வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (21/05/2017)

கடைசி தொடர்பு:13:28 (21/05/2017)

''எங்களுக்கு நாங்கதான் உலகம்!'' - அன்பில் நெகிழ்த்தும் மாற்றுத்திறனாளி தம்பதி

மாற்றுத்திறனாளி காமாட்சி

ம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்... லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்” என்கிற பாடல் வரிகளுக்குப் பொருத்தமானவர்கள் மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி - காமாட்சி தம்பதியினர். இருவருமே மாற்றுத்திறனாளிகள். ராமமூர்த்தி உடல் அளவில் குழந்தை... அவர் பேசுவது புரியாது. காமாட்சிக்கு ஒரு கை கிடையாது. இருந்தும் தன் வாழ்க்கையை அசைக்க முடியாத நம்பிக்கையால் நகர்த்திக்கொண்டிருக்கிறார் காமாட்சி. 

''என்னோட சொந்த ஊர் திருச்செந்தூர். எனக்கு மூணு வயசா இருக்கிறப்ப அம்மா இறந்துட்டாங்க. நான் பொறக்கும்போதே மாற்றுத்திறனாளியாதான் பொறந்தேன். அப்பா கொஞ்சநாள்லேயே ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். பாட்டியும் சித்தியும்தான் என்ன கவனிச்சாங்க. ஆனா வெவரம் தெரிய ஆரம்பிச்ச சமயத்துல சித்திக்கொடுமை. ஒருகட்டத்துல அப்பாவுக்கும் சித்திக்கும் ஒத்துவராம பிரிஞ்சுபோயிட்டாங்க சித்தி. பாட்டி இருந்தாலும் நான்தான் ஒத்தை ஆளா என்னைக் கவனிச்சுக்க வேண்டிய நிலைமை. ஒரு கை இல்லாம அதுவும் பொண்ணா ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு கையோட வாழுறதை வலியோட கத்துகிட்டேன். பாட்டி உதவியோட படிச்சேன். நான் பத்தாவது படிக்கிறப்ப அப்பா மூணாவது கல்யாணம் பண்ணிகிட்டார். என்னையும் பாட்டியையும் விட்டுட்டு போயிட்டார். அதுகப்புறம் படிக்கிறதுல ஆர்வம் இல்ல. பாட்டி இறந்ததும் அந்த ஊர்ல இருக்கப்பிடிக்கல. வேலை தேடி மதுரைக்கு தனியாளா வந்தேன். ஒரு ஹாஸ்பிடல்ல ஆயாம்மா வேலைக்குச் சேந்தேன்" என்பவர் தன் வாழ்க்கைத் துணையாக வந்த கணவரை பற்றி சிலாக்கிறார்.

ராமமூர்த்தி - காமாட்சி

கொஞ்ச வருஷம் கழிச்சு நான் வேலை பார்த்த ஆஸ்பத்திரிக்கு ஒருத்தரை கூட்டிட்டு வந்தாங்க. அவர் பேசினது புரியல. ஆனா பார்க்க கொழந்தையாட்டம் இருந்தார். வாயில்ல எச்சில் வழிய அம்மா கையைப்பிடிச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்த அவரப் பார்த்ததும் பரிதாபத்துக்கு பதிலா பாசம் வந்துச்சு. அவரைப் பத்தி அவங்க அம்மாகிட்ட விசாரிச்சேன். 

அவருக்கு பொண்ணு தேடுறதா சொன்னாங்க. அதுக்கப்புறம் பலதடவ நான் வேலை பாத்த ஆஸ்பத்திரிக்கு அவர் வருவார் அவங்க அம்மாவோட. ஒருநாள் 'நீ என் புள்ளைய கல்யாணம் பண்ணிக்கிடுறியா'னு அவங்க அம்மா என்கிட்ட கேட்டாங்க. பட்டுனு ஓகே சொல்லிட்டேன். என்கூட வேல பார்த்தவங்க எல்லாம் 'அவரையா கல்யாணம் பண்ணிக்க போற’னு கேட்டாங்க. வேண்டாம்னுகூட சொல்லிப் பார்த்தாங்க. நான் ஒரே பிடியா அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனு சொல்லிட்டேன். நான் இத்தன வருஷம் பட்ட அவமானம், வலி, வேதனையை கண் முன்னாடி ஒருத்தர் அனுபவிக்கிறார்னு தெரிஞ்சதுமே மனசு இளகிடுச்சு. எனக்குள்ள இருக்க ஒட்டுமொத்த அன்பையும் அவருக்குத் திருப்பி கொடுக்கணும்னு தோணுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப அவரையும் சேர்த்து எனக்கு மூணு குழந்தைங்க'' என்கிறவர் வீட்டில் மெழுகுவர்த்தி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 

மாற்றுத்திறனாளி காமாட்சி

'' என் கணவர் குழந்தை மாதிரி. அவருக்குக் குளிக்க, டிரெஸ் பண்ணிக்க எல்லாம் தெரியாது. நாமதான் பார்த்துப் பார்த்து செய்ஞ்சு விடணும். காத்தால எழுந்து அவரைக் குளிக்க வைச்சு, டிரஸ் பண்ணி விட்ருவேன். அப்புறமா நான் குளிச்சு கிளம்பி வேலைக்குப் போவேன். அவர் மதுரை மாட்டுத்தாவணியில பேனா விக்கப் போவார் அவர் மேல பரிதாபப்படுறவங்கதான் பேனாவ வாங்குவாங்க. இன்ன பேனா.. இவ்வளவு காசுனுகூட சொல்லத் தெரியாத குழந்தை அவர். கல்யாணத்துகு அப்புறம் ஆஸ்பத்திரி வேலைய விட்டுட்டு கட்டட வேலைக்குப் போனேன். அங்க இருக்கிறவங்க எல்லாம் 'ஒத்தக்கைய வைச்சுக்கிட்டு இவ எப்படி வேல பாத்து சம்பாதிக்கப் போறாளோ’னு கிண்டலா பேசுவாங்க. அவமானப்படுத்துவாங்க. அவங்க முகத்துல கரியப்பூசுற மாதிரி அதிகமா வேல பார்த்து பாராட்டு வாங்குவேன். ஒருத்தர் நம்மளை கிண்டல் பண்றாங்கனா நாம பதிலடி வேலையில கொடுத்தா போதும். மூணு குழந்தைங்களையும் ஒருத்தர் மாத்தி ஒருத்தரா குளிக்க வைச்சு சாப்பாடு ஊட்டிவிடுறப்ப சிரிப்பா இருக்கும். 

எனக்கு என் வீட்டுக்காரர அவ்வளவு புடிக்கும். பசங்க வளர்ந்தாலும் அவர்தான் எனக்கு குழந்தை. அவர் பேசுறது உங்களுக்குப் புரியாது. இல்லாட்டி எம் மேல உள்ள பாசத்த நிச்சயம் கொட்டியிருப்பார் உங்ககிட்ட. எங்க நாலு பேரோட உலகம் ரொம்ப சின்னது. எங்களுக்கு நாங்கதான் உலகம், நம்பிக்கை, சந்தோஷம் எல்லாம்... என்கிறார் புன்ன'கை' மற்றும் தன்னம்பிக்'கை'யில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்