பிரதமர் மோடியை தம்பிதுரை சந்தித்த பின்னணி என்ன?⁠⁠⁠⁠ #VikatanExclusive

தம்பிதுரை

பிரதமர் மோடியைத் தம்பிதுரை எம்பி சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய இரண்டு அணிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு, அவர்கள் தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் தரப்பு ஆவணங்களைக் கொடுத்துள்ளனர். அதன்பிறகு, பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில் தம்பிதுரை, பிரதமர் மோடியைச் சந்தித்தார். இது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பிரதமருடன் தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்தடுத்த சந்திப்புகள் அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை எதற்காக தம்பிதுரை சந்தித்தார் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம்.

"டெல்லிக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு அனுமதி கொடுத்த தகவல் தம்பிதுரைக்கு தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே பிரதமர் மோடி புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்திருந்தார். அந்தவிழாவில் தம்பிதுரையும் கலந்துகொள்வதற்கான திட்டம் இருந்தது. விழாவில் பங்கேற்ற தம்பிதுரை, மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியிடம் சில நிமிடங்கள் பேசியுள்ளார். அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சி அரசியல்குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்திலுள்ள விசாரணை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவருடன் 45 நிமிடங்கள் மோடி பேசியுள்ளார். அப்போது, தமிழக அரசியல், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்திலுள்ள முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த பேச்சு எழுந்துள்ளது. அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. முன்மொழியும் வேட்பாளருக்குத் தம் அணியின் ஆதரவு நிச்சயம் உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லியதாகத் கூறப்படுகிறது. இதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

பன்னீர்செல்வம்

இதற்கிடையில், மோடியிடம் இரண்டு அணிகள் ஒன்றிணைவதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் விரிவாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, 'ஒருவாரம் பொறுமையாக இருங்கள். நல்ல முடிவு வரும்' என்று பா.ஜ.க. மூத்த அதிகாரி ஒருவர் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலைச் சின்னம் முடக்கம் ஆகியவை தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது. கட்சியில் தங்களுக்குத்தான் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லி சசிகலா அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டிபோட்டு அஃபிடவிட்டை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர். இதில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் ஏற்கெனவே 43 லட்சம் பேரின் அஃபிடவிட் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. நேற்று, மேலும் 10 லட்சம் பேரின் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சசிகலா அணியில் 1,422 பேரின் அஃபிடவிட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் காலஅவகாசம் பெற்று, தற்போது அஃபிடவிட் தாக்கல்செய்ய அதிக முயற்சி எடுத்துவருகின்றனர்.

இரண்டு அணிகள் கொடுக்கும் அஃபிடவிட் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்க உள்ளது. அந்த முடிவு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமாக வந்தால், சசிகலா அணிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். அதேநேரத்தில், சசிகலா அணிக்கு சாதகமாக வரும்பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்பார்த்து இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் காத்திருக்கின்றனர்.

அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இது, அந்த அணியில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதற்கு தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்டுவதற்காகத் தங்களின் ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இது, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு, மத்தளத்துக்கு இரண்டுபக்கம் அடி போன்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒருபுறத்தில் ஓ.பன்னீர்செல்வம், இன்னொரு புறத்தில் தங்கள் தரப்பு எம்எல்ஏ-க்களால் கொடுக்கப்படும் நெருக்கடி. இதையெல்லாம் கருத்தில்கொண்டு, எடப்பாடி பழனிசாமி தரப்பு கவனமாகக் காய் நகர்த்திவருகிறது. அணிகள் ஒன்றிணைக்கும் விவகாரத்தில்கூட எந்தமுடிவையும் வெளிப்படையாக எடுக்க முடியாமல் அவர்கள் காலம்கடத்திவருகின்றனர்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், பா.ஜ.கவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சித்துவருகின்றனர். புத்தக வெளியீட்டு விழாவைப் பயன்படுத்தி, தம்பிதுரை மோடியைச் சந்தித்துள்ளார். அவரிடம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க முன்மொழியும் வேட்பாளருக்குத் தங்களது ஆதரவு நிச்சயம் உண்டு என்பதையும் சொல்லிவிட்டு வந்துள்ளார். பா.ஜ.க-வின் கருணைப்பார்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினருக்குக் கிடைத்தால், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும். அதற்கு இடம்கொடுக்கக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் அணியும் கவனமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்பதுபோல ஒரு பதிவு போடப்பட்டது. அதற்கான பல்ஸைப் பார்த்த பிறகு, அந்தப் பதிவுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!