வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (22/05/2017)

கடைசி தொடர்பு:19:02 (29/05/2017)

வேலையிழப்பு அச்சத்தில் 67.3% ஐடி ஊழியர்கள்! #VikatanSurveyResult

ஐ.டி.துறை வேலை

இந்தியாவில் செயல்படும்  7 முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆண்டுக்குள் 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஐ.டி ஊழியர்கள் மத்தியில் மிகுந்த பதைபதைப்பை உருவாக்கி இருக்கிறது. கடந்த மாதம்வரை, `நிறுவனத்தின் தூண்’ எனக் கொண்டாடப்பட்டவர்கள், சிறந்த ஊழியருக்கான விருது பெற்றவர்களை எல்லாம், `உங்கள் பணித்திறன் சரியில்லை’ எனக் கூறி, ராஜினாமா கடிதம் கேட்கிறார்கள். அப்படி செய்ய மறுக்கும் ஊழியர்களை, `பிளாக் லிஸ்ட் செய்து எதிர்காலத்தைக் கெடுத்துவிடுவோம்’ என மிரட்டுகிறார்கள் என்றெல்லாம் புகார்கள் எழுந்துள்ளன. 

இந்தச்சூழலில் ஐ.டி. ஊழியர்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள விகடன்  ஒரு சர்வே நடத்தியது. லட்சங்களில் சம்பளம்... வீக் எண்ட் பார்ட்டி, வெளிநாட்டுப் பயணம், கவலையே இல்லாத வாழ்க்கை என ஐ.டி ஊழியர்கள் பற்றி நிறைய கற்பிதங்கள் பொதுவெளியில் இருக்கின்றன. அந்த கற்பிதங்களைப் பொய்யாக்கி இருக்கிறது இந்த சர்வேயின் முடிவு. 

இந்த சர்வேயில்  10 ஆண்டுகளுக்கு மேல் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் 31.8 சதவீதம் பேரும், 5 முதல் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 30.1 சதவீதம் பேரும், 2 முதல் 5 ஆண்டுகள் பணியாற்றும்  22.6 சதவீதம் பேரும், 2 ஆண்டுகளாகப் பணியாற்றும்  15.5 சதவீதம் பேரும் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சர்வேயில் பங்குபெற்றவர்களில் 61.9% பேர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் என்பதால், இந்தத் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோரின் குரலாகவே இதைக் கொள்ளலாம்.  

ஐ.டி. துறை சர்வே
 

சர்வேயில் பங்கேற்றவர்களில் 30 சதவீதம் பேர், ஒரே நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்கள். 16 சதவீதம் பேர் 5 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள். 31 சதவீதம் பேர்  2 முதல் 4 ஆண்டுகளும், 23 சதவீதம் பேர் 3 ஆண்டுகளும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.  

ஐ.டி துறை சர்வே
 

சர்வேயில் பங்கேற்ற 8 சதவீதம் பேருக்கு சொந்த வீடு, கார் இருக்கிறது. 25 சதவீதம் பேருக்கு சொந்த வீடு இருக்கிறது. 20 சதவீதம் பேரிடம் இரண்டும் இருக்கிறது.  47 சதவீதம் பேருக்கு சொந்த வீடோ, காரோ இல்லை. ஆக, ‘அவங்களுக்கென்னடா? சொந்த காரும், வீடும் இருக்கும்’ என்ற யூகத்திற்கும் அடி. இருப்பவர்களுக்கும் எத்தனை EMI பாக்கி இருக்குமோ!    

ஐ.டி.துறை சர்வே

 

46 சதவீதம் பேர் பணிச்சுமை காரணமாக கடும் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். 38 சதவீதம் பேர் அவ்வப்போது மன அழுத்தத்தை உணர்கிறார்கள். 16 சதவீதம் பேர் 'பணி காரணமாக மன அழுத்தம் இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஐ.டி துறை சர்வே
 

சர்வேயில் பங்கேற்ற 14.2 சதவீதம் பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் 50 முதல் 100 சதவீதம் சம்பளம் உயர்ந்திருக்கிறது. 20.6 சதவீதம் பேருக்கு 25 முதல் 50 சதவீதமும், 24 சதவீதம் பேருக்கு 10 முதல் 20 சதவீதமும் 41.2 சதவீதம் பேருக்கு 5 முதல் 10 சதவீதமும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிறுவனங்கள் 5-10 சதவீத உயர்வைக் கொடுத்தே பணியாளர்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன எனலாம். அதுவும் ஐந்து வருடங்களில்! 

ஐ.டி.துறை சர்வே

53.1 சதவீதம் பேர் பணிப் பாதுகாப்பின்மையை அடிக்கடி உணர்கிறார்கள். 34.7 சதவீதம் பேருக்கு எப்போதேனும் அந்த அச்சம் ஏற்படுகிறது. 12.2 சதவீதம் பேர், 'அப்படி எந்த அச்சமும் இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்கள். 

ஐ.டி.துறை சர்வே

 

‘வாழ்க்கையில் முழுமையாக செட்டில் ஆகிவிட்டதாக உணர்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு 17.1 சதவீதம் பேர் ஓரளவுக்கு செட்டில் ஆகியுள்ளதாக தெரிவிக்கிறார்கள். 2.4 சதவீதம் பேர் மட்டும் 'ஆம்' என்று தெரிவிக்கிறார்கள். அதிர்ச்சிகரமாக 80.5 சதவீதம் பேர் 'இல்லை' என்ற பதிலை அளித்திருக்கிறார்கள்.

ஐ.டி.துறை சர்வே

H1B விசா விவகாரத்தில், 'அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கை குழப்பமாக இருக்கிறது' என்று 46 சதவீதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். 'தவறானது' என்று 29.5 சதவீதம் பேர் தெரிவிக்கிறார்கள். 24.5 சதவீதம் பேர் 'நியாயமானது தான்' என்கிறார்கள். 
 

ஐ.டி.துறை சர்வே

74.1 சதவீதம் பேர் ஐ.டி ஊழியர்களுக்குத் தொழிற்சங்கம் தேவை என்று தெரிவிக்கிறார்கள். 10.2 சதவீதம் பேர் தேவையில்லை என்கிறார்கள்.  15.6 சதவீதம் பேர் இந்தக் கேள்விக்கு, கருத்துச் சொல்ல விரும்பவில்லை. 

ஐ.டி. துறை சர்வே

‘ உங்கள் குடும்பம் உங்கள் வருமானத்தை மட்டும் நம்பியிருக்கிறதா?’ என்ற கேள்விக்கு  78.5 சதவீதம் பேர் 'ஆம்' என்கிறார்கள். 21.5 சதவீதம் பேர் 'இல்லை' என்கிறார்கள். 

ஐ.டி.துறை சர்வே

 

வேலை போய்விடும் என்ற அச்சம் இருக்கிறதா என்ற நேரடியான கேள்விக்கு 14.9 சதவீதம் பேர் 'இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்கள். 17.8 சதவீதம் பேரை இந்த சூழல் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 67.3 சதவீதம் பேர் 'ஆமாம்... அச்சமாகத் தான் இருக்கிறது' என்ற உறுதியான பதிலை அளித்திருக்கிறார்கள். இது ஐ.டி ஊழியர்களின் மன உளைச்சலைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

ஐ.டி.துறை சர்வே


கடும் பணிச்சுமை, சமூகத்தோடு தொடர்பில்லாத சூழல், தனித்த வாழ்க்கை என்றிருந்த ஐ.டி ஊழியர்களை நிறுவனங்களின் தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கை பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்ற நிலையை இந்த சர்வே முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்