ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த மாணவி மர்ம மரணம்! | Mystery death of Young woman who studied IAS Academy in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (20/05/2017)

கடைசி தொடர்பு:19:52 (20/05/2017)

ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த மாணவி மர்ம மரணம்!

சென்னை ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

Gayathiri

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அருளழகி இவர்களுக்கு காயத்திரி, வினோத்குமார் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். 


காயத்திரி பி.இ., படித்து விட்டு சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து உயிருக்குப் போராடியிக்கிறார். உடனே அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். 

இதற்கிடையில் காயத்திரியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை மட்டும் வரச் சொல்லி இருக்கிறார்கள். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த காயத்திரி நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார். உடனே பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக மாணவியின் வீடு உள்ள மேட்டூருக்கு காயத்திரியின் உடலை அனுப்பி வைத்து விட்டார்கள். 


இதனால் காயத்திரி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, காயத்திரியின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் உடலை நடு ரோட்டில் வைத்துப் போராடினார்கள். குறிப்பாக, காயத்திரியின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவரது உடல், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு, நாளை பிரேத பரிசோதனை நடக்கிறது.