வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (20/05/2017)

கடைசி தொடர்பு:13:56 (20/05/2017)

பழனிசாமி... பன்னீர்செல்வம்... இரட்டை இலை யாருக்கு ? பரபர இறுதிச்சுற்று

                             இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக தினகரன் கைதானபோது... 

மிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டு அணிகளாக உடைந்து போனதால் அந்தக் கட்சியின் சின்னத்தை, எந்த அணிக்குக் கொடுக்க வேண்டும் என்பது குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. 'இரட்டை இலை' சின்னம் யாருக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும் என்ற தகவலால் அ.தி.மு.க-வின் இரு அணிகளுமே பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறன. அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சிறை, வழக்கு, விசாரணை என்று முடக்கப்பட்டிருந்தாலும், அந்த அணியின் ஆதரவு எம்.பி-க்கள், மந்திரிகள் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். அதேபோன்று, 'கட்சியின் அதிகமான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எங்களிடம்தான் உள்ளனர், ஆகவே இரட்டை இலை சின்னத்தை எங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், அதற்கான பிரமாணப் பத்திரத்தையும் கொடுத்து விட்டு காத்துக் கிடக்கிறது, புரட்சித்தலைவி அம்மா (ஓ.பி.எஸ்.) அணி.

 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாகவே, அ.தி.மு.க-வின்  'இரட்டை இலை'  சின்னம் முடக்கப்பட்டிருந்தாலும், அப்போது வந்த இடைத்தேர்தலே இரட்டை இலை முடக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஏப்ரல், 9-ம்தேதி தேர்தலை ரத்து செய்யப்பட்டது. இந்தியத் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி, தேர்தல் கமி‌ஷனர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை 29- பக்கங்களில் வெளியிட்டு  தமிழக பணப்பட்டுவாடா அரசியலைப் பொது வெளிக்குக் கொண்டு வந்தனர். "கூடுதலாக 3 தேர்தல் பார்வையாளர்கள், மீண்டும் 3 சிறப்பு பார்வையாளர்கள், 6 மத்திய பார்வையாளர்களை நாங்கள் இந்தத் தேர்தலுக்காக நியமித்தோம். இதுவரை எந்த சட்டசபை தொகுதியிலும் இப்படி அதிக எண்ணிக்கையில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது இல்லை. அதேபோல், அரசியல் கட்சிகளின் புகார்களின் அடிப்படையில், மார்ச், 25-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முதற்கொண்டு 22 போலீஸ் அதிகாரிகள், 18 வருவாய்த் துறை அதிகாரிகள், ஒரு உதவி கமி‌ஷனர், 2 நிர்வாகப் பொறியாளர்கள், 4 உதவி நிர்வாக பொறியாளர்கள், 4 உதவி பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பணம், பரிசுப்பொருள்கள், டோக்கன்கள், செல்போன் ரீசார்ஜ் கூப்பன்கள், செய்தி பத்திரிகை சந்தா, பால் கூப்பன்கள், வங்கி கணக்குக்கு நேரடியாக பணப்பட்டுவாடா, செல்போன் வாலட்டுகளுக்கு (மொபைல் பர்ஸ்) பணம் அனுப்புவது போன்ற பலவகைகளில் வாக்காளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.


                               இரட்டை இலை மீட்பு சபதத்தில்   ஓ.பன்னீர்செல்வம் அணி

 தேர்தல் செலவின கணக்கு மேற்பார்வையாளர் நடத்திய விசாரணையில், அ.தி.மு.க.(அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் பிரதிநிதிகள், ரூ. 3 லட்சத்துக்கு 10 ஆயிரம் தொப்பிகள் வாங்கியுள்ளனர். இது வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது வாக்காளர்களுக்குப் பணம், பரிசு பொருள்கள் வழங்குவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக ஏப்ரல், 7-ம் தேதி வரை 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் விஜயபாஸ்கர் தான் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதில் முக்கிய நபராக விளங்குவதாக ஏப்ரல் 8-ம் தேதி,  தகவல்கள் கிடைத்தன. அவரது கணக்காளர் சீனிவாசனிடமிருந்த சில ஆவணங்களின் மூலம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பல அரசியல்வாதிகளுக்கு ரூ.89 கோடி வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.வேட்பாளராக  62 பேர் களத்தில் உள்ள தேர்தலில் இப்படிப்பட்ட அசாதாரண சூழலை அனுமதிக்க முடியாது, ஆகவே தேர்தலை நடத்த இது உகந்த நேரம் இல்லை" என்றுதான் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.

 இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம், 'இரட்டை இலை' சின்னத்தை தங்கள் அணிக்குச் சாதகமான முறையில் பெற  ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று டி.டி.வி. தினகரன் கைது,  டெல்லி திகார் சிறையில் அடைப்பு. பின் மீண்டும் விசாரணை, கோர்ட்டில் ஆஜர், நீதிமன்றக் காவல் என போய்க்கொண்டே இருக்கிறது, விவகாரம். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூன், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோர் முன்னரே இது தொடர்பாகக் கைதாகினர். இப்போது இதே விவகாரம் தொடர்பாக பாபுபாய் என்ற ஹவாலா ஏஜென்டை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார். 'இரட்டை இலை எங்களுக்கே' என்ற மகிழ்ச்சியுடன் இனிப்பு, பட்டாசு, அறுசுவை உணவு, தண்ணீர்ப்பந்தல், நலத்திட்ட உதவிகள் என ஓ.பன்னீர்செல்வம் அணி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளது. அந்தக் கொண்டாட்டத்தை, "அம்மா-ஓ.பி.எஸ். நற்பணி மன்றம்" என்ற பெயரில்  வடசென்னை மாவட்ட அம்மா பேரவைச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆரம்பித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, கே. பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட அனைவருமே தலைநகர் டெல்லியில்தான் கடந்த சில நாள்களாகவே இருக்கிறார்கள்.  'வரும்போது இரட்டை இலையோடுதான் தமிழகம் வருவோம்' என்று ஓ.பி.எஸ். தலைமையிலான டீம் எடுத்துள்ள சபதம்தான் இந்தக் காத்திருப்பின் காரணம்.

இரட்டை இலை குறித்த இறுதிச்சுற்று விசாரணை முடிவதற்குள் பல விக்கெட்டுகள் விழக்கூடும் என்றே தெரிகிறது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள பவன் ரெய்னா அதில் முதல் விக்கெட்டாகவும் இருக்கலாம். யாருக்கு நல்லதாக விடிந்தாலும், அந்த விடியலை அடித்தட்டு மக்களின் நலனுக்காகவும், காய்ந்து கிடக்கும் பூமியை செழிப்பாக்கும் திட்டத்துக்காகவும் பயன்படுத்தினால் அதுதான் மக்களின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும்.


டிரெண்டிங் @ விகடன்