வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (23/05/2017)

கடைசி தொடர்பு:14:38 (23/05/2017)

பன்னீர்செல்வத்தை மிஞ்சிய தம்பிதுரை! - டெல்லி தொடர் சந்திப்புகளின் பின்னணி #VikatanExclusive

பன்னீர்செல்வம்

பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்துப் பேசவிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 'தற்போது தமிழக அமைச்சர்களும் முதலமைச்சரும் தங்கள் ஆதரவைக் காட்டுவதற்காக அடிக்கடி டெல்லிக்குப் பறக்கின்றனர். மோடியிடம் விசுவாசத்தைக் காட்டுவதில்தான் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் உச்சகட்டமாக மோதிக் கொண்டிருக்கின்றன. இரண்டு அணிகளுக்குள்ளும் இருக்கும் ஒரே ஒற்றுமை, பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு மட்டும்தான். இதற்கு நேர்மாறாக மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறது சசிகலா அணி. அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர்களும் வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கிவிட்டனர். 'மாநில அரசை மிரட்டிப் பணிய வைக்க பா.ஜ.க முயல்கிறது' என எதிர்க்கட்சிகள் பேசினால், 'ஆமாம். உண்மைதான். முதல்வரால் இதுபற்றி வெளிப்படையாகப் பேச முடியாது. அவர்களுக்கு எவ்வளவோ நிர்பந்தங்கள் இருக்கின்றன. நாங்கள் பேசுவோம்' என அதிர வைக்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். உச்சகட்டமாக, 'பா.ஜ.க ஒரு பேய். பேயைப் பார்த்தால் அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள்' எனக் கொந்தளித்தார் ஆவடிகுமார். பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் விசுவாசத்தைக் காட்டும்போது, 'இவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்பதுபோல, சசிகலா அணி கொந்தளிப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். இவர்களின் சீற்றத்துக்கு பா.ஜ.க நிர்வாகிகளால் பதில் சொல்ல முடியவில்லை. "பா.ஜ.க அரசை விமர்சித்துப் பேசும் அரசியல் கட்சி பிரமுகர்கள், 'குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.கவின் ஒட்டுமொத்த வாக்குகளையும் பெறுவதற்குத்தான் பா.ஜ.க அரசு மிரட்டிப் பணிய வைக்கிறது' என்கின்றனர். சொல்லப் போனால், உத்தரபிரதேச தேர்தலுக்குப் பிறகு, அதற்கான அவசியமே பா.ஜ.கவுக்கு இல்லாமல் போய்விட்டது. அ.தி.மு.கவிலிருந்து கிடைக்கும் வாக்குகள் என்பது கூடுதல் லாபம் அவ்வளவுதான். மோடியைப் பொறுத்தவரையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் திட்டங்களைத் தீட்டி வருகிறார்" என விவரித்த பா.ஜ.கவின் முக்கிய பிரமுகர் ஒருவர், 

தம்பிதுரை"அகில இந்திய அளவில் பா.ஜ.க வசம் 48 சதவீத வாக்குகள் இருக்கின்றன. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு 2.8 சதவீதமும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டிக்கு 1.6 சதவீத வாக்குகளும் இருக்கின்றன. இவர்கள் பா.ஜ.க நிறுத்தும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பாளர்கள். தமிழ்நாட்டில் ஒன்றுபட்ட அ.தி.மு.கவுக்கு 5.3 சதவீத வாக்குகள் உள்ளன. இதில், எடப்பாடி பழனிசாமி அணிக்கு மட்டும் 4.5 சதவீத வாக்குகள் உள்ளன. பன்னீர்செல்வத்துக்கு 0.8 சதவீத வாக்குகளும் உள்ளன. அ.தி.மு.கவின் ஆதரவு இல்லையென்றாலும், பா.ஜ.க நிறுத்தும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். இந்தக் கணக்குகளை அறிந்துதான், தம்பிதுரை முன்கூட்டியே பிரதமரைச் சந்திக்கத் தூது அனுப்பினார். அமைச்சர் தங்கமணி பிரதமரைச் சந்தித்தபோதும், 'குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்' என ஆதரவை உறுதி செய்துவிட்டார்.

இந்தச் சந்திப்பினால் கூடுதல் அதிர்ச்சியடைந்தது பன்னீர்செல்வம்தான். அவர் பிரதமரைச் சந்தித்தபோதும், 'என்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்கள்' எனத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில், அ.தி.மு.கவின் சின்னத்தை மீட்பது குறித்தோ, எடப்பாடி பழனிசாமி அணிக்கு செக் வைப்பது குறித்தோ எந்த வாக்குறுதியையும் பிரதமர் அளிக்கவில்லை. சென்னை திரும்பிய பிறகு, எடப்பாடி பழனிசாமி அணியைவிடக் கூடுதல் விசுவாசத்தைக் காட்ட நினைத்து, 'உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி' என ட்வீட் போட்டு, அதை டெலிட் செய்தார் பன்னீர்செல்வம். தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி அணி மிகுந்த பலத்தோடு இருக்கிறது. கடந்த சில நாள்களாக, 'குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வேறு முடிவு எடுப்பார்கள்' என்றரீதியில் தகவல் பரவுகிறது. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதனால் பா.ஜ.கவுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை. அவர்களின் சொற்ப வாக்குகளை நம்பியும் பா.ஜ.க இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்குகளில் மூழ்கியிருக்கிறார் பிரதமர் மோடி" என்றார் விரிவாக. 

"தமிழ்நாட்டில் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே இல்லாமல் போகுமளவுக்கான வேலைகள் வேகமெடுத்துள்ளன. இந்த அபாயத்தை உணர்ந்துதான், அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது சசிகலா குடும்பம். இதுகுறித்து போயஸ் கார்டனில் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் இளவரசி மகன் விவேக். 'பொதுமக்களிடமிருந்து நமக்குக் கிடைக்கும் ஆதரவைக் கைவிட்டுவிடக் கூடாது. அரசியல் சூழல்களுக்கு ஏற்ப பேசுங்கள். உங்கள் யாருக்கும் எந்தவிதத் தடையும் இல்லை' என உறுதியாகக் கூறிவிட்டார். எனவேதான், முன்பைவிட அதிகமாக வால்யூமைக் கூட்டியிருக்கிறார்கள் அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர்கள். இவர்களைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் மௌனமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது குரலாக நேற்று பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், ' சசிகலாவை  சிறையில் சென்று சந்திப்பது அமைச்சர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்கள் ஏன் சென்று சந்திக்கிறார்கள் என்று நாங்கள் கேள்வி கேட்க முடியாது' என அதிர வைத்தார். இதைத்தான், 'கபட நாடகம்' எனப் பன்னீர்செல்வம் விமர்சித்தாலும், 'டெல்லியின் கருணைப் பார்வை எடப்பாடி பழனிசாமி பக்கம் விழுந்துவிட்டது' எனக் கொங்கு மண்டல கேபினட் நம்புகிறது. இந்தச் சூழ்நிலையை எப்படிக் கடப்பது என வழிதெரியாமல் திணறி வருகிறார் பன்னீர்செல்வம்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

பிரதமராக இருந்தாலும் நிதி அமைச்சராக இருந்தாலும் தன்னை நோக்கி வருவதைத்தான் ஜெயலலிதா விரும்பினார். அவராகத் தேடிச் சென்று பார்த்த நிகழ்வுகள் அரிதிலும் அரிது. சட்டசபைத் தேர்தலில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று இன்றோடு ஓராண்டு காலத்தை நிறைவு செய்துவிட்டது தமிழக அரசு. 'இந்த ஓராண்டு காலமும் மக்களை பதற்றப் பரபரப்பிலேயே வைத்திருந்தது மட்டும்தான் இந்த அரசின் இமாலய சாதனை' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


டிரெண்டிங் @ விகடன்