“நாங்கள்தான் மாற்று... எங்கள் வேகம் விரைவில் புரியும்!” - தமிழக ஆம் ஆத்மி | We are the Alternatives: TN Aam aadmi unit leader

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (23/05/2017)

கடைசி தொடர்பு:15:54 (25/05/2017)

“நாங்கள்தான் மாற்று... எங்கள் வேகம் விரைவில் புரியும்!” - தமிழக ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி வசீகரன்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2 கோடி ரூபாய் பணத்தை மந்திரி ஒருவரிடமிருந்து முறைகேடாக பெற்றதாகவும், வாகனங்களில் பொருத்தப்படும் உயர் பாதுகாப்புகொண்ட (டிஜிட்டல்) நம்பர் பிளேட் ஒப்பந்தத்தில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம் சொல்லி திடுக்கிட வைத்திருக்கிறார், டெல்லி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா. 'ஊழலில்லா இந்தியாவைப் படைப்போம்' என்ற முழக்கத்தோடு டெல்லியின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, தற்போது ஊழலில் சிக்கிக்கிடக்கிறதா? தொடுக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? தமிழக அரசியல் சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் பங்கு என்ன? போன்ற கேள்விகளோடு தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரனிடம் பேசினோம்.

''டெல்லி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சி மீதும் கெஜ்ரிவால் மீதும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துவருகிறாரே?''

''கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே எங்களுடன் பயணித்தவர் அவர். எனது நண்பர். தமிழகத்தின் பல பிரச்னைகள் பற்றி நாங்கள் இருவரும் விவாதித்திருக்கிறோம். கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக இருந்தவர். அடிப்படையில், அவரது அம்மா பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர். துணை மேயராக இருந்திருக்கிறார். ஆனால், கபில் மிஸ்ரா துளியும் பி.ஜே.பி சார்பு இல்லாமல் இருந்ததால்தான் ஆம் ஆத்மி கட்சியில் மிக முக்கிய இடத்துக்கு அவரால் வர முடிந்தது. அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இவர் ஏன் இப்படியெல்லாம் குற்றம் சாட்ட வேண்டும் என்று எங்களுக்குக் குழப்பமாக இருக்கிறது. 'கபில் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், என்னை அழிக்க நினைக்கும் பி.ஜே.பி, என்னைச் சிறையில் தள்ளியிருக்கும்' என்றார் கெஜ்ரிவால். எனவே அது பொய்யான குற்றச்சாட்டுகள்.''

''எம்.எல்.ஏ-க்கள் கைது, கருத்து மோதல்கள், சி.பி.ஐ தலையீடு, தற்போது ஊழல் குற்றச்சாட்டு... என்னதான் நடக்கிறது டெல்லி ஆட்சி அதிகாரத்தில்?''

''மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு, எங்களைத் திட்டமிட்டு அழிக்க நினைக்கிறது. தனக்கு நிகரான ஒரு எதிரியாக மோடி கருதுவது ராகுலையோ, சோனியாவையோ அல்ல; கெஜ்ரிவாலைத்தான். அதன் வெளிப்பாடாகத்தான் எங்களை வளரவிடாமல் இதுபோன்ற நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். 'பஞ்சாபிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுவிட்டால், நாடு முழுவதும் இவர்கள் வளர்ந்துவிடுவார்களோ...?' என்ற அச்சம் பி.ஜே.பி-யினரிடம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. கெஜ்ரிவாலுக்கு மோடி தொந்தரவு கொடுக்கிறார் என்று மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது. மத்தியில், ஆளுகிற ஒரு கட்சி, மாநில கட்சிகளின் மீது அதிகாரங்களைச் செலுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்பும். புதுச்சேரியில் என்ன நடக்கிறது பாருங்கள்? அதே போன்றதொரு நெருக்கடியைத்தான் தாங்கள் ஆளாத மாநிலங்களின் மீது பி.ஜே.பி திணித்துக்கொண்டிருக்கிறது.''

''பி.ஜே.பி கொடுக்கும் நெருக்கடிகளை மக்கள் உணர்கிறார்கள்; அவர்கள் எங்கள் பக்கம்தான் -என்று சொல்லும் உங்களால், டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையே…?''

மோடி

''டெல்லி துணை முதல்வர் மணிஸ் சிசோடியா சொன்னதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. தேர்தல் முடிவு வந்தவுடன் மக்களைப் பார்த்து, 'நாங்கள் உங்களுக்கு நல்லதுதானே செய்தோம். ஏன் எங்களைத் தோற்கடித்தீர்கள்?' என்றார். நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத தோல்வி அது. டெல்லி மாநகராட்சியைப் பொறுத்தவரை சுமார் 10 வருடங்களாக பி.ஜே.பி-தான் அந்த இடத்தில் அமர்ந்திருந்தது. நிர்வாக சீர்கேடுகள், நாங்கள் முன்னெடுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுதல் என டெல்லி மாநகராட்சி, தனக்கென ஒரு மக்கள் விரோத முகத்தை உருவாக்கி வைத்திருந்தது. அவர்களை அகற்ற, மக்கள் முடிவெடுத்திருந்தனர். இறுதியாக, வாக்கு எந்திரத்தில் குழப்பம் செய்து முறைகேடான வெற்றியை தனதாக்கிக்கொண்டனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.''

 ''வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்யமுடியாது என்று தேர்தல் கமிஷன் ஓப்பன் சேலஞ்ச் விடுத்திருக்கிறதே…?''

''தேர்தல் கமிஷனின் கடமை என்னவென்றால், இப்படி ஒரு தவறு நடக்கிறது என்று ஓர் அரசியல் கட்சி சொல்லும்போது, அதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஒரு தவறு நடந்ததா, இல்லையா என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு சவால் விடுக்கக்கூடாது. நீங்கள் யார்... சவால் விட? மக்கள் பணிக்காகத்தானே நீங்களும் இருக்கிறீர்கள். இது ஒரு தவறான முன்னுதாரணம். இந்தத் தவறை தேர்தல் கமிஷன் செய்திருக்கக் கூடாது என்றுதான் நான் சொல்லுவேன்.''

''தவறு நடக்கிறது என்று சொல்பவர்களிடம், 'தவறை நிரூபித்துக் காட்டுங்கள்' என சொல்வதில் என்ன தவறு இருக்கப்போகிறது?''

''எங்கள் கட்சியைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் வாக்கு எந்திரத்தை ஹேக் செய்து காட்டினார். வாக்கு ஏந்திரத்தில், நாம் எந்தப் பட்டனை அழுத்தினாலும் ஒரே கட்சிக்கு வாக்குகள் பதிவாகும்படி எந்திரச் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். இதற்காக நாங்கள் டெல்லியில் சிறப்பு சட்டசபையைக் கூட்டி, அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் இதைச் செய்து காண்பித்தார் பரத்வாஜ். இது தேர்தல் கமிஷனுக்கு அவமானமாக இருந்ததால்தான் இந்த ஓபன் சேலஞ்ச் கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு நிரூபிக்கத்தானே வேண்டும்... நாங்கள் தயார். நிரூபிப்போம். அப்போது தேர்தல் கமிஷன் என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்.''

''விரைவில் தமிழ்நாட்டில், பி.ஜே.பி ஆட்சி அமையும் என்கிறார்களே தமிழக பாஜக நிர்வாகிகள்?''

''கனவில்கூட அப்படி நடக்காது. தமிழக மக்கள் என்றுமே பி.ஜே.பி-யை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமாகயிருக்கும் காவிரி நதி நீர் விவகாரத்தில், மிகப்பெரிய முட்டுக்கட்டை போடுவது பி.ஜே.பி அரசுதான். 'எப்படியும் தமிழகத்தில் நாம் ஆட்சியைப் பிடிக்க முடியாது' என்று தெரிந்துதான் தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல், கர்நாடகா அரசியலில் ஆர்வம் செலுத்திவருகிறார்கள். கர்நாடகா அவர்களுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், ஒருபோதும் தமிழகத்தில், அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளிடம், மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள். அதைச் செய்தார் இதைச் செய்தார் என்பார்கள். அழுத்திக்கேளுங்கள். ஒருவருக்கும் பதில் தெரியாது.''

''தமிழத்தில் நிலவும் அரசியல் நிலையற்றத் தன்மையை ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்திக்கொள்ளாமல், மெளனம் காப்பது ஏன்?''

''நாங்கள் மெளனமாக இல்லை. தமிழகத்தின் முகங்களாக இருக்கும் பல பிரச்னைகளைக் கவனமாக அணுகி அதன் வீரியத்தை உணர்கிறோம். காவிரி, முல்லைப் பெரியார், மீத்தேன், தமிழக மீனவர்கள் பிரச்னை போன்ற பல பிரச்னைகளை முன்வைத்தே இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தில், தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அது போன்ற பிரச்னைகளைப் பேசி எங்களைத் தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஊழலற்ற மக்கள் நலன் சார்ந்த ஓர் அரசை, தமிழகத்தில் கட்டமைக்கவே நாங்கள் விரும்புகிறோம்... அவ்வளவுதான். அதற்கான காலச் சூழல் அமையும்போது எங்கள் வேகம் புரியும்.''

''ரஜினி அரசியலுக்கு வந்தால், ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?''

''இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் பணம் கட்டித் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், 'மக்களுக்கு என்ன செய்ய இருக்கிறார் ரஜினி?' என்பதுதான் முக்கியம். ஊழலில்லா தமிழகத்தை ரஜினி விரும்பினால், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். ரஜினியை விட நடிகர் கமலை எனக்கு நன்றாகத் தெரியும். இருவரும் நிறைய பேசுவோம். தமிழக மக்களின் எண்ணங்களையும், பிரச்னைகளையும் உணர்வு பூர்வமாக புரிந்துகொள்ளக் கூடிய ஒரு மனிதர் கமல். அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை கமலுக்கு இருக்கிறது. வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. அது அவரது விருப்பம்.''


டிரெண்டிங் @ விகடன்