வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (22/05/2017)

கடைசி தொடர்பு:14:18 (22/05/2017)

தூத்துக்குடி துறைமுகத்துக்கு சிறப்பு விருது!

தென்னிந்தியாவின் துடிப்பான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு, மத்திய கப்பல்துறை அமைச்சகத்தால் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 

Turticorin Harbour

 2016- 2017 நிதியாண்டில், அனைத்து இந்தியப் பெருந்துறைமுகங்களும் சேர்த்து, மொத்தம் 100.37 மில்லியன் டன்கள் சரக்கு கையாளும் திறனை அதிகரித்த வேளையில், தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மட்டும் 44.94 மில்லியன் டன்கள் சரக்கு கையாளும் திறனை அதிகரித்துள்ளது மிகவும் சிறப்பம்சமாகும். 

இந்தத் துறைமுகம், கடந்த நிதி ஆண்டில் 38.64 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு, அதற்கு முந்தைய ஆண்டு சாதனையான 36.85 மில்லியன் டன் சரக்குகளைவிட 4.37 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதிக சரக்குகளைக் கையாளும் அபிவிருத்தித் திட்டப்பணிகளுக்காகவும், கப்பல் தளத்துக்கு வந்த சரக்குகள், கையாளப்பட்டு வெளியே செல்லும் வரையுள்ள சராசரி கால அளவு குறைந்தமைக்கும், கூடுதல் இயக்க உபரி வருவாய் பெற்றதற்கும், தூய்மை பாரதத் திட்டம் மற்றும் சரக்குகளைக்  கையாளும் திறன் மேன்மை ஆகியவற்றுக்காக, கப்பல்துறை அமைச்சகத்தால் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 

கோவாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார். இது தவிர, கடந்த நிதியாண்டில் நிலக்கரி தளம் மேம்படுத்தும் திட்டம், வடக்கு சரக்கு தளம் கட்டமைப்புத் திட்டம், குறைந்த மிதவை ஆழம்கொண்ட கட்டுமானப் பொருள்கள் கையாளும் கப்பல்தளம், வ.உ.சி கப்பல்தளம் மற்றும் கூடுதலாக நகரும் பழுதூக்கி இயந்திரம் நிறுவும் திட்டம் ஆகிய நான்கு சரக்குகளைக் கையாளும் திறன் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பணி ஆணையும் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்களால், தற்போதைய ஆண்டின் சரக்குகள் கையாளும் திறனான 46.78 மில்லியன் டன்களில் இருந்து மேலும், கூடுதலாக 44.94 மில்லியன் டன்கள் சரக்கு அதிகரிக்கும். 

துறைமுக ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பால்தான் இந்த விருது கிடைத்துள்ளதாக வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் ஆனந்த சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க