நீதிபதி கர்ணனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி..!

ஆறு மாதகால சிறைத் தண்டனை உத்தரவை ரத்துசெய்யக்கோரி, கர்ணன் தாக்கல்செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 


சென்னை உயர்நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, இவர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட நிறைய நீதிபதிகள் ஊழல் செய்வதாக, 2015-ம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார் கர்ணன். இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது.

எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், கைது உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், 'பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு சில காலங்களே உள்ளதால், கைது உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால், மேல்முறையீட்டுக்கு வாய்ப்பில்லை என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடிசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!