வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (20/05/2017)

கடைசி தொடர்பு:21:00 (20/05/2017)

சகாயம் அறிக்கைக்கு மூடுவிழா?! - மூடப்படுகிறதா கிரானைட் மோசடி?! #VikatanExclusive

 

கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் அறிக்கை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அவரது அறிக்கையில் திருப்தியில்லை என்ற காரணத்தைக் கூறி முடக்க உள்ளதாகக் கொந்தளிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ‘மத்திய அரசின் புவியியல் மற்றும் கனிமவளத்துறைக்கு இதுகுறித்து அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டுவர்களை அரசு காப்பாற்ற நினைக்கிறது’ என்கின்றனர் ஆதங்கத்துடன். 

‘தமிழகத்தில் நடக்கும் கனிமவள முறைகேடு தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 2014-ம் ஆண்டு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தார். மதுரையில் நடந்துள்ள கிரானைட் மோசடிகள் குறித்து மட்டுமே, தீவிர விசாரணையில் இறங்கினார் சகாயம். விசாரணைக் காலங்களில் பலவித இன்னல்களுக்கும் அவர் ஆளானார். ஓராண்டு விசாரணைக்குப் பிறகு, ' கிரானைட் குவாரிகளால் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடிக்குக் காரணமான மத்திய, மாநில அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்' என உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார். 

தற்போது வழக்கின் நிலவரம் குறித்து நம்மிடம் விவரித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், "கிரானைட் முறைகேடுகள் தொடர்பான சகாயம் அறிக்கையின்மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, 'சகாயம் அளித்த அறிக்கையில் பலதுறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆறு வாரம் அவகாசம் வேண்டும்' எனக் கேட்டார்.

இதனையடுத்து, இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வில்சன், 'கிரானைட் குவாரிகளால் கடந்த 17 ஆண்டுகளில் 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் வருவாய் ஈட்ட முடிந்தது. ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமோ, '1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய்' என்கிறார். அவரது மதிப்பீடு தவறானது. அரசின் இதர துறைகளைக் கலந்து ஆலோசிக்காமல் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். எனவே, இந்த விவகாரத்தில் புதிய குழுவை அமைத்து துல்லியமான விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம். கிரானைட் குவாரி அதிபர்களின் ஆலோசனைகளின்படியே, ' சகாயம் குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை' எனக் கூறி, அவரது அறிக்கையை கிடப்பில் போடுவதற்கு அரசு தயாராகிவிட்டது" என்றவர், 

"கிரானைட் குவாரிகளால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டது ஒருபுறம் இருந்தாலும், அந்தக் குவாரிகளில் நடந்த சட்டவிரோதக் குற்றச் சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் எனப் போராடி வருகிறார் சகாயம். இந்த சூழ்நிலையில்தான், மத்திய அரசின் புவியியல் மற்றும் கனிம வளத்துறைக்கு, தமிழக அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், 'கிரானைட் குவாரிகளில் மத்திய அரசின் கனிமவளத்துறை அதிகாரிகள் சரியான முறையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கை வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இதற்குப் பதிலளிக்கும் மதுரை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளும், 'மறுஆய்வு நடத்துவதற்கு அரசு கடிதம் எழுதியிருப்பது உண்மைதான்' என்கின்றனர். இதன்மூலம் சகாயம் அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு, ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் முடிவில் தமிழக அரசு இருப்பது தெளிவாகிறது. மீண்டும் ஆய்வு நடத்தப்படுவது என்பது விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வராமல், ஒத்திப் போடும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம்" என்றார் விரிவாக. 

"அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு ஆட்சியாளர்களிடமும் கிரானைட் அதிபர்கள் நெருக்கம் காட்டி வந்தனர். அ.தி.மு.கவின் சீனியர் அமைச்சர்கள் பலரும் கிரானைட் அதிபர்களுடன் நெருக்கம் காட்டி வந்தனர். மலையைக் குடைந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட கொடுமையோடு, குவாரிகளில் நரபலியும் கொடுக்கப்பட்டன. இதனை வெளிக்கொண்டு வருவதற்காகச் சுடுகாட்டில் படுத்துறங்கினார் சகாயம். அரசின் எந்தத் துறைகளிலிருந்தும் அவருக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை. அவர் தங்கும் அறையிலேயே ரகசிய மைக்கை பொருத்தினார்கள். உயிரைப் பணயம் வைத்துத்தான் கனிமவள மோசடியை வெளிக்கொண்டு வந்தார். அவரது அறிக்கையைத் தமிழக அரசு ரசிக்கவில்லை" என்கிறார் மதுரை மாவட்ட விவசாயி ஒருவர்.

இதுகுறித்து சகாயத்திடம் பேசினோம். "இந்த விவகாரம் குறித்து என்னுடைய கவனத்துக்கு எந்தத் தகவலும் வரவில்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.
 


டிரெண்டிங் @ விகடன்