' ரஜினிகாந்த் இமயமலை அரசியல்' பின்னணி! - பி.ஜே.பி கொதிக்கும் காரணம் இதுதான்! | This is Rajini's Himalayas Politics and Background This is the reason for bjp get anger

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (21/05/2017)

கடைசி தொடர்பு:17:48 (21/05/2017)

' ரஜினிகாந்த் இமயமலை அரசியல்' பின்னணி! - பி.ஜே.பி கொதிக்கும் காரணம் இதுதான்!

                                     பி.ஜே.பி.யை அசைக்கத் தொடங்கிய ரஜினியின் இமயமலை அரசியல்...                                            தமிழக அரசியலில் ரஜினிகாந்த் இரண்டு பேர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். ஒருவர்  தி.மு.க. தலைவர் கருணாநிதி, இன்னொருவர்  த.மா.கா தலைவர் ஜி.கே மூப்பனார். கருணாநிதியைப் பற்றிக் குறிப்பிடும்போது 'பெரியவர்' என்றும், 'மூப்பனார்' பற்றிக் குறிப்பிடும்போது அய்யா என்றும் அழைப்பதே ரஜினியின் வழக்கம். காங்கிரசை விட்டு  1996-ல்  பிரிந்து  தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார் தொடங்கி, தி.மு.க-வுடன்  கூட்டணி  அமைத்தபோது  ரஜினி,  'ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று 'வாய்ஸ்'  கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். 1991-96-ம் ஆண்டுகளில் இருந்த ஜெயலலிதா ஆட்சி மீதான மக்கள் கோபம், அந்தத் தேர்தலில் தி.மு.க-த.மா.கா கூட்டணிக்கு வெற்றியைக் கொடுத்தது. அடுத்து வந்த இரண்டே ஆண்டில் அனைத்தும் மாறியது. நாடாளுமன்றத்  தேர்தல் வாக்குப்பதிவிற்கு சில நாட்கள் முன், நிகழ்ந்த  (1998) கோவை குண்டுவெடிப்புச் சம்பவம், அந்தத் தேர்தலின் போக்கை மாற்றியமைத்தது. தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக இந்தத் தேர்தலிலும் ரஜினி 'வாய்ஸ்' கொடுத்திருந்தார்.

வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்னர், சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த்,  'குண்டுவெடிப்பு சதிக்குப் பின்னால் ஒரு கை இருக்கிறது' என்றார்.  அந்த ஒரே வரி பேட்டி மக்களால் எப்படி புரிந்து கொள்ளப்பட்டதோ, தெரியவில்லை, தேர்தல் முடிவு அ.தி.மு.க-வுக்குதான் சாதகமாக அமைந்தது. மக்கள் பிரச்னையோடு கலந்து வெளியில் வரும்போதுதான் தன்னுடைய குரலுக்கு மதிப்பு இருக்கிறது என்பதை ரஜினி உணர்ந்த தருணம் அது. இருப்பினும் மூன்றாவது முறையாக ரஜினி கொடுத்த குரல் (வாய்ஸ்) இன்றுவரை பா.ம.க-வின் கோபத்தைக் குறைக்காமல் வைத்திருக்கிறது. 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார். 'நமக்கு கலைஞர் அய்யா மீது கோபமோ, வருத்தமோ இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் மட்டும்  நீங்கள் எதிர்த்து வாக்களியுங்கள்' என்று அந்த சந்திப்பின்போது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார் ரஜினி. அந்தத்தேர்தலில்தான் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்  தன்னுடைய 'வாய்ஸ்' செயலிழந்ததை அடுத்து சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். பா.ம க. அதற்குப் பின்னரும் ரஜினியை விடவில்லை. 'ரஜினியின் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளாலும், மது அருந்தும் காட்சிகளாலும் இளைஞர்களின் மனம் பாதிக்கப்படுகிறது' என்று ஆரம்பித்து  ரஜினியை விரட்ட ஆரம்பித்தனர். 

