறார். எங்க வீட்டுல நான்தான் கடைசி பையன். அம்மா போன கொஞ்ச நாள்ல அப்பாவும் பிரிஞ்சு போயிட்டார். ஆனா ஒவ்வொரு மாசமும் வந்து எங்களுக்கு பணம் கொடுத்துட்டு போவார்.

அப்பா போன பிறகு எனக்கு எல்லாமுமா இருந்தவங்க என் அக்காதான். அவங்கதான் என்னை வளர்த்தாங்க. அக்கா என் கூட இருந்த வரைக்கும், என்னோட வாழ்க்கை சந்தோஷமாவே நகர்ந்துச்சு.நாலு வருஷத்துக்கு முன்னாடி அக்காவுக்குக் கல்யாணம் நடந்துச்சு. அவங்களும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க. நானும் அக்காவும் இருந்தது எங்க சொந்த வீட்டுல. கூட பிறந்த மத்த ரெண்டு அண்ணன்களும் பிரிஞ்சு போயிட்டாங்க. அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் அப்பாவும் வர்றதில்லை, பணமும் கொடுக்கிறதில்லை. ஒவ்வொரு வருஷமும் மே மாச லீவுக்கு சென்னை வந்து சுண்டல் விப்பேன். இதுல கிடைக்கிற காசை வைச்சு படிப்பு செலவுக்கு வைச்சுப்பேன். கவர்மென்டு ஸ்கூல்ல படிக்கிறதால நோட்டு புக்ஸ் வாங்க வைச்சுப்பேன்.

பீச் சுண்டல் சிறுவன்

ஜூன் மாசம் தொறந்துட்டா விருதுநகர் போயிடுவே. தெனமும் காலையில எழுந்து அவசர அவசரமா எனக்குத் தெரிஞ்சத சமைச்சு சாப்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடுவேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மா அப்பா பத்தி பேசுறப்ப ஏக்கமா இருக்கும். எனக்கு காய்ச்சல், மண்டை வலினாகூட ஓடிவந்து உதவுறதுக்கு யாருமே இல்லக்கா.

சாப்பிட்டியா... நல்லா இருக்கியா... இப்படி என்னைப் பத்தி கவலைப்பட ஒருத்தரும் இல்லக்கா. எல்லாச் சொந்தமும் இருக்காங்க. ஆனா யாரும் அண்டுறதில்லை. யாருமே இல்லாதவன் மாதிரி ஃபீல் பண்றேன். என்னை மாதிரி நிலைமை எந்த பையனுக்கும் வரக்கூடாது. வீட்டுல தனியா இருக்கப் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். அதனாலேயே ஸ்கூலுக்கு எப்படா போவோம், ஃப்ரெண்ட்ஸை பார்ப்போம்னு இருக்கும். வீட்டுக்கு வந்ததும் எதாவது ஒரு வேலைக்கு போயிடுவேன். ராத்திரி 11 மணிக்குத்தான் வருவேன். இப்படி ஓடியாடி படிச்சு பத்தாவதுல 314 மார்க்தான் வாங்கினேன். பத்தாவதுல என்ன மார்க் எடுத்த, பாஸ் ஆகிட்டியா இல்ல பெயிலானு கேட்கக்கூட ஆள் இல்லக்கா.

எல்லாரும் விருப்பப்பட்டு சந்தோஷமா கொண்டாடுற தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையும் நான் என் இருட்டு அறையிலதான் கொண்டாடியிருக்கேன். அப்பா கடைசியா என்னைப் பிரிஞ்சி போனப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டு போனாங்க.. அந்த ரூபாயை முதலீடா வச்சுதான் இப்போ வரைக்கும் நான் சம்பாதிச்சுட்டு இருக்கேன். அந்த உழைப்பு தான் எனக்குச் சோறு போடுது. காலைல சுண்டல் ரெடி பண்ணுவேன். ராத்திரில அதை விப்பேன். ஒரு நாளைக்கு 700 ரூபா லாபம் கிடைக்கும். அதுல 300 ரூபாவ செலவு பண்ணிட்டு 400 ரூபாவ உண்டியல்ல போட்டுடுவேன். காசு கைல இல்லாத சமயத்துல அந்த சேமிப்பு பணம் தான் கைக் கொடுக்கும்.

எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மாவ பாத்ததும் இல்லை அம்மா கிட்ட பேசுனதும் இல்லை. அம்மா இல்லையேனு வருத்தப்பட்டிருக்கேனே தவிர அவங்களப் பாக்கணும், தேடிப்போகணும்னு மனசு சொன்னதில்ல. என்னோட அண்ணன்களும் என்னை மாதிரி எங்கையோ கஷ்டப்பட்டு இருப்பாங்கனு நினைச்சா மனசு வலிக்குது.நாங்க எல்லாம் ஒண்ணா சேருவோமா... சந்தோஷமா வாழுவோமானு தெரியல.

மெரினா பீச்

தனிமையாவே இருக்கிறதுனால எனக்கு சொந்தக்காரங்களை புடிக்கலை. யாரையும் நம்பத் தோணலை. நானா சுயமா உழைச்சு படிச்சு இன்ஜினியரிங் பட்டதாரி ஆகணும்னு நினைக்கிறேன். அதான் இப்போதைக்கு என் லட்சியம். என்னை விட்டுட்டுப் போன உறவுகள் திரும்ப வந்தா ஏத்துக்க மனசு இருக்குமானு தெரியல. தனிமைதான் எனக்கு நிரந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். சரிக்கா நேரமாகிட்டு பீச்ல இன்னும் நாலு எடத்துக்குப் போனா நெறையா சம்பாதிக்கலாம். ஸ்கூல் தெறக்கபோகுதில்லையா. வரேன்கா...''

''அம்மா சுண்டல் வாங்கிக்கோங்க... சுண்டல் சுண்டல்...'' அவன் குரல் என்னிடம் இருந்து கரையத் துவங்கியது. அவனுடைய சுமைகள் என்னுள் இறங்கிபோய் தவிக்க ஆரம்பித்தேன் நான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement