Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்றும்... இன்றும்... ரஜினியின் ஆலோசகர் இவர்தான்!


               அரசியல் விதை போட்ட ரஜினி மேடை

மிழ் சினிமாவுக்கு  1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி, 'அபூர்வ ராகங்கள் ' என்ற சினிமாவின் மூலம்  ஒரு புதிய அறிமுகம் கிடைத்தது. ராமோஜிராவ் கெய்க்வாட் - ரமாபாய்  கெய்க்வாட் தம்பதியரின் மகனான சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இளைஞர்தான் அந்த அறிமுகம். அபூர்வ ராகங்கள் படத்தில் கதையை முடித்து வைக்க, படத்தின் முடிவில் வரும் அந்த கேரக்டர்.  சிவாஜிராவ் என்ற அந்த இளைஞனின் பெயரை டைட்டிலில்,  'அறிமுகம்- ரஜனிகாந்த்' என்று போட்டிருந்தார்கள். நாற்பத்து இரண்டு (1975-2017) ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த ரஜினிகாந்தும், ரசிகர்களால் ரஜினியாக சுருக்கி அழைக்கப்படும் அளவுக்கு நெருக்கமாகி 67 வயதை முடித்துக் கொண்டிருக்கிற காலகட்டம் இது...'கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டை' என்ற எழுதப்படாத தமிழக அரசியல் பயணக் கோட்பாட்டின்படி எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா, டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் வரிசையில் ரஜினிகாந்தும்  இப்போது இணைந்திருக்கிறார். ''புதுப்படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் ரஜினி இப்படித்தான் பேசுவார்'' என்ற அவச்சொல் இந்தமுறை நீர்த்துப் போகும் போல்தான் தெரிகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல ரஜினியின் இலைமறைக் காய் மறை பேச்சை, மக்களைவிட மிக நேர்த்தியாக அரசியல் தலைவர்கள்தான் 'கேட்ச்' பண்ணியிருக்கிறார்கள். ''ரஜினி அரசியலுக்கு வருவது அவர் விருப்பம்'' என்றிருக்கிறார், தி.மு.க-வின் செயல்தலைவர் ஸ்டாலின். ''நல்ல விஷயம்தானே'' என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். ''ரஜினிகாந்த் வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்றதோடு, ''வந்தால்தானே அரசியல் எப்படி இருக்கிறது, என்று தெரியும்'' என்று பொடிவைத்து வரவேற்றிருக்கிறார் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம். கோட்டையை நோக்கி நகரும் விதமாக  முதன்முதலில் பேச ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. அ.தி.மு.க-வின் தலைமையான ஜெயலலிதாவின் மரணம், தி.மு.க தலைமையான கருணாநிதியின் சுகவீனம்.... என தொடர்ந்து தலைமை இல்லாமல்  தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இந்தச் சூழலே, ரஜினியின் வருகைக்கான முக்கியக் காரணமாக இருக்கலாம். தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி., இடதுசாரிகளுக்கு கட்சியின் கொள்கைதான் லீடர். ஆனால், தமிழகத்துக்கு எப்போதும் தேவையாயிருக்கிற 'கவர்ச்சி' மாயையை நன்கு  உணர்ந்திருக்கிறார் ரஜினி. தன்னுடைய 42 ஆண்டுகால 'பயாஸ்கோப்' நெருக்கத்தை மூலதனமாகக் கொண்டு தமிழக அரசியலில் குதிக்கவிருக்கிறார் அவர். இதன்மூலம் ரஜினிகாந்த் தமிழக  மக்களுக்கு   என்ன செய்யப் போகிறார் என்பதையும் யோசிக்க வேண்டும்.


கடந்த காலங்களில், ரஜினியின் குடும்ப உறவுகள், அவரது உருவம் பொறித்த பனியன், ஸ்டிக்கர், கையெழுத்திட்ட பொருட்களை ரசிகர்களுக்கு சந்தைப்படுத்தியபோது அவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அந்த சூழ்நிலையில், 'ரஜினி மௌனம்' காத்ததை ரசிகன் எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும்? மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? என்ற குழப்பத்துக்கு இன்றுவரையில் விடை இல்லை. தொடக்ககால சினிமாக்களில், கொஞ்சமும் பொறுமை இல்லாத கதாபாத்திரங்களே ரஜினிக்கான பாத்திரங்களாக இருந்தன. அதை மாற்றிக் காட்டியவர் எஸ்.பி.முத்துராமன். கே.பாலசந்தரின் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகி இருந்தாலும்கூட, அவருக்குள் ஒளிந்திருந்த ஸ்டாரை சரியாகக் கண்டுபிடித்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனே! 1979-ல் வெளிவந்த 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தின் மூலம் ரஜினியை பக்குவமுள்ள நடிகராகக் காட்டினார் எஸ்.பி.முத்துராமன்.  குடும்பத்துக்காக தன்னுடைய ஆசைகளை மறைத்துக் கொண்டு வாழும் சாதாரண குடும்பத்தலைவன்; பிற்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் சந்தானமாக மாறும் கதாபாத்திரம் அது.  அந்த அமைதியான ரஜினியை ரசிகர்கள் ஏற்காது போனாலும், ரஜினிக்கு நன்றாக நடிக்க வரும் என்ற தகவலை போட்டி ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க உதவிய படமாக 'ஆறிலிருந்து அறுபது வரை' அமைந்தது. அடுத்தடுத்து மீண்டும் கிடைத்தன ஆக்‌ஷன் படங்கள்... அத்தனையும் ஹிட் அடித்தன. ரஜினியின் வேகமான சினிமாப் பயணம், அன்றைய முன்னணி ஹீரோக்களை மிரட்டியது. 'ரஜினியின் இயல்பான சுபாவம் இதுதான்' என்று வெளியுலகத்துக்கு காட்டி அவரது வளர்ச்சியை தடுத்து நிறுத்த பல முயற்சிகளும் நடந்தன. அப்போது முன்னணியில் இருந்த நடிகர் ஒருவருடன் ரஜினிக்கு ஏற்பட்ட மோதல் விஸ்வரூபமெடுக்க... அதன் பின்விளைவாக ரஜினிக்கு 'மனநிலை சரியில்லாதவர்' என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. ஏர்போர்ட்டில் தகராறு, ஷூட்டிங் ஸ்பாட்டில் கலாட்டா, நடிகையிடம் வம்பு... என்றெல்லாம் ரஜினி பற்றிய செய்திகள் பரவின. ஆனாலும் ரஜினியின் மீதிருந்த கிரேஸ், அதையே அவருக்கான கூடுதல்  இமேஜாக மாற்றிக் கொடுத்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மீண்டும் எஸ்.பி.முத்துராமனே, 1985-ம் ஆண்டு ரஜினியை வைத்து 'ஶ்ரீராகவேந்திரர்' என்ற படத்தை எடுத்தார். ரஜினியின் நூறாவது படமான இதில் ரஜினிதான் ஶ்ரீராகவேந்திரர்! ரஜினியை முழுமையாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய எஸ்.பி. முத்துராமன், அந்த முயற்சிப் பயணத்தில் ரஜினியை வைத்து மட்டுமே 26 படங்களை இயக்கித் தள்ளினார். தன்னுடைய அத்தனை படத்திலும், ரஜினியின் மரியாதையைக் கூட்டும் விதமான காட்சி, வசனங்களை அதிகம் சேர்த்திருப்பார்.

ரஜினியின் அரசியல் ஆலோசகர் எஸ்.பி.முத்துராமன்

சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் போல் தன்னுடைய படங்களில் தேவையான வசனங்களையோ, பாடல்களையோ ரஜினிகாந்த் வலிந்து திணித்துக் கொள்ளவில்லை என்றாலும் சூசகமாக அறிவித்துக் கொண்டே இருந்தார். தனக்கு அரசியல் சரிவராது என்பதை, அரசியலுக்குப் போன சக நடிகரால் சிங்கப்பூரில்  நடைபெற்ற 'ஸ்டார்' விழாவில் வைத்து அவமானப் படுத்தப்பட்ட போதே ரஜினி உணர்ந்திருப்பார்.  'திரைக்குப் பின்னால் ரஜினி ஒரு போதும் நடித்தது கிடையாது' என்று (2017) ரசிகர் -ரஜினி சந்திப்பின் போது மனமாறப் பாராட்டியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். 'அரசியலில் நடிக்கத் தெரியாத ரஜினி, உங்களை (தமிழக மக்கள்) நாடி வருகிறார், அவரை புறந்தள்ளி விடாதீர்கள்' என்று மறைமுகமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்... ரஜினி ரசிகர் மன்றத்தின் முதல் அகில இந்தியத் தலைவர் யாரென பலருக்குத் தெரிந்திருக்காது... அவர், 'பூக்கடை' நடராஜன். தொண்ணூறுகளின் தொடக்கம் வரையில் உடனிருந்த நடராஜன்,  அதன்பின் அப்படியே சைலண்ட் மோடுக்குப் போனார். அடுத்து வந்த சத்யநாராயணா, பதினைந்து ஆண்டுகள் வரை 'ஜெராக்ஸ்' ரஜினியாகவே வாழ்ந்தார். நடராஜன், சத்யநாராயணனுக்கு அடுத்து வந்த எவரும் அத்தனை புகழ்பெறவில்லை... அதற்கு முக்கியக் காரணம், ரஜினி அரசியலைப் பற்றி தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்த ஏழாண்டு காலத்தில் உள்ளே வந்திருக்கிறார்கள் அவர்கள்... இதுதான் விஷயம்.ஜெ.வுக்கு ஒரு 'சோ' போல ரஜினிக்கு ஒரு ஆலோசகராக, நண்பராக  எஸ்.பி.முத்துராமன்  கிடைத்திருக்கிறார்... ஆலோசனைகள் நல்லவையாகவும், அதைக் கேட்பவர் அதனினும் நல்லவையை சிந்திக்கிறவராகவும் இருந்து விட்டால் அது எல்லோருக்குமே நல்லது.                              

                                                           

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close