வெளியிடப்பட்ட நேரம்: 00:31 (22/05/2017)

கடைசி தொடர்பு:09:45 (22/05/2017)

மருத்துவர்களுக்கு விஜயபாஸ்கர் கூறும் அறிவுரை இதுதான்..!

அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.


திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் , 'மிகவும் பின்தங்கிய ஊரில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் ஏழை எளிய கிராமப்புற மக்கள் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 212 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாநில அளவில் 1,272 மருத்துவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 9,990 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு விரைவில் 65 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படுவதுடன் மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். சுகாதாரத்துறையில் மருத்துவர்கள் களப்பணியாளர்கள், செவிலியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகிறார்கள். 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் பிரசவங்களைப் பார்த்துக்கொள்ளலாம்.

பிரசவ காலம் முடிந்தவுடன் தாய்சேய் இருவரையும் தாய்சேய் வாகன சேவையான 104 ஆம்புலன்ஸ் மூலம் இல்லத்துக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பிரசவம் முடிந்ததும் அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்காக 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 8 லட்ச ரூபாய் மதிப்பில் காது கேட்காத வாய் பேச இயலாத 33 குழந்தைகளுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகமலர்ச்சியோடு சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும்' என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க