இன்ஜினீயரிங் மாணவிக்கு சென்னை கல்வி வளாகத்தில் நேர்ந்த கொடுமை!?'

சென்னை ஐ.ஐ.டி

சென்னை ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவிக்கு கல்வி வளாகத்திலேயே நிகழ்ந்த பாலியல் கொடுமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐ.ஐ.டி.) என்ற கல்வி வளாகம் அடையாறில் உள்ளது. இங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவி, விடுதியில் தங்கி இன்ஜினீயரிங் படித்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரவு 9 மணியளவில் மாணவி, கல்வி வளாகத்தில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, அவரை சில இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இருட்டான பகுதியில் மாணவி சென்ற போது, அந்த இளைஞர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அப்போது ஓர் இளைஞர், மாணவியிடம் அத்துமீறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத மாணவி, 'ஹெல்ப்..ஹெல்ப்' என்று சத்தம் போட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.  அதைப் பார்த்த இளைஞர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

 


அதையடுத்து நடந்த சம்பவத்தை மாணவி, அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கதறி அழுதுள்ளார். அதன்பிறகு, தகவல் ஐ.ஐ.டி உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரம் போலீஸில் நடந்த சம்பவம்குறித்துத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, மாணவியிடம் ஒரு இளைஞர் அத்துமீறும் சம்பவம் அதில் பதிவாகியிருந்தது. 


அந்தப் பதிவில் உள்ள இளைஞரை போலீஸார் தேடினர். அவர், சென்னையைச் சேர்ந்த இன்ஜினீயர் அந்தோணி என்பது தெரியவந்தது.  பாதிக்கப்பட்ட மாணவி, போலீஸில் புகார் கொடுக்க மறுத்துவிட்டார். மேலும், இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால், சென்னை     ஐ.ஐ.டி-க்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கருதி, யாரும் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸார், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகச் சொல்லி, சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் அந்தோணியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 
 இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த சம்பவம் உண்மைதான். பாதிக்கப்பட்ட மாணவி, எங்களிடம் புகார் கொடுக்கவில்லை. இருப்பினும், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்தோணியைக் கைது செய்துள்ளோம். மாணவி புகார் கொடுக்காததால், அந்தோணி மீது வேறு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி வளாகத்தில் அந்நியர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. அதையும் மீறி அந்தோணி எப்படி ஐ.ஐ.டி வளாகத்துக்குள் சென்றார் என்று விசாரித்தபோது, அவர், புராஜெக்ட்டுக்காக அங்கு செல்வது வழக்கமாம். புராஜெக்ட் தொடர்பாகச் சென்ற இடத்தில்தான் தனியாகச் சென்ற மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது"என்றார். 

 இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தில் கேட்டபோது, 'அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை' என்று தெரிவித்தனர். ஆனால், நடந்த சம்பவத்தை போலீஸார் உறுதிப்படுத்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!