ஸ்டாலினை ஏன் சந்திக்கவில்லை மோடி? - பிரதமர் அலுவலக லாபி #VikatanExclusive

ஸ்டாலின்

பிரதமர் நரேந்திரமோடியை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்ததை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ‘பிரதமரை சந்திக்க கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள் மூலம் முயன்றும் பி.எம்.ஓ அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. அந்தக் கோபத்தை தற்போது வெளிப்படுத்துகிறார் ஸ்டாலின்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

தமிழகம் முழுவதும் கோயில் குளங்களைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தி.மு.க உடன்பிறப்புகள். நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் வடிவுடையம்மன் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார் ஸ்டாலின். அப்போது பேசியவர், ‘கோயில் குளங்களைத் தூர்வாரக் கூடிய பணிகளை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனித்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதற்கான மனம் இல்லை. 'நேரம் இல்லையா, விருப்பம் இல்லையா?' எனச் சொல்ல இயலாத நிலையில் ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது' என விமர்சித்தவர், 'இரண்டு நாள்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர் இப்போது எந்தவிதப் பொறுப்பிலும் இல்லை. சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். ஆனால் அவர் சந்திக்க நேரம் கேட்டவுடன், உடனடியாக அனுமதி கொடுக்கப்படுகிறது. அதைத் தவறு என்று சொல்லவில்லை. முதல்வராக இல்லாதவரை உடனடியாக சந்தித்து, அரை மணி நேரம் பேசியதாக செய்திகள் எல்லாம் வருகின்றன. ஆனால், நான் கேட்க விரும்புவது, தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்னைகள் எல்லோருக்கும் தெரியும். அந்த விவசாயிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது, பிரதமர் அதற்கு நேரம் கொடுக்கவில்லை. ‘எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டாலும், எங்களது பிரச்னைகளை சொல்வதற்கு பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும்' என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தபோதும்கூட அவர்களைப் பார்க்க பிரதமர் மறுக்கிறார். 

கனிமொழிஅதுமட்டுமல்ல, விவசாயிகளின் பிரச்னைகளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாம் கூட்டினோம். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரதமரிடம் வழங்குவது என்றுகூட ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் நீங்கள் சந்திக்காவிட்டாலும், அனைவரின் சார்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வருகிறேன். தங்களிடம், 'கோரிக்கை மனு வழங்க வேண்டும்' எனப் பலமுறை கேட்டு, பல நாள்கள் காத்திருந்தோம். ஆனால், பிரதமரின் அலுவலகத்தில் இருந்தோ, இல்லத்தில் இருந்தோ எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை. ஆனால், எந்தவிதப் பொறுப்பிலும் இல்லாத ஒருவரை பிரதமர் இன்றைக்கு அழைத்துப் பேசுகிறார். பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துப் பேச பிரதமருக்கு மனம் வரவில்லை என்றால், நாடகத்தை நடத்திக்கொண்டிருப்பது தி.மு.க.வா அல்லது தி.மு.க.வை விமர்சனம் செய்பவர்களா என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்' என விளக்கினார்.

‘பிரதமர் அலுவலகம் ஏன் சந்திப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை?' என்ற கேள்வியை பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "பா.ஜ.கவைப் பொறுத்தவரையில், எந்தக் கட்சியின் மீதும் ஏற்றத்தாழ்வைக் காட்டுவதில்லை. டெல்லியில் உள்ளவர்களைப் பொறுத்தவரையில், சில விஷயங்களுக்கு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரை அணுகுவார்கள். அப்படித்தான், ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மசோதா விவகாரத்தில், தி.மு.கவின் ஆதரவைப் பெறுவதற்காக கனிமொழியின் உதவியை நாடினார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அந்த நேரத்தில் ஜி.எஸ்.டியை கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. அதையே காரணமாக வைத்து, ‘பா.ஜ.க அரசிடம் இருந்து ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்த பிரதமர் மோடிஇதுவே சரியான நேரம்’ எனக் கணக்கு போட்ட கனிமொழி, ‘ஜி.எஸ்.டி மசோதாவை நாம் ஆதரிக்க வேண்டும்’ என கருணாநிதியிடம் கோரிக்கை தெரிவித்தார்.

மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, தி.மு.கவும் ஆதரித்தது. அந்தநேரத்தில், ‘ஜி.எஸ்.டிக்காக மாநில உரிமையை ஜெயலலிதா காப்பாரா அல்லது மோடியின் நண்பராக ஆதரிப்பாரா?' என்ற விவாதமும் எழுந்தது. இறுதியாக, மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரத்தில் தி.மு.கவின் ஆதரவு கிடைத்ததில், கனிமொழிமீது மோடிக்கு மதிப்பு ஏற்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கருணாநிதி ஆதரித்து அறிக்கை வெளியிட்டபோது, ‘தி.மு.க தலைவரின் அறிக்கையைப் பார்த்தேன். நன்றி’ என கனிமொழியிடம் கூறினார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற மைய மண்டபத்தில், கனிமொழியை சந்திக்கும்போதெல்லாம், ‘அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?’ எனக் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதையெல்லாம் தி.மு.கவில் உள்ள சிலர் ரசிக்கவில்லை” என விவரித்தவர், 

“கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா மூலம் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டார் ஸ்டாலின். அவர் அனுமதி கேட்டதைப் பற்றி, கனிமொழியிடம் பேசிய பி.எம்.ஓ அலுவலக அதிகாரி ஒருவர், ‘உங்கள் தரப்பில் இருந்து பிரதமரை சந்திக்க அனுமதி கேட்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார். இதைப் பற்றி ஸ்டாலினிடம் கனிமொழி கூறியிருக்கிறார். தி.மு.கவுக்குள் உள்அரசியல் நடப்பதை அறிந்த பிரதமர் அலுவலகமும் ஸ்டாலின் சந்திப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. இதன்பிறகு, காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்கும் வேலையில் இறங்கினார் ஸ்டாலின். இதற்குக் கருணாநிதியின் வைரவிழாவைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார். இந்த விழாவிலும் கனிமொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் உள்பட அகில இந்திய அளவில் முக்கியத் தலைவர்களை விழாவுக்கு அழைக்கும் பணியை கனிமொழியிடம் ஒப்படைத்திருக்கிறார் ஸ்டாலின். ‘பா.ஜ.கவின் நோக்கத்தால் கட்சிக்குள்ளேயே இரண்டு அணிகள் உருவாகிவிடக் கூடாது’ என்பதற்காகத்தான் கனிமொழி முன்னிறுத்தப்படுகிறார். பிரதமரைப் பொறுத்தவரையில், பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒன்று சேர்த்து, ஸ்டாலினுக்கு எதிரான அணியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த அணிக்குள் புதிதாக சிலர் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என்றார் உறுதியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!