மதுவால் மரணமா? மகளிரிடம் பொங்கிய மாவட்ட ஆட்சியர்!

சிவகங்கை வாரச்சந்தை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் சிவகங்கை தொண்டி சாலை, மாக் குடோன் பின்புறம் அமைந்துள்ள ராகினிபட்டி கிராமத்தின் அருகிலுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

sivagangai

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மனு கொடுத்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கை மாநகர் சி.பி.எம் நகர செயலாளரும், வழக்கறிஞருமான மதி இதுகுறித்து பேசும் போது, ’மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, டாஸ்மாக் கடையை இங்கே வைக்க வேண்டாம் என்றால் வேறு எங்கே கடையை வைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்' எனக் கேட்டார். 'அதை நீங்கள் முடிவு செய்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் வைப்பது உங்கள் பொறுப்புதான்' எனத் தெரிவித்தோம். 'ஆனால் ஆட்சியர், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மதுக்கடையை அகற்றுவோம் என தெரிவிக்கவில்லை. மதுக்கடைக்கு அருகில் பள்ளிகள், கோயில்கள், வட்டாட்சியர் அலுவலகம், வங்கிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கவில்லை', என்றார்.

இதே போல் மதகுபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி இரண்டாவது முறையாக மனு கொடுத்த மகளிர் தனலெட்சுமி, ’பெண்களே மதுக்கடையை அகற்றச் சொன்னால் உங்கள் மகளிர் குழுவுக்கு எப்படி லோன் கொடுக்க முடியும். மதுக்கடையை அகற்ற உங்களுக்கு என்ன அக்கறை என்று கேட்டார் ஆட்சியர்.' மேலும், 'மதுக்குடிப்பவர்கள் காலி பாட்டில்களை அந்த பகுதி முழுவதும் போட்டுவிட்டு செல்கிறார்கள்' என்று  சொன்னதற்கு, 'காலி பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதை பொறுக்கி நீங்கள் விற்கலாமே? என்று கோபத்தோடு ஆட்சியர் சொல்கிறார்' என்று வேதனைப்பட்டார். 

நேற்றுகூட குடித்து விட்டுச் சென்ற ஒருவர் விபத்தில் இறந்து விட்டார் என சொன்னதற்கு, 'அதைபற்றி உனக்கு என்னம்மா அக்கறை. அவர் குடித்துவிட்டுத்தான் இறந்தார் என உனக்கு தெரியுமா?' என்று கேட்கிறார். 'நேற்று காரைக்குடியில் இரண்டு கார்கள் மோதி பலர் இறந்துள்ளனர். அவர்கள் என்ன குடித்துவிட்டு போய் விபத்து ஏற்படுத்தினார்களா?' எனக் கேட்டு அந்த பெண்ணை நோகடித்து அனுப்பினார் ஆட்சியர். 'கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கையோடு வரும் சாதாரண மக்களை, பெண்களை இப்படி நோகடித்து அனுப்புவது, டாஸ்மாக் மதுக்கடைக்கு மாவட்ட ஆட்சியர் ஆதரவாக இருப்பாரோ? என்று சந்தேகத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இனி அலட்சியப்படுத்தும் ஆட்சியரை நம்பக்கூடாது. பிரச்னைக்குரிய மதுக்கடைக்கு முன்பு ஊரை திரட்டிப் போராடினால் கலெக்டர் அங்கே வரட்டும் அப்ப நாங்க கேள்வி கேட்போம்’ என்றார் தனலெட்சுமி.

- தெ.பாலமுருகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!