Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கையில் இருந்த பணத்தையும் காவலர்கள் களவாடிவிட்டார்கள்’ - குற்றஞ்சாட்டும் வளர்மதி

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற மாணவிகளை, சிறைத்துறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த மாணவி வளர்மதி, நெடுவாசலில் போராடும் மக்களுக்கு உதவிட, தாங்கள் வைத்திருந்த 22 ஆயிரம் பணத்தை போலீஸார் களவாடிவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

neduvasal valarmathi
 

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி, மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திட, “பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்” எனும் அமைப்பைச் சேர்ந்த வளர்மதி, ஸ்வாதி, தினேஷ், சூர்ய வர்மா உள்ளிட்ட ஏழு மாணவ-மாணவிகளை போலீஸார், குளித்தலையில் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள், திருச்சி, அரியலூர் என பல சிறைகளில் அடைக்கப்பட்டனர். 

35 நாட்கள் சிறைவாசம் முடித்து, மாணவி வளர்மதி, தினேஷ், சூர்ய வர்மா, தீபக் ஆகியோர் மட்டும் இன்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். திருச்சி பெண்கள் சிறை வாசலின் வெளியே வந்த வளர்மதி, அவருக்காக காத்திருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆதிநாராயணமூர்த்தி, முருகானந்தம் மற்றும் வழக்கறிஞர்கள் கம்ருதீன், மதுரை அகராதி ஆகியோர் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

நம்மிடம் பேசிய வளர்மதி, “நெடுவாசலில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும், மாணவர்களான நாங்கள் கோவையில் இருந்து கிளம்பி வந்தோம். ரயிலில் “இயற்கையைப் பாதுகாப்போம்”, “ஹைட்ரோ கார்பன் திட்டம்” குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், பறை அடித்துக்கொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்திக் கொண்டே வந்தோம். 30க்கும் மேற்பட்ட போலீஸார், குளித்தலையில் எங்களை ரயிலில் இருந்து இறக்கி ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். அடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்று, தேசத்துக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனர். அடுத்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தும்போதும், போலீஸ் விசாரணையிலும், ‘நாங்கள் மாணவர்கள், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே செல்கிறோம்’ என்றோம். ஆனால் அதை அவர்கள் காதில் வாங்கவே இல்லை.

அங்கிருந்து திருச்சி சிறைக்கு கொண்டுவந்தபோது, ஜெயிலர் ஜெயபாரதி தலைமையிலான போலீஸார், மூன்று முறை நிர்வாணப்படுத்தி சோதனை செய்தார்கள்.  அதேபோல் அடுத்து துணை ஜெயிலர் சோதனை நடத்த முயன்றபோது, நான் அதற்கு உடன்பட மறுத்தேன்.
அடுத்த சிலநாட்கள் கழித்து, சிறையில் வழங்கப்படும் உணவு சரியில்லை என்றும், எனக்கு நாப்கின் தேவை எனவும் கேட்டேன். அதெல்லாம் கிடையாது என அலட்சியமாகப் பேசினர்.

இதுகுறித்து நீதிபதிக்கு புகார் எழுதிய எங்களை தனித்தனியே தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர். என்னுடன் கைதான ஸ்வாதியை நான் சந்திக்கக்கூடாது என்றும், என்னைச் சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுத்தும் திருப்பி அனுப்பினர்.

இப்படி அடுத்தடுத்து உளவியல் ரீதியாக எங்களைச் சித்ரவதை செய்தனர். இதனைக் கண்டித்து ஐந்து நாள்கள் உண்ணாவிரதம் இருந்தோம். ஆதனால் கோபமடைந்த சிறைத்துறை அதிகாரிகள் மூலம் மீண்டும் என்னை தனிமைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். நான் தனிமைச் சிறைக்குப் போக மறுத்த என்னை, வசந்தி, கங்காதேவி, பாக்கியலெட்சுமி, நதியா உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அடைத்தனர். அப்போது எனக்கு ஆதரவாகப் பேசிய தண்டனைக் கைதிகள் மீது மனசாட்சி இல்லாமல் லத்தியால் அடித்தனர்.

இந்தத் தாக்குதலில் பலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. ஒரு பெண்ணுக்கு காது கேட்கவே இல்லை. மேலும் சிறைக்குள் வந்த உளவுப்பிரிவு அதிகாரிகள், விஜிலென்ஸ் அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களை விசாரித்தார்கள்.

நாங்கள் சந்தேகப்பட்டுக் கேட்டபோது, எங்களை எதிர்த்து உங்களால் என்ன செய்ய முடியும் என மோசமாகத் திட்டினர். இதுபோன்ற அத்துமீறலுக்கு எதிராக ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கை குறித்தோ, எங்கள் மீதான வன்முறை குறித்தோ முறையான விசாரணை நடக்கவில்லை. சிறையில் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் நடந்தது.

மக்களுக்கு எதிரான விசயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் எனப் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை ஆரமித்து அதன்படி செயல்படுகிறோம். எங்கள் இயக்கம் தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இல்லை. ஆனால் நாங்கள் நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள், தடைச் செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனப் போலீஸார் சித்தரிக்கிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசினாலே நக்ஸலைட்டுகள் எனச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்.

மேலும் நாங்கள் ரயிலில் வரும்போது, நெடுவாசல் மக்களுக்கு உதவுவதற்காக, உண்டியல் ஏந்தி பதினைந்தாயிரமும், செலவுக்கு நண்பர் ஒருவர் பதினைந்தாயிரம் எடுத்து வந்திருந்தார். கைது செய்யப்பட்டபோது, அதனை வாங்கி வைத்த போலீஸார், எங்கள் வழக்கறிஞரிடம் வெறும் எட்டாயிரம் மட்டுமே வைத்திருந்ததாகக் கொடுத்துள்ளார்கள். போலீஸார் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வார்கள் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இதனை தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்திட வேண்டும்' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close