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ரஜினிகாந்த் அமைதியைத் தேட ஆரம்பித்தது,  இந்த காலகட்டத்தில் இருந்துதான். எப்போதாவது, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். சமூகத்தில்  பெரிய மனிதர்களாக இருப்பவர்கள், மனம் நிம்மதியைத் தேடும்போது, தொலைதூரப் பயணத்தையே பெரும்பாலும் தேர்வு செய்வார்கள். சிலருக்கு அந்தப் பயணத்தில் இயற்கைக் காட்சிகள் முக்கியமாகத் தெரியலாம், சிலருக்கு ஆன்மிக விஷயங்கள் முக்கியமாகத் தெரியலாம். ரஜினிக்கு ஆன்மிகமே அன்றுள்ள சூழ்நிலையில் முக்கியமாக தெரிந்தது.  கொல்லூரை விட ரஜினிக்கு, மந்த்ராலயம் என்னவோ இனிக்கத் தொடங்கியது. கொல்லூர் மூகாம்பிகையிலிருந்து, மந்த்ராலய பக்கம் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். ரஜினிகாந்தின் 100-வது படமான ஶ்ரீ ராகவேந்திரர் வெளியாகும் வரையில், அவர் ராகவேந்திரர் பக்தராக எங்கும் வெளிப்படவில்லை. மணிக்கட்டில் செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட ஶ்ரீராகவேந்திரர் படத்தை கடிகாரம் போல், ரஜினி கட்ட ஆரம்பித்த பிறகுதான். ரஜினியின் விருப்பமான கறுப்புப் பட்டை கைக் கடிகாரத்தையே தங்களின் விருப்பமாக அணிந்து வந்த ரசிகர்கள் அதற்குப் பின், செப்பினாலான ஶ்ரீராகவேந்திரர் வளையத்தைக் கையில் அணிய ஆரம்பித்தனர். ராகவேந்திரர் தான் மந்த்ராலய மகான் என்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரவலாக  அப்போதுதான் அறியப்பட்டது. இங்கேதான் ஒரு விஷயத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ரஜினிகாந்த் நடித்த ஶ்ரீ ராகவேந்திரர் படம் வெளியானது, 1985-ம் ஆண்டு. ஜெயலலிதாவுக்கு எதிராகத் தமிழக அரசியலில் ரஜினிகாந்த்,  'வாய்ஸ்' கொடுத்தது, 1996-ம் ஆண்டு. அதாவது தன்னை முழுமையான  ஶ்ரீ ராகவேந்திரர் பக்தராக  வெளிப்படுத்தி பத்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ரஜினிகாந்த், 'வாய்ஸ்' அரசியலையே கையில் எடுக்கிறார்.  இடைப்பட்ட பத்தாண்டு காலம் வரையில் எந்த இடத்திலும், எந்த மேடையிலும், ஆன்மிக குட்டிக் கதைகள் சொல்வதோ, மேற்கோள்காட்டுவதோ ரஜினியின் பழக்கமாக இல்லை. தமிழக அரசியலில் 1996-ம் ஆண்டு எடுபட்ட ரஜினி வாய்ஸ்,  1998 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2004  நாடாளுமன்றத் தேர்தலிலும் எடுபடவில்லை. தன்னுடைய வாய்ஸ் எடுபடாமல் போனதற்குப் பின்னரே ஆன்மிகப் பாதையில் ரஜினியின் கால்கள் பயணித்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக 1996-ம் ஆண்டு ரஜினிகாந்த் வாய்ஸ்  கொடுத்த போது, 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆசிபெற்ற வேட்பாளர்' என சுவரெழுத்துகளில் வாக்குகேட்டு சிரித்த கருணாநிதி, 2004-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்குப் பின் ரஜினியை தன்னுடைய பாணியிலேயே 'ஊமைக்குத்தாக' குத்தினார்.வடசென்னை மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்த எல்.பலராமனின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி விட்டு, நேரே ரஜினியை அந்த மேடையிலேயே சீண்டினார். "யாரோ பாபாவாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறாராம், இன்னமும் காட்சி கொடுக்கிறாராம். நம்புகிற கதையாகவா இருக்கிறது?" என்று சொல்லி விட்டு  பின், ஒரு குட்டிக் கதையையும் சொன்னார்.

