வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (22/05/2017)

கடைசி தொடர்பு:19:48 (22/05/2017)

''ஒரே தெருல 82 டாஸ்மாக் விதவைகள்... இன்னும் 50 தாலி ஊசலாடுது!'' - காரைக்கால் பயங்கரம்

காரைக்கால் டாஸ்மாக்

மிழ்நாட்டில் உள்ள அத்தனை மூலை முடுக்குகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆவேசத்தோடு அடித்து நொறுக்குகிறார்கள் பெண்கள். இத்தனை போராட்டங்கள் நடந்தும் தமிழக அரசோ மெளனம் சாதித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ''எங்கள் தெருவில் மட்டும் டாஸ்மாக்கினால் விதவையான பெண்கள் 82 பேர் இருக்கிறார்கள். 50 பேரின் தாலி ஊசலாடும் நிலையில் இருக்கிறது'' என்று பேரதிர்ச்சியை அள்ளிக் கொட்டுகிறார்கள் காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அருகே மேலையூர் மாதாகோவில் தெருவாசிகள். அவர்களைச் சந்தித்தோம்.

சாந்திமேரி காரைக்கால்

“என் பேரு சாந்திமேரி. ஊரறிய, உலகறிய உலகநாதனைக் கல்யாணம் பண்ணிகிட்டு இந்த ஊருக்கு வந்தேன். அப்பவே இங்கன டாஸ்மாக் கடை இருந்தது. மனுஷன் மூணுவேளை வீட்டுல சாப்பிடுவாரோ இல்லையோ, வேளை தவறாம நல்லா குடிப்பார். சம்பாதிச்ச பணத்தை எல்லாம் குடிச்சே அழிச்சார். அவர் குடிச்சது போக மீதம் இருக்கிற பணத்தை அவர்கிட்ட கேட்டுக் கெஞ்சி கூத்தாடி வாங்கி குடும்பம் நடத்தணும். எதிர்த்துக்கேட்டா அடிதடி, வம்புச் சண்டைனு வீடே ரணகளமாகும். இந்த லட்சணத்துல எங்களுக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு பொறந்தாங்க. மூத்தபுள்ளைக்கு கண்பார்வை கிடையாது. கஷ்டப்பட்டுப் படிக்கவைக்கிறேன். அதுக்குள்ளார என் வீட்டுக்காரருக்குக் கல்லீரல் பிரச்னைன்னு வைத்தியம், அப்புறம் கிட்னி பெயிலியர்னு ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா அலைஞ்சு அவரும் கடைசியா கல்லறைக்கு போய்சேர்ந்திட்டார். அவர்தான் குடும்பத்துக்குனு வாழாமல் குடியே கதின்னு வாழ்ந்து வாழ்க்கையை முடிச்சிட்டார். நானும் அப்படி நடந்துக்க முடியுமா என்ன... புள்ளைங்களுக்காக வாழணுமே. நித்தம், நித்தம் வெந்துசாகறேன். பையனும், பொண்ணும் பிளஸ்டூல நல்ல மார்க் எடுத்திருக்காங்க. ‘எங்கள காலேஜ் படிக்கவைங்கமா, வேலைக்குப்போய் கைநிறைய சம்பாதிச்சு தர்றோம்’னு தைரியம் சொல்றாங்க. பணத்துக்காக இல்லைன்னாலும், என் கணவர் செய்யத் தவறின கடமையை நான் செய்ஞ்சு புள்ளைங்களை கரையேத்தணும் இல்லையா...


காரைக்கால்

என்கதை இருக்கட்டும், என்னைவிடச் சின்ன வயசு பொண்ணுங்க எல்லாம் தாலிய அறுத்துக்கிட்டு நிக்கிறாங்க. மதுக்கடை மூணு மைல் அப்பால இருந்தபோதே இவ்வளவு கொடுமையை அனுபவிக்கிறோம். அதைத் தெருமுனையிலேயே கொண்டுவந்து வச்சா என்னாகும்னு நினைச்சுப்பாருங்க. இப்பவே படிக்கிற வயசுல இருக்கிற புள்ளைங்களை படிக்க வைக்க முடியாததால, வேலைக்குப் போற அவங்க கெட்ட சகவாசத்தால் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

கண்முன்னாடி புருஷனை இழந்த நாங்க புள்ளக்குட்டிகளையும் இழந்துட்டு தவிக்கணுமா சொல்லுங்க... ராத்திரியோட ராத்தியா உங்க தெருல மதுக்கடையை திறந்திடுவாங்கனு சொன்னதால பகலெல்லாம் உழைச்சி, களைச்சி வர்ற நாங்க ராத்திரியில குழந்தைங்களோட ரோட்டுல படுத்துகிடக்கிறோம். மக்கள வாழவைக்கிறதுக்கு அரசா, இல்லாட்டி சாகவைக்கிறதுக்கு அரசானு தெரியல” என்ற வேதனையுடன் முடித்தார்.

