'போராட வர மாட்டார்... ஓட்டு போட நாங்க வேணுமா?’ ரஜினி மீது பாயும் வீரலெட்சுமி | Tamizhar Munnetra Padai leader Veeralakhsmi Slams actor Rajinikanth

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (22/05/2017)

கடைசி தொடர்பு:15:53 (25/05/2017)

'போராட வர மாட்டார்... ஓட்டு போட நாங்க வேணுமா?’ ரஜினி மீது பாயும் வீரலெட்சுமி

ரஜினி பற்றி வீரலெட்சுமி கருத்து

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் ஒவ்வொரு நாளும் அரசியல் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்தார். கடைசி நாளன்று பேசுகையில், "போருக்குத் தயாராகுங்கள்" என்று சொல்லி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில், தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த கி.வீரலெட்சுமி போயஸ்தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தை முற்றுகையிடச் சென்று, போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டை காந்திமதி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரிடம், "ஏன் இந்த திடீர் முற்றுகை?" என்ற கேள்வியோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

"ரஜினிகாந்த், தமிழகத்தில் வாழ்ந்துள்ள இந்த 42 ஆண்டுகாலத்தில் தமிழ் மக்களின் என்னென்ன பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்? காவிரி நதி நீர் பிரச்னையில் துவங்கி, தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னை வரை அவர் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். தமிழகத்தில், தமிழர்களால் சம்பாதித்த பணத்தை கர்நாடகாவுக்குக் கொண்டுசென்று ஒன்றுக்கு, இரண்டாக தொழிற்சாலைகளை நிறுவி அங்கிருக்கும் கன்னட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'தலைவா' என்று துடிக்கும் தமிழக இளைஞர்கள் ரஜினியின் கண்ணுக்குத் தெரியவில்லையா?

காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது மட்டுமல்லாமல், பலரது உயிர்களும் பறிக்கப்பட்டன. அப்போது, நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் நடிகர் சங்கங்களில் ஒரு தமிழன் போட்டிபோட முடியுமா? அல்லது வாக்களிக்க முடியுமா? ஆனால், அந்த மூன்று மாநிலங்களின் நடிகர்களும் இங்கிருக்கும் நடிகர் சங்கங்களில் போட்டி போடுகிறார்கள். தங்களின் ஆளுமையைச் செலுத்துகிறார்கள். இது தமிழ் நடிகர்களுக்கு எதிரானது. இது அவருக்குப் புரிகிறதா? அல்லது புரியாதது போல இருக்கிறாரா? எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தைச் சுற்றி இருக்கும் மூன்று மாநிலங்களும், தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நதிகளில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக, ரஜினிகாந்த் இதுவரை குரல் எழுப்பி இருக்கிறாரா? துண்டு அறிக்கைதான் வெளியிட்டிருக்கிறாரா? பருவமழை பொய்த்துப்போய் நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது, ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் பண உதவிகூட கொடுக்கவில்லையே இவர்.

'கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் எங்கள் தந்தையார் பிறந்தார், எங்கள் பூர்வீகமே கிருஷ்ணகிரிதான்' என்று சொல்லும் இதே ரஜினிகாந்த், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் பிழைப்பு தேடி ஆந்திராவுக்குச் சென்றபோது... ஆந்திர வனத்துறையால் திட்டமிட்டு படுகொலை செய்யப்படபோது ஒரு கண்டன அறிக்கையைக்கூட பதிவு செய்யவில்லையே? லட்சக்கணக்கான தமிழ் மக்கள், ஈழத்தில் கொத்துக்கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டபோது, வைக்கோல் போருக்குள் ஒளிந்திருந்தாரா ரஜினிகாந்த்? பச்சைத் தமிழன் என்று சொல்லும் இவர், இனவாத சிங்கள அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கலாமே?  அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது 'போருக்குத் தயாராகுங்கள்' என்று சொல்கிறார். உலகிலேயே முதன் முதலாக பிரமாண்ட கடற்படையை கட்டமைத்து உலகம் முழுவதும் போரிட்டு தனது எல்லைகளை விரிவாக்கியது தமிழர் இனம். அப்படிப்பட்ட இன மக்கள் வாழும் இந்த மண்ணுக்குப் பஞ்சம் பிழைக்க வந்த ரஜினிகாந்த், போருக்கு அறைகூவல் விடுக்கிறார்.! தமிழர்களுக்கே போரா? ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும்; வரவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் போய் அரசியல் செய்யட்டும். இனி தமிழர் அல்லாதவர் தமிழகத்துக்கு வரலாம்; வாழலாம். ஆனால் அரசியலும், ஆட்சி அதிகாரமும் தமிழர்களுக்கு மட்டும்தான்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்