ஶ்ரீராகவேந்திரருக்காக ஶ்ரீராகவேந்திரர் படத்தில் நடித்த ரஜினி, மகா அவதார் பாபாஜியின் பெருமையை உலகுக்குச் சொல்வதாக நடித்திருந்த 'பாபா' படம் வெளிவந்த நேரம் அது. ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்வில் 'அரசியலில் என்னையும், என் பெயரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் ' என்று ரஜினி குமுறியதில் கருணாநிதியின் பாதிப்பும் கொஞ்சம் இருக்கிறது. அதேபோல், அண்மைக் காலமாக ரஜினியை பெரிதும் எதிர்பார்த்து வந்த பி.ஜே.பி-க்கும் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கிறது.சில வாரங்களுக்கு முன் நம்மிடம் பேசிய பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர், "ரஜினியைத்தான் தமிழக பி.ஜே.பி தலைவராகக் கொண்டு வரும் முடிவில் இருந்தோம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளர் கங்கை அமரன், ரஜினியிடம் வாழ்த்து பெற்றது குறித்து  ரஜினி சொன்ன கருத்து, பி.ஜே.பி தலைமையின் முடிவை மாற்றிக் கொள்ள வைத்துவிட்டது.  'கங்கை அமரனை நான் ஆதரிக்கவில்லை' என்று ரஜினி வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். நாங்களும் ரஜினியின் வருகையை எதிர்பார்த்து இனி காத்திருக்கப் போவதில்லை" என்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ரஜினிகாந்த், 'என் வழி தனி வழி' என்ற முடிவைக் கையில் எடுத்திருக்கிறார். ரசிகர்களுடனான சந்திப்பின் போது, உலகத்தின் மத்தியில் தாமரை, அதற்குப் பக்கத்தில் 'கதம், கதம்' என்கிற பாபா வின் விரல் முத்திரையை பின்னணியில்  வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்திருக்கிறார். 
                                                           ரஜினிகாந்த்                      ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடந்த சி.பி.ஐ ரெய்டு, ரஜினியின் தனிக்கட்சியைத் தடுக்கும் அச்சுறுத்தலே. ஏனென்றால் ப.சிதம்பரம் ரஜினியின் நண்பர் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள். ரஜினி ரசிகர்களின் எண்ணவோட்டமோ வேறுமாதிரி இருக்கிறது... "மக்களை பெரிதும் பாதிக்க வைத்த பண மதிப்பிழப்பு விவகாரம், தமிழ்நாட்டு அரசியலில் பி.ஜே.பி ஆதிக்கம், ஒவ்வொரு முறையும் சந்தேகத்தை வரவழைக்கும்  ரெய்டுகள் என இப்படி பல விஷயங்கள் தலைவரை மிகவும் வேதனையில் ஆழ்த்தி விட்டது. இதற்குப் பின்னும் பி.ஜே.பி-க்கு ஆதரவான மனநிலையில் இருப்பது சரியல்ல என்ற முடிவுக்கு  உறுதியாக அவர் வந்து நான்கு மாதங்கள் ஆகி விட்டது. இனி ஒருபோதும் பின் வாங்க மாட்டார்" என்கின்றனர்.மாறி மாறி வீசிக் கொண்டிருக்கும் அரசியல் சூறாவளியில் ரஜினி போன்றவர்களை வெளியில் தூக்கிப் போட உணர்வுப் பூர்வமான சில விஷயங்களைத் தொட்டாலே போதும் என்பதே 'அரசியல் அறம்' ஆகி விட்ட நிலையில்தான் ரஜினி சுதாரித்திருக்கிறார். "இங்கிருந்து வெளியே போ என்று சொல்லி என்னைத் தூக்கிப்போட்டால் நான் இமயமலையில்தான் போய் விழுவேனே தவிர,  எந்தவொரு மாநிலத்துக்கும் போய் விழமாட்டேன். தமிழ் மக்கள், நல்ல மக்கள், நல்ல உள்ளங்கள் இருக்கிற பூமியில் நான் இருக்க வேண்டும். இல்லையென்றால் சித்தர்கள் இருக்கின்ற இமயமலையில் இருக்க வேண்டும்" என்று  ரசிகர்கள் மத்தியில் ரஜினி சொன்னது வெறும் செய்தியல்ல.  அடுத்து நடக்கவிருக்கும் அத்தனை விவகாரத்துக்குமான பாதுகாப்பு அது.. ரஜினிகாந்தின் இந்த 'இமயமலை அரசியல்' யுக்தி மற்ற கட்சிகளை விட பி.ஜே.பி.யை அதிகமாகவே காயப்படுத்தியிருக்கிறது... ரஜினியின்  வாய்ஸ் வெளியான முதல் இரண்டு நாட்கள் ரஜினியை விமர்சித்த பி.ஜே.பி. அடுத்து வந்த நாட்களில் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பொன்னார், தலைநகரில் அமித்ஷா என்று ஆளாளுக்கு ரஜினியை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்... அரசியலுக்கு வரச்சொல்லித்தான், ஆனால் பி.ஜே.பி. அரசியலுக்கு...

இது ஒருபக்கம் இருக்க, ரஜினியின் இமயமலை 'ஸ்டேட்மென்ட்' என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும், எப்படிப்பட்ட பாதுகாப்பினை ரஜினிக்குக் கொடுக்கும் ?   ரஜினி ஒரு கன்னடர், ரஜினி  வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்கிறது, தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்காக ரஜினி செய்தது என்ன ? காவிரிக்காக குரல் கொடுத்தாரா, முல்லைப் பெரியாறுக்கு, கிருஷ்ணா நதி நீருக்கு ரஜினி குரல் கொடுத்தாரா என்கிற கேள்விகளுக்கு  ரஜினி தயாரித்து வைத்த பதில்தான்,  'தமிழ்நாடு எனக்கு இல்லையென்றால் நான் இமயத்துக்குத்தான் போவேன்' என்ற பதில். இந்த பதிலுக்குப் பின்னால் ரஜினி மீது மக்களுக்கு  கருணை பிறக்கலாம்,  ரஜினியின் இந்த பதில் விவாதிக்கப் படலாம், ரஜினி தமிழர் அல்ல என்பதால் மட்டுமே புறக்கணிக்கப்படவேண்டும் என்ற கருத்து வலுவாக கொண்டு போகப் பட்டால் அது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கே எதிராகத் திரும்பலாம். மொத்தத்தில் இந்த முறைதான் ரஜினியின் வாய்ஸ், மிகுந்த சக்தியுடன் வெளிப்பட்டிருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்