வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (20/05/2017)

கடைசி தொடர்பு:16:33 (20/05/2017)

PF கணக்கில் முறைகேடு? சென்னையில் முக்கிய இடங்களில் EPFO திடீர் ரெய்டு! #VikatanExclusive

சென்னை அம்பத்தூர், ஆவடி, ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., பல்லாவரம் உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இ.பி.எஃப்.ஓ) சென்னை அலுவலகம், இன்று அதிரடி சோதனை மேற்கொண்டது. 

சென்னை, இபிஎஃப்ஓ

ஒவ்வொரு நிறுவனத்திலும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தாலே அவர்களுக்கு பி.எஃப் வழங்கப்பட வேண்டும் என்பது சட்ட விதி. மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்) கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். ஆனால், ஒருசில நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு பி.எஃப் முறையாக வழங்கப்படுவதில்லை. நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பி.எஃப் குறித்து போதிய விழிப்புஉணர்வு இருப்பதில்லை. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை இ.பி.எஃப்.ஓ அலுவலகம், சென்னையில் 15-க்கும் மேற்பட்ட  முக்கியமான கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நேரடியாகப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுவருகிறது. 

இதுகுறித்து, சென்னை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஆணையர் சலில் சங்கரிடம் கேட்டதற்கு, "பொதுவாக, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து பி.எஃப் குறித்து அதிக புகார்கள் வரும். ஆனால், கட்டுமான நிறுவனங்களில் விதி மீறல்கள் அதிகம். அங்கிருந்து வரும் புகார்கள் குறைவு. ஆகையால், முதல்கட்டமாக சென்னையில் பல கட்டுமான நிறுவனங்களில் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறோம். 

இதில், கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எஃப் கணக்கு இருக்கிறதா, அவர்களுக்கு UAN நம்பர் ஒதுக்கீடு செய்திருக்கிறார்களா, பி.எஃப் நீடிக்கப்பட்டுள்ளதா, பி.எஃப் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நேரில் அறிய திடீரென சோதனை மேற்கொண்டுவருகிறோம். இந்தச் சோதனைகளில் முறைகேடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உடனடியாக வழக்குத் தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும். 

இன்று முதல்கட்ட நடவடிக்கையாகக் கட்டுமான நிறுவனங்களில் திடீரென இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், செக்யூரிட்டீஸ் ஏஜென்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என சென்னையில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் அடுத்தடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்படும்" என்றார் அவர்.


டிரெண்டிங் @ விகடன்