அமைச்சர்கள் நடத்தும் யாகம் இதற்காகத்தான்! | TN Ministers holds special pooja for rain

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (22/05/2017)

கடைசி தொடர்பு:14:55 (22/05/2017)

அமைச்சர்கள் நடத்தும் யாகம் இதற்காகத்தான்!

தமிழகத்தில் மழை வேண்டி அமைச்சர்கள் கோயில்களில் யாகம் நடத்தியும், சிறப்பு பூஜைகளும் செய்தனர்.

எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்தாண்டு தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயப் பயிர்கள் கருகியதோடு, குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. முக்கியமான அணைகளும் வற்றி வருவதால் மேலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், மழை வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள் யாகம் நடத்தியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வருகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மழைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் யாகம் செய்து வழிபட காலை 9 மணி முதல் 10 மணிக்குள் முடிக்க நல்ல நேரம் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் சமஸ்தான குமரன் சேதுபதி (ராஜா) மற்றும் பொதுமக்கள் காத்திருந்தும், அமைச்சர் வராததால் கோபத்தில் சென்று விட்டனர். தாமதமாக 11 மணிக்கு வந்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எமகண்ட நேரத்தில் மழைக்காக பூஜை செய்தார்.

தேனி மாவட்டம் போடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மழை வேண்டி வருண ஜெப யாகம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட அ.தி.மு.க அம்மா அணியின் மாவட்டச் செயலாளரும் ஆண்டிபட்டி  சட்டமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ்செல்வன் தலைமையில் யாக பூஜை நடைபெற்றது. இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர் பங்கேற்றனர்.