வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (22/05/2017)

கடைசி தொடர்பு:12:38 (22/05/2017)

ரஜினிகாந்த் மீது அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!

நடிகர் ரஜினிகாந்த்தை அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது ரசிகர்களை ஆண்டுதோறும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த், திடீரென ரசிகர்களைச் சந்திப்பதை நிறுத்திவிட்டார். பல ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்த ரசிகர்களுக்கு, கடந்த வாரம் இன்ப அதிர்ச்சிகொடுத்தார், ரஜினி. அதன்படி, கடந்த திங்கள் அன்று மாவட்டம் வாரியாக ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது. ஐந்து நாள்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், 'தமிழக அரசு செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது' என்று விமர்சித்தார். மேலும், 'தமிழக அரசியல் சிஸ்டம் கெட்டுப்போய்க் கிடக்கிறது' என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசை விமர்சித்த ரஜினிகாந்த்தை ஆளும் கட்சியினர் விமர்சித்துவருகின்றனர். மதுரையில் இன்று, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"ரஜினிகாந்த் ஒரு வியாபாரி. இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்துவிட்டனர். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை. கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் அறிவார். நடிகர்கள் களம் காணும் கட்சிகளால் பலனில்லை" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.