எங்களை நிர்வாணப்படுத்திய சிறை நிர்வாகம்..! - நெடுவாசல் போராட்ட மாணவியின் வேதனைக் குரல்..!

சிறையில் எங்களை மூன்று முறை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி சோதனை செய்தனர் என்று விவசாயிகளுக்காக போராடி கைதான வளர்மதி என்ற மாணவி தெரிவித்துள்ளார். 


வளர்மதி என்ற பெண் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வருகிறார். அவர், அவருடைய நண்பர்கள் ஏழு பேருடன் சேர்ந்து ஏப்ரல் 15ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக புறப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து ரயிலில் புறப்பட்ட அவர்களை குளித்தலையில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று சிறையில் இருந்து வெளிவந்த வளர்மதி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், 'நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கச் சென்ற எங்களை குளித்தலையில் வைத்து முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது செய்தனர். எங்களது மொபைல் போன்களைப் பறித்துக் கொண்ட அவர்கள் எட்டு மணி வரை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். அதன்பிறகு சுமார் 11 மணி அளவில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைக்கு வந்த எங்களை சோதனை செய்ய வேண்டும் என்று ஆடைகளை அவிழ்க்க கூறினர்.

ஆடைகளை அவிழ்க்க எதிர்ப்பு தெரிவித்த எங்களை அருவருக்கத்தகக்க, தகாத கெட்டவார்த்தைகளால் திட்டினர். மேலும் வலுக்கட்டாயமாக ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்தனர். அதேபோன்று மூன்று முறை சோதனை செய்தனர். இதனைக் கண்டித்து நாங்கள் உண்ணாவிரதம் இருந்த போதும், டி.ஐ.ஜி ஜெயபாரதி எங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்தார். நாங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்கு தடை விதித்தார். மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. எங்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். வளர்மதி மற்றும் அவருடைய நண்பர்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!