மணிமேகலை

அந்த ஊர் மாதர்சங்கத் தலைவி மணிமேகலையிடம் பேசினோம். “ஏதோ வீடுகட்ட பூமி பூஜை போடுறாங்கனு நினைச்சோம், அதுல ஒயின்ஷாப் கடை வைக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும் எல்லோரும் கொதிச்சிப்போயிட்டோம். அதுவும் எங்க ஊர் எம்.எல்.ஏவோட கடை அது. புதுசா வரப்போற மதுக்கடைக்குப் பக்கத்துலதான் ஆதிமாரியம்மன் கோயில் இருக்கு. எங்க ஊர்ல எந்த நிகழ்ச்சினாலும் கோயில்ல வைச்சு வரிசை எடுத்துட்டு மாதா தேர்பவனி வீதி சுத்தி வரும். அப்படி ஒரு தெரு நடுவுல ஒயின்ஷாப் கொண்டுவந்தா எப்படி... காரைக்கால் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம், என் கையில் எதுவுமில்ல போராடுங்கன்னு சொல்றார். பாண்டிச்சேரி போய் கலால்துறை கமிஷனர்கிட்ட கொடுத்தோம், இது காரைக்கால் நிர்வாகம் தீர்க்கவேண்டிய பிரச்னைன்னு சொல்றார். என்ன செய்யறதுன்னு தெரியல 20 நாளா போராடுறோம்.

ஒருதெருவுல 82 பொம்பளைங்க விதவையா இருக்கிறது அவமானமா இருக்கு. இன்னும் எத்தனைத் தாலியை அறுக்கப்போறாங்க... விதவை பென்ஷன் 1000 ரூபாய். மூணுவீட்டுல வேலைசெஞ்சா ரூ.1500, இதை வைச்சிதான் புள்ளைங்கள வளர்க்கணும், குடும்பத்த காப்பாத்தணும், வைத்தியம் பண்ணிக்கணும் இங்குள்ள பொம்பளைங்க எவ்வளவு கஷ்டப்படுறோம்ன்னு அதிகாரிகளுக்குத் தெரியுமா... அடியாட்களோடு, மஃப்டில போலீசும் சேர்ந்துவந்து மிரட்டுறாங்க. அவங்க இடத்துல, அவங்க கடைவைக்கிறத தடுக்கிறதுக்கு நீங்க யாருன்னு போலீஸ் அதிகாரியே கேட்கிறார். குடியால அழிஞ்சவங்க குடும்பம் படுகிற வேதனையைபார்த்தும் இன்னும் திருந்தாம பலபேர் குடியால கை, கால் செயலிழந்து கிடக்கிறாங்க. ஒவ்வொருநாளும், ஒவ்வொரு வீட்டிலும் சண்டைதான். ஒருகட்டத்துல இனிநாங்களும் குடிக்கிறோம், எங்களுக்கும் வாங்கித்தாங்கன்னு கேட்டோம். ‘அப்படியா, ரொம்ப சந்தோஷம் வா ஜாலியா சேர்ந்து கம்பெனியா குடிக்கலாம்’னு வெட்கமில்லாம சொல்றாங்க. நாங்க என்னதான் பண்றது.

இந்த தெருமுனையில ஒயின்ஷாப் கடைதிறந்தா ஒட்டுமொத்தமா நாங்க அழியவேண்டியதுதான். இத்தனைக்கும் கீதாஆனந்தன் எம்.எல்.ஏ. கணவரை இழந்தவர்தான். ஒரு பொம்பளைக்குதான் தெரியும், இன்னொரு பொம்பளையோட கஷ்டம்னு சொல்வாங்க, எங்களோட கஷ்டம் ஏன் அவங்களுக்கு தெரியமாட்டேங்குது...” என்றார் ஆதங்கத்துடன்.

எம்.எல்.ஏ

ஒயின்ஷாப் உரிமையாளரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான கீதாஆனந்தனிடம் மாதாகோயில்தெரு பெண்களின் பிரச்னை குறித்துப் பேசினோம். “தொகுதி மக்களுக்கு இடையூரா நான் எதுவும் செய்யமாட்டேன். அந்தஊர் மெயின்ரோட்டில் எனக்குச் சொந்தமான இடத்தில் ஒயின்ஷாப் வைக்கக் கட்டடம் கட்டினேன். அதற்கு அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கலெக்டர் முதல் இன்ஸ்பெக்டர் வரை யார் சொல்லியும் கேட்கல. அவங்களுக்கு ஒருநபர் பணஉதவிசெய்து போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார். அதுவும் எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களுக்கு ஒரு உறுதிமொழியை நான் தருகிறேன். மேலையூரில் மக்கள் எதிர்க்கும் இடத்தில் டாஸ்மாக் அமைக்கமாட்டேன். வேறு ஒரு ஊரில் அமைப்பதற்கு 10 தினங்களுக்கு முன்பே மனுகொடுத்துவிட்டேன். என்னை நல்லவள்னு அந்தஊர்மக்கள் புரிஞ்சிப்பாங்க. கண்டிப்பா காலம் பதில்சொல்லும். அந்த ஊருக்கு சிமென்ட் ரோடு, லைட்ன்னு எல்லா வசதியும் நான்தான் செஞ்சிகொடுத்தேன். இப்பவும் 48 லட்சத்தில சமுதாயக்கூடம் கட்ட நிதி ஒதுக்கியிருக்கேன். இந்த சயமத்துல நான்போய் அடிக்கல்நாட்டினா ஒயின்ஷாப் கொண்டுவருவதற்காகத்தான் இதை செய்யுறேன்னு தப்பா நினைப்பாங்க. நிச்சயமா அந்த ஊரில் மதுக்கடை வராது, அந்த மக்கள் நம்பமறுக்கிறாங்க, என் சார்பில் நீங்களாவது சொல்லுங்கள்” என்று